சவூதி அரேபிய ஹஜ் விவகார அமைச்சுடன் பேச்சு : சமய விவகார அமைச்சர் சுனில் செனவி பிரதியமைச்சர் முனீரும் சவூதி பயணம்
(றிப்தி அலி)
ஹஜ் விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தலைமையிலான தூதுக்குழுவினர் நாளை வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவின் ஜித்தா செல்லவுள்ளனர். இந்த தூதுக்குழுவில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.
இந்த தூதுக்குழுவில் ஹஜ் குழுவின் உறுப்பினர்கள் எவரும் உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை என தெரியவருகிறது. எனினும், உம்றாவை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்கு சென்றுள்ள ஹஜ்குழுவின் தலைவர் றியாஸ் மிஹிழார் அவசியம் ஏற்படின் இந்த தூதுக்குழுவில் இணைத்துக்கொள்ளப்படுவார் என பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
இந்த விஜயத்தின் போது சவூதி அரேபியாவின் ஹஜ் விவகார அமைச்சரை இந்த தூதுக்குழுவினர் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதுடன் சவூதி அரேபியாவுடன் ஹஜ் விவகாரம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவுள்ளது.
அதேவேளை, இந்த வருடம் இலங்கை யாத்திரீகர்களுக்கு மேற்கொள்ளவுள்ள ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் சவூதி அரேபியாவின் ஹஜ் பிரதிநிதிகளுடன் இந்தக் குழுவினர் பேச்சு நடத்தவுள்ளனர்.
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வதின் வழிகாட்டலில் ஜித்தாவிலுள்ள பதில் கொன்சியூலர் ஜெனரல் மபூஸா லபீர் தலைமையிலான குழுவினரால் இந்த சந்திப்புக்களுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனிடையே, இக்குழுவினர் சாதாரண வகுப்பு விமானப் பயணச்சீட்டிலேயே சவூதி அரேபியா செல்லவுள்ளதாக ஹஜ் குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்தார். கடந்த வருடம் தூதுக்குழு சென்ற போது அப்போதைய அமைச்சர் விதுர விக்ரமநாயக்க விசேட வகுப்பு விமானப் பயணச்சீட்டில் சென்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியிற்கும் புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிற்கும் இடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பரும் பங்கேற்றிருந்தார். அமைச்சர் ஹினிதும தலைமையிலான குழுவினர் சவூதி அரேபியா செல்லவுள்ள நிலையிலேயே சவூதி தூதுவருடான சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க இந்த விஜயத்தின்போது, ஜித்தாவில் இலங்கை சமூகத்தினரை இந்த குழு சந்திக்கவுள்ளதாகவும் பிரதியமைச்சர் முனீர் முழப்பர் குறிப்பிட்டமை சுட்டிக்காட்டத்தகது.- Vidivelli