நாட்டில் கடந்த சில வாரங்களாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதையும் அதன் மூலமாக உயிரிழப்போர் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதையும் ஊடக செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இலங்கை பொலிஸ் போக்குவரத்து திணைக்கள தரவுகளின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில், மரணத்தை ஏற்படுத்தக் காரணமான 11,581 வீதி விபத்துகள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இந்த விபத்துகளில் மொத்தமாக 12,140 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 33,259 க்கும் மேற்பட்டோர் நிரந்தரமாக ஊனமுற்றுள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து தலைமையக புள்ளிவிவரங்களின்படி, 2020 முதல் 2024 நவம்பர் 30 வரை, நாட்டில் 117,970 போக்குவரத்து விபத்துகள் நடந்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான 24,589 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்தக் காலகட்டத்தில், சிறு காயங்களை ஏற்படுத்திய 44,440 விபத்துகள் நடந்துள்ளன.
நவம்பர் 30, 2024 வரையான நிலவரப்படி, 515 அரச பேருந்து விபத்துகள் மற்றும் 1,490 தனியார் பேருந்து விபத்துகள் உட்பட 2,005 பொதுப் போக்குவரத்து பேருந்து விபத்துகள் நடந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தக் காலக்கட்டத்தில், அரச பேருந்துகள் விபத்துகளில், 50 உயிரிழப்புகளும் தனியார் பேருந்து விபத்துகளில் 148 உயிரிழப்புகளும் நடந்துள்ளன.
நமது நாட்டில் நோய்கள் மற்றும் முதுமை காரணமாக உயிரிழப்பவர்களுக்கு அடுத்த இடத்தில் வருடந்தோறும் வீதி விபத்துகளினாலேயே அகால மரணங்கள் சம்பவிக்கின்றன. அண்மையில் க்ளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வீதி விபத்துக்களில் தினமும் சராசரியாக 7 பேர் மரணிப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதனால்தான் பெறுமதிமிக்க மக்களின் உயிர்களைப் பாதுகாக்கும் நோக்கில் வீதி விபத்துக்களுக்கு காரணமானவர்களுக்கு எதிரான சட்டங்களை இறுக்கமாக்குவது இந்த திட்டத்தின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எந்தவிதமான எதிர்ப்புகள் வந்த போதிலும் விபத்துக்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை என தற்போது அரசாங்கம் அறிவித்துள்ளது. வீதி விதிகளை மீறுபவர்களைக் கண்டறிய கொழும்பு மாநகரெங்கும் சிசிரிவி கமெராக்கள் மூலம் கண்காணிப்புகள் தீவிரப்பட்டுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சில தினங்களுக்கு முன்னர் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு விதிகளை மீறிய 12 ஆயிரம் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சுகாதார அமைச்சின் மற்றுமொரு தரவுக்கமைய, ஒவ்வொரு வருடமும் 12 ஆயிரம் பேர் இலங்கையில் விபத்துக்களால் மரணிக்கின்றனர். இதற்கமைய ஒவ்வொரு 90 நிமிடங்களிலும் 2 பேர் விபத்துக்கள் மூலம் தமது உயிரைப் பறி கொடுக்கின்றனர். இவ்வாறு உயிரிழப்பவர்களில் அதிகமானோர் 15 முதல் 44 வயதுக்கிடைப்பட்டவர்களாவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
இவ்வாறு உயிரிழப்போர் மற்றும் காயமடைவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக தமது அமைச்சு வருடாந்தம் பாரிய தொகை பணத்தைச் செலவிடவேண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
நாட்டில் பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமையானது வாகனங்கள் வேகமாகப் பயணிக்க வழிசமைத்துள்ளது. பாதைகள் சீராகவுள்ளன என்பது வேகமாகப் பயணிப்பதற்கான அனுமதியல்ல. அதி வேகப் பாதைகள் தவிர, ஏனைய பாதைகளில் 60 கி.மீ. வேகத்திற்கு குறைவாகவே வாகனங்கள் பயணிக்க வேண்டும் என்பது விதியாகும். எனினும் தூரப் பயணங்களில் ஈடுபடும் பஸ் வண்டிகளும் ஏனைய வாகனங்களும் 100 கி.மீ. வேகத்தில் கூட செல்வதை நாம் அவதானிக்கிறோம். போக்குவரத்துப் பொலிசார் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் அவர்கள் கூட இலஞ்சம் பெற்றுக் கொண்டு இவ்வாறான சாரதிகள் தொடர்ந்தும் இதே தவறை இழைப்பதற்கு அனுமதிக்கின்றனர்.
வீதி சட்ட ஒழுங்குகளை மீறுதல், மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களுடன் வண்டியோட்டுவோர், உரிய அனுமதி இல்லாமல் வாகனத்தில் பொதுமக்களை ஏற்றுதல், தான்தோன்றித் தனமான வேகம் போன்ற பாரிய குற்றங்கள் பேரம் பேசிப் பெறப்படும் இலஞ்சங்களால் நியாயப்படும் நிலையினையும் அவர்கள் தண்டனைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதனையும் காண்கின்றோம். இப்பாரிய கொடிய குற்றங்களைப் புரிவோர் யாராக இருந்தாலும் சட்டத்தின் தண்டனைகளில் இருந்து தப்பிக்கக் கூடாது.
அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் இது விடயத்தில் கடுமையாக இருக்க வேண்டும். இல்லாது போனால் இவ்வாறான விபத்துக்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்
நாட்டின் அபிவிருத்தியில் வீதிச் சட்ட அமுலாக்கம், சட்டத்தின் முன் எவரும் சமன், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத காவல்துறைகள் என்பன அடிப்படையானவைகளாகும். அவையே இன்றைய காலத்தின் தேவைகள்.
இவ்வகையான பரிதாப விபத்துக்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டுமானால், இதனோடு சமன், இலஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத காவல்துறைகள் என்பன அடிப்படையானவைகளாகும். அவையே இன்றைய காலத்தின் தேவைகள்.
இவ்வகையான பரிதாப விபத்துக்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டுமானால், இதனோடு சம்பந்தப்பட்ட சகலரதும் கூட்டிணைந்த ஒத்துழைப்புக்கள் அத்தியவசியமாகும். சாரதி, சக பயணிகள், வீதி பாதுகாப்பு காவல்துறை, பொது மக்கள், அரச சட்டம், அதனை அமுல்படுத்தும் அதிகாரிகள் அனைவரும் தம் பங்களிப்பினை சரியாக செய்வதன் மூலமே இது சாத்தியமாகும்.- Vidivelli