அகதிகளை திருப்பியனுப்ப அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல
ஜனாதிபதிக்கு முஜிபுர் எம்.பி. கடிதம்
(எம்.வை.எம்.சியாம்)
மியன்மார் அகதிகளை மீளத்திருப்பி அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஏற்புடையதல்ல எனவும் அவர்கள் முகங்கொடுக்கக் கூடிய அச்சுறுத்தல், உயிராபத்து என்பன தொடர்பில் கவனத்திற்கொண்டு அவர்களை இந்த நாட்டில் தற்காலிமாக தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அண்மையில் மியன்மாரில் இருந்து படகில் வந்த அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டு தற்போது முல்லைத்தீவு விமானப்படைத்தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இவர்களை மீண்டும் அவர்களது சொந்த நாட்டுக்கு மீளத்திருப்பி அனுப்புவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் எமக்கு மிகுந்த கவலையளிக்கிறது.
யுத்தத்தின் காரணமாக தமது உயிர்களை காக்கும் நோக்கில் அங்கிருந்து வெளியேறிய 103 பேரில் 40 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பாதுகாப்பான நாட்டில் அரசியல் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதே இவர்களது நோக்கமாகும்.
இந்த அகதிகள் தொடர்பில் மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை திருப்பி அனுப்புவதற்கு உத்தேசித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால தெரிவித்துள்ளதுடன் அவர்களின் பெயர்ப்பட்டியலையும் அரசாங்கம் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த அகதிகளது உயிருக்கு மாத்திரம் அச்சுறுத்தல் ஏற்படவில்லை.அவர்களது உறவினர்களுக்கும் இதேநிலைமையே ஏற்பட்டிருக்கலாம் என நாம் நம்புகிறோம்.
அடைக்கலம் கோரி நாட்டை வந்தடைந்துள்ள இந்த மக்களை, அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அபாயம் உள்ள நாட்டுக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பாதிருத்தல் என்பது சர்வதேச அடிப்படைச்சட்டங்களில் ஒன்றாக உள்ளது. உங்களுடைய ஆட்சியில் புகலிடம் கோரி வந்துள்ள இந்த மக்களை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்புவது சர்வதேச சமூகத்திடம் இருந்து எமது நாட்டுக்கு ஏற்படும் அபகீர்த்தியாகும்.
அதேபோன்று நாட்டில் இனவாதத்தை அடியோடு இல்லாமல் செய்து அனைத்து இன மக்களையும் ஒன்றிணைப்போம் என கொள்கை பிரகடன உரையாற்றிய ஒரே அரச தலைவர் நீங்களே. பல தசாப்தங்களாக பல போராட்டங்களை மேற்கொண்ட உங்களுக்கு அடக்குமுறை தொடர்பில் நன்கு அனுபம் உள்ளது.
எனவே புகலிடம் கோரி இலங்கைக்கு வந்து தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய நாட்டை விடுத்து அவர்களை மியன்மாருக்கு மீளத்திருப்பி அனுப்பும் தீர்மானத்தை அரசாங்கம் மீளப்பெற வேண்டும்.
மேலும் அவர்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அடிப்படை உரிமைகள் பாதுகாத்து அவர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும்.இதற்கு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் மாத்திரம் அல்ல நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும் உங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli