கடந்த சனிக்கிழமை இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் குறைந்தது நான்கு கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புலனாய்வுத் தகவலினையடுத்து இந்திய இராணுவத்தினர் புல்வாமா மாவட்டத்தின் ஹாஜின் பயீன் கிராமத்தில் தேடுதலை ஆரம்பித்தபோதே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.
கிளர்ச்சிக்காரர்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததையைடுத்து சுமார் நான்கு மணிநேரம் இச்சண்டை நீடித்ததாகவும் பதில் தாக்குதலையடுத்து நான்கு கிளர்ச்சிக்காரர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புத் தரப்புப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மோதல் இடம்பெறுவதாக தகவல் பரவியதையடுத்து சம்பவ இடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று சேர்ந்தனர். அவர்களைக் கலைப்பதற்காக கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன.
2016 ஆம் ஆண்டு பிரபல கிளர்ச்சித் தலைவரான புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் வன்முறைகள் அதிகரித்துள்ளன.
பிரச்சினைக்குரிய ஹிமாலய பிரதேசத்தில் ஆயுத மோதல்கள் காரணமாக இவ்வாண்டு 145 பொதுமக்கள் உட்பட 528 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காஷ்மீரைத் தளமாகக்கொண்ட மனித உரிமைகள் அமைப்பான ஜம்மு மற்றும் காஷ்மீர் சிவில் சமூகக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
2009 ஆம் ஆண்டின் பின்னர் அதிக இரத்தம் சிந்தப்பட்ட ஆண்டாக இவ்வாண்டு காணப்படுகின்றது எனவும் இது இந்தியாவின் பிரதான ஆளும் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் அரசியல் பலவீனம் எனவும் ஜம்மு மற்றும் காஷ்மீர் சிவில் சமூகக் கூட்டமைப்பின் பேச்சாளர் குர்ராம் பர்வேஸ் தெரிவித்தார்.
காஷ்மீரின் பிரிக்கப்பட்ட ஆள்புலப் பிரதேசத்திற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கோரி வருகின்றன. 1989 ஆம் ஆண்டிலிருந்து கிளர்ச்சிக்காரர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பிரதேசம் பாகிஸ்தானுடன் இணைந்திருக்க வேண்டும் அல்லது சுதந்திர தேசமாக இருக்க வேண்டும் என பெரும்பாலான காஷ்மீர் மக்கள் விரும்புகின்றனர்.
கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் வழங்குவதாக இந்தியா குற்றம்சாட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் அதனை மறுத்து வருகின்றது. இந்திய இராணுவத்தினரின் நடவடிக்கை காரணமாக 70,000 பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli