முத்தலாக் முறையில் விவாகரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா கடந்த வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க, இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர்.
காங்கிரஸ், அ.தி.மு.க., சமாஜ்வாடி போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்று இந்தக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதா பெண்களின் உரிமைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள அரசு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கேட்பதற்குத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.
முத்தலாக் மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மூன்று முறை தலாக் என்ற சொல்லை உச்சரிப்பதன் மூலம் முஸ்லிம் ஆண்கள் தங்கள் மனைவியை விவகாரத்து செய்ய வழி வகுக்கும் முத்தலாக் முறை, கடந்த சில ஆண்டுகளாக பலவிதமான சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்துவந்தது.
2017ஆம் ஆண்டு டிசம்பரில் முத்தலாக் முறையை சட்டவிரோதமானதாக்குவதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இதற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் போன்ற அமைப்புகள், முஸ்லிம் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளன.
முஸ்லிம்கள் விவாகரத்து செய்ய கடைப்பிடிக்கும் முத்தலாக் நடைமுறை, அரசியல் சட்ட விரோதமானது என்று 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli