(றிப்தி அலி)
புகலிடம் கோரி ஆபத்தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்துள்ள 103 ரோஹிங்ய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது முல்லைத்தீவு விமான படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள இந்த அகதிகள் தொடர்பான சட்ட நடைமுறைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் அனைவரும் மியன்மாருக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால அண்மையில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரே ப்ரென்ச் தெரிவித்தார்.
“சர்வதேச பாதுகாப்பு கோரி மியன்மாரை விட்டு வெளியேறும் மக்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் 2024ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் குறிப்பின் பிரகாரம், அந்நாடு இன்னும் பாதுகாப்பு அற்றதாக உள்ளது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த அகதிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிடுவதற்கான அனுமதியின் முக்கியத்துவத்தினை ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி வலியுறுத்துகின்றார்.
இந்த அகதிகள் தங்கியுள்ள முகாமிற்கு விஜயம் செய்வதற்கான அனுமதியினை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயமும் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ரோஹிங்யா அகதிகளை நாட்டுக்குள் வரவேற்று அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் வழங்கியமைக்காக இலங்கை அரசாங்கத்திற்கு நன்றிகளை தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் அன்ட்ரே ப்ரென்ச் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் செயற்பாடுகள் கடந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் இலங்கையில் நிறைவடைந்துள்ளது.
இருந்தபோதிலும், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதியின் அலுவலகத்தில் அகதிகளின் விடயங்களை கவனிப்பதற்காக ஒரு அதிகாரி தற்போதும் செயற்பட்டு வருகின்றார். குறித்த ரோஹிங்ய அகதிகள் இலங்கைக்கு வந்தபோது அவர்களுக்கு தேவையாக இருந்த மொழிபெயர்ப்பு உதவியை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தது.
இதேவேளை, குறித்த 103 ரோஹிங்ய அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர்களான ரிசாத் பதியுதீன் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ளனர். அத்துடன், நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் இது விடயமாக பாராளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை இது விடயமாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கடந்த டிசம்பர் 19 ஆம் இலங்கை வந்த இந்த புகலிட கோரிக்கையாளர்களில் 39 ஆண்களும், 27 பெண்களும், 49 சிறுவர்களும் காணப்படுகின்றனர். இதேவேளை, குறித்த அகதிகள் இலங்கைக்கு வந்த படகில் கடமையாற்றிய 12 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (08) புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களும் முல்லைத்தீவு விமானப் படை முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.- Vidivelli