புத்தளம் அப்துல்லாஹ் ஹஸரத் அனைவருக்கும் முன்மாதிரிமிக்கவர்

0 8

புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் (அப்துல்லாஹ் ஹஸரத்) அவர்களின் மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்திலும் குறிப்பாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் தலைமைத்துவத்திலும் நிரப்ப முடியாத இடைவெளியைத் தோற்றுவித்துள்ளது.

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள், புத்தளம் நகரில் கல்விக்கு ஒளி கொடுத்த நாடறிந்த மூத்த உலமா மஹ்மூத் ஹஸரத் அவர்களின் புதல்வராவார்.

அப்துல்லாஹ் ஹஸரத் அவர்கள் காஸிமிய்யா அரபுக் கல்லூரியின் அதிபராக இருந்த சமகாலத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் நகர கிளை மற்றும் புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா ஆகிய இரண்டினதும் தலைமைத்துவத்தை ஏற்று சமூகப்பணியாற்றியுள்ளார். அத்துடன் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மத்திய மஜ்லிஸுஷ் ஷூரா சபை உறுப்பினரும் அதன் ஆரம்பகால அங்கத்தவருமாவார்.

புத்தளம் பிரதேசத்தில் சமூகப் பணியாற்றுவதற்காக புத்தளம் மக்கள் மன்றத்தை ஸ்தாபித்து அதன் தலைவராகச் செயற்பட்ட அவர் இதனூடாக பல்வேறு சமூக பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.

புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமாத் தலைவராக இருந்தபோது புத்தளம் பெரியபள்ளிவாசல் தலைமைத்துவத்துடன் மிகவும் நெருக்கமான உறவைப் பேணியதுடன் சமூக விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடவும், பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வுகாணவும் கணிசமான பங்களிப்புகளை வழங்கி வந்தார். கடந்த காலங்களில் புத்தளம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளின் போது அவற்றை சுமுகமாகத் தீர்ப்பதில் அவர் வழங்கி நிதானமிக்க தலைமைத்துவம் அனைவருக்கும் முன்மாதிரியானதாகும்.

அதுமாத்திரமன்றி நீண்ட காலமாக புத்தளம் மாவட்ட சர்வ மதக் குழுவின் தலைவராக இருந்து வந்ததுடன், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் ஒரு பாலமாக விளங்கினார். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பெளத்த இனவாத சக்திகளால் பல்வேறு இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்ட போது பெளத்த மத குருக்களுடன் நெருக்கமான உறவைப் பேணியதன் மூலம் புத்தளத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு பாதுகாத்த பெருமை அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களைச் சாரும். அதனால்தான் அவரது ஜனாஸாவிலும் கூட பெளத்த பிக்குகள் கலந்து கொண்டனர். அது மாத்திரமன்றி இன மத நல்லிணக்கத்திற்காக தேசிய ரீதியாக பாடுபடும் பலரும் அவருக்கு இறுதி மரியாதையை செலுத்தி தமது அனுதாபங்களையும் வெளியிட்டனர்.

அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் தலைமைத்துவப் பண்புகள் நிறையப் பெற்றவர். சிறந்த செவிமடுப்பாளர். நிதானமிக்கவர். பொறுமையின் சிகரம். சமூக மேம்பாடுபற்றி என்றென்றும் சிந்திப்பவர். அனைத்து இனத்தினருடனும் நல்லுறவைப் பேணிவந்தவர். எப்போதும் அமைதியான புன்னகையுடன் அனைவரையும் வரவேற்று உபசரிப்பவர்.
சிறந்த ஆளுமை மிக்க உலமாக்களை உருவாக்குவது முதல் சமூகம் சார்ந்த விடயங்களை மார்க்க ரீதியாக கையாளுவதிலும் மர்ஹூம் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஹஸரத் இறுதி வரை தன்னை அர்ப்பணித்து செயற்பட்டார். அன்னாரின் வாழ்க்கை உலமாக்களுக்கு மிகப் பெரும் முன்மாதிரியாகும்.
விடிவெள்ளி பத்திரிகையுடன் நெருங்கிய உறவைப் பேணிய அன்னார் அதன் வளர்ச்சிக்காக எப்போதும் பிரார்த்தித்தவர். இறுதியாக விடிவெள்ளியின் 15 ஆவது வருட பூர்த்தியின்போது அவர் எமக்கு அனுப்பி வைத்த செய்தியில் ‘‘தமிழ் பேசும் முஸ்லிம் சமுகத்துக்கு விடிவெள்ளியாய் தோன்றிய எமது விடிவெள்ளிப் பத்திரிகை விடிவெள்ளி போலவே உலகம் உள்ள வரை மின்னி மினுங்கி வழிகாட்ட வல்ல அல்லாஹ்வின் அருள் வேண்டியும், இப்பத்திரிகைக்கான அனைத்து உழைப்பாளிகளும் ஈருலகிலும் ஜயம் பெறவும் வல்ல அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்கின்றேன்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் அரவணைத்து வாழ்ந்த அன்னாரின் மறைவு எந்தவகையிலும் ஈடுசெய்ய முடியாததாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மேலான சுவனபதியை அருள்வானாக என இந்த சந்தர்ப்பத்தில் பிரார்த்திப்போமாக.

Leave A Reply

Your email address will not be published.