சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்கவும்
வெளிவிவகார அமைச்சரிடம் சவூதி தூதுவர் கோரிக்கை
சவூதி அரேபியாவின் நிதியுதவியில் அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது.
இதன்போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அண்மையில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போதும் நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தை கூடிய விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சவூதிக்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளை சார்ந்த ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கைச்சாத்திடுவது குறித்தும் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு, துறைசார் நிபுணத்துவம் கொண்ட பணியாளர்களை சவூதிக்கு உள்வாங்குதல் மற்றும் இருதரப்பு தொழில்துறை வளர்ச்சி போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.- Vidivelli