இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து நடாத்திய 2023 ஆம் ஆண்டுக்கான ஊடக அதியுயர் விருது வழங்கும் விழாவில் விடிவெள்ளி பத்திரிகை விருதினை வென்றுள்ளது.
மவுண்ட்லேவுனியா ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற இந் நிகழ்வில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த விவரணக் கட்டுரைக்கான உபாலி விஜேவர்தன சிறப்புச் சான்றிதழ் விருதினை விடிவெள்ளி பத்திரிகையின் சுயாதீன ஊடகவியலாளர் சபீர் மொஹம்மட் பெற்றுக் கொண்டார்.
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து வருடாந்தம் நடாத்தும் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாக்களில் கடந்த காலங்களிலும் விடிவெள்ளி பல விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்த 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் சிறந்த இளம் ஊடகவியலாளருக்கான சிறப்பு சான்றிதழ் விருதை விடிவெள்ளி ஊடகவியலாளர் எஸ்.என்.எம். சுஹைல் (உதவி செய்தி ஆசிரியர்) பெற்றுக் கொண்டார்.
2011 ஆம் ஆண்டு சிறந்த பக்க வடிவமைப்புக்கான சான்றிதழ் விருதும் விடிவெள்ளிக்கு கிடைக்கப் பெற்றது.
அதேபோன்று 2012 ஆம் ஆண்டு சிறந்த பத்தி எழுத்தாளருக்கான விருதை விடிவெள்ளி ஊடகவியலாளர் ஏ.ஆர்.ஏ.பரீல் பெற்றுக் கொண்டார்.
2016 ஆம் ஆண்டு சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான சிறப்புச் சான்றிதழ் விருதும் விடிவெள்ளிக்கு கிடைக்கப் பெற்றது.
2018 ஆம் ஆண்டு சிறந்த பக்க வடிவமைப்புக்கான விருதும் சிறந்த செய்தி இணையத்தளத்திற்கான சிறப்புச் சான்றிதழ் விருதும் விடிவெள்ளிக்கு கிடைக்கப் பெற்றது.
2020 ஆம் ஆண்டுக்கான விசேட நிலைமைகளில் செய்தித் தேடலுக்கான பேராசிரியர் கைலாசபதி நினைவு விருதினை விடிவெள்ளி பத்திரிகையின் சுயாதீன ஊடகவியலாளர் ஏ.எம். றிப்தி அலி பெற்றுக் கொண்டார்.
2020 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகை வடிவமைப்புக்கான சிறப்புச் சான்றிதழ் விருதினை விடிவெள்ளி பத்திரிகையின் பக்க வடிவமைப்பு அணி வென்றது.
2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்தி எழுத்தாளருக்கான பி.ஏ. சிறிவர்தன விருதை விடிவெள்ளியின் சிரேஷ்ட உதவி ஆசிரியர் ஏ.ஆர்.ஏ.பரீல் பெற்றுக் கொண்டார்.
இந் நிலையிலேயே 2023 ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்விலும் விடிவெள்ளி விருதினை வென்றுள்ளது.
2008 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிடட் நிறுவனத்தினரால் இலங்கை முஸ்லிம்களின் முதன்மைக் குரலாக ஆரம்பிக்கப்பட்ட விடிவெள்ளி வார பத்திரிகை கடந்த 16 வருடங்களாக இலங்கை முஸ்லிம்களின் அபிமான பத்திரிகையாக தொடர்ந்தும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli