விவசாயி-குரங்கு மோதல் : கிராமப்புறங்களில் அதிகரிக்கும் சகவாழ்வு போராட்டம்

0 355

கலாவர்ஷ்னி கனகரட்ணம்

இலங்கையின் கிராமப்புற நிலப்பரப்புகள், அவற்றின் விவசாய வளத்திற்காக பெயர் பெற்றவை. எனினும், விவசாயிகளுக்கும் குரங்குகளுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இப்போது ஒரு அழுத்தமான சவாலை எதிர்கொள்கின்றன.

கிராமப்புறங்களை பொறுத்தவரை, பல தசாப்தங்களாக உணவு மற்றும் வருமான ஆதாரங்களாக காய்கறிகள், கீரைகள், கிழங்குகள் போன்ற பயிர்களையே நம்பியுள்ளன. இருப்பினும், குரங்குகளால் அதிகரித்து வரும் விவசாய அழிவானது, அம்மக்களுக்கு உயிர்வாழ்வதற்கான போராட்டமாக மாற்றியுள்ளது.

வாழ்விட அழிப்பு மற்றும் காடுகளில் உணவு பற்றாக்குறையால் மனித குடியிருப்புகளை நோக்கி குரங்குகள் படையெடுத்துள்ளன. இவை பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். விவசாயத்தை நம்பி வாழும் விளிம்புநிலை சமூகங்களே இதில் அதிகம் பாதிக்கப்படுகின்றன. பல குடும்பங்கள், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியுடன் போராடி வருகின்ற நிலையில், இப்போது பயிர் அழிவால் கூடுதல் நிதி இழப்புகளை எதிர்கொள்கின்றனர். இந்த இரட்டைச் சுமை அவர்களை மேலும் வறுமையில் தள்ளி, அவர்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை அச்சுறுத்துகிறது.

“குரங்குகள் தமக்கு தேவையான உணவுகளை மட்டும் உண்பதில்லை. அவை உண்ணாத மிளகாய் போன்றவற்றை கடித்து துப்புகின்றன. பாக்குகளை பிடுங்கி நிலத்தில் எரிகின்றன. பப்பாளி பிஞ்சுகளை பறித்து நிலத்தில் சிதறடிக்கின்றன. இவற்றின் அட்டகாசத்தால் எமது வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது” என்கின்றார் பதுளை நேப்பியர் பகுதியைச் சேர்ந்த எம். விஜயநிர்மலா.

தமக்கு தெரிந்த காலம் தொட்டு விவசாயத்தை மாத்திரம் நம்பி வாழ்ந்த்தாக குறிப்பிட்ட விவசாயி என். செல்வரட்ணம், இப்போது முழுக்குடும்பமும் அநாதாரவாகியுள்ளதாக கவலை வெளியிட்டார்.

இந்த விவசாயிகளுக்கு, பயிர்களைப் பாதுகாப்பதே அன்றாடப் போராட்டமாகிவிட்டது. ஆயினும்கூட, இந்த மோதல் வாழ்வாதாரத்தைப் பற்றியது மட்டுமல்ல – இது சுற்றுச்சூழலைப் பற்றியது. சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில், குறிப்பாக விதை பரவல் மற்றும் காடுகளின் மீளுருவாக்கம் ஆகியவற்றில் குரங்குகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு அவற்றின்  உயிர்வாழ்வு அவசியம்.

அவ்வாறாயின், இந்த பிரச்சனைக்கு அத்திவாரமிட்டது மனித செயற்பாடுகளே. காடழிப்பு மற்றும் வாழ்விட ஆக்கிரமிப்பு ஆகியவை வனவிலங்குகளுக்கு சவாலாகி,  அவை மனித சமூகங்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது உள்ளன. இவ்வாறான நெருக்கடியில், மக்கள் மற்றும் வனவிலங்குகளின் தேவைகளை நிலையான வழியில் நிவர்த்தி செய்வதே இப்போது சவாலாக உள்ளது.

குரங்குப் பெருக்கத்திற்கு வாழ்விட அழிப்பு எந்தளவு முக்கியமான காரணமாக அமைகின்றதோ, அந்தளவிற்கு மனிதர்களின் கவனயீனமும் காரணம் என்கின்றார் சூழலியலாளரான பேராசிரியர் ஜகத் குணவர்தன. குரங்குகள் உண்ணக்கூடிய உணவுகளை வெளியில் வைத்தல், குப்பைகளை திறந்துவைத்தல் போன்ற செயற்பாடுகளால் அவை மக்களின் குடியிருப்புகளை சுற்றிக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

சகவாழ்வில் கவனம் செலுத்தும் வகையிலான தீர்வுகளை முன்வைக்க வேண்டிய கட்டாயத்தில் இப்போது உள்ளோம். குறிப்பாக, குரங்குகளுக்கு ஈர்ப்பு குறைவாக உள்ள மாற்றுப் பயிர்களை விவசாயிகள் ஆராயலாம், அதே சமயம் குரங்கு தடுப்பு வேலி போன்ற சமூகத்தால் இயக்கப்படும் திட்டங்கள் உடனடி நிவாரணம் அளிக்கும்.

காடுகளை மறுசீரமைத்தல் மற்றும் வாழ்விட மறுசீரமைப்பு திட்டங்கள் விவசாய நிலங்களில் வனவிலங்குகளின் நம்பிக்கையை குறைக்கலாம். இதற்கு, உள்ளூர் சமூகங்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள், புரிந்துணர்வையும் ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு இன்றியமையாதவை.

சார்மலி ஏ.டி. நாகலகே மற்றும் மைக்கல் ஏ ஹஃப்மேன் ஆகியோர் ஒன்பது மாகாணங்களிலும் முன்னெடுத்த ஒரு ஆய்வில், அண்மைய வருடங்களில் குரங்குகள் விவசாயப் பயிர்களை நாசமாக்குகின்றமை தொடர்பாக குறிப்பிட்டுள்ளனர். இவற்றிலிருந்து தமது பயிர்களை பாதுகாப்பதற்காக, சுமார் 31 வீதமானோர் பட்டாசுகளை பயன்படுத்துவதாகவும், 22 வீதமானோர் பாரிய ஒலிகளை எழுப்பி அவற்றை துரத்துவதாகவும், 19 வீதமானோர் அவற்றை பிடித்தல் அல்லது சுடுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும், வனவிலங்குகளின் உயிர்வாழ்வை உறுதி செய்வதும் ஒன்றுக்கொன்று முரணான குறிக்கோள்கள் அல்ல. புதுமையான அணுகுமுறைகள் மற்றும் கூட்டு முயற்சியுடன், இலங்கை தனது மக்கள் மற்றும் அதன் இயற்கை பாரம்பரியத்தை மதிக்கும் தீர்வுகளைக் கண்டறிய முடியும். இது கிராமப்புற பிரச்சினை மட்டுமல்ல, சகவாழ்விற்கான தேசிய அழைப்பு. – Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.