இலங்கையின் வடக்கு முல்லை தீவு கடற்பரப்பில் அகதி அந்தஸ்து கோரி, ஆபத்தான படகுப் பயணம் ஊடாக வருகை தந்த ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம், அதனை தொடர்ந்த நடவடிக்கைகள் என்பன தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றது. 115 பேருடன் வந்த இந்த படகில், 25 சிறுவர்கள் 30 பெண்கள் இருந்தனர். இவர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனையோர் முல்லைத்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்களை மீண்டும் மியன்மாருக்கே திருப்பி அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளமை பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இத்தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையும் இதனையே வலியுறுத்தியுள்ளது.
“பல்வேறு அசாதாரண சூழ் நிலைகளால், தமது சொந்த மண்ணை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடமொன்றினை தேடிக் கொண்டிருப்போரையே நாம் புகலிடக் கோரிக்கையாளர்கள் என விழிக்கின்றோம். அவர்களை அரவணைக்க வேண்டியது மிக அவசியமாகும். அந்த நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும்.
குறிப்பாக புகலிடக் கோரிக்கையாளர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகளாக கருதப்பட மாட்டார்கள்’’ என பிரபல மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்ணான்டோ அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இவர்களின் புகலிடக் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, புகலிட அந்தஸ்து அல்லது அகதி அந்தஸ்து வழங்கும் நாடொன்றுக்கு அவர்கள் செல்லும் வரை அவர்கள் புகலிடக் கோரிக்கையாளர்களாக அந்தந்த நாடுகளில் வசிக்கலாம்.
உண்மையில் இலங்கை இதுவரையில் அகதிகளை அனுசரித்த, அரவணைத்த முறைமை பாராட்டத்தக்கது. குறிப்பாக 2005 ஆம் ஆண்டு UNHCR எனும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்துடனான உடன்படிக்கை பிரகாரம் இலங்கை செயற்படுகின்றது. அது முதல் இலங்கையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் அவர்களுக்கு எதிரான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பெரிதாக பதிவில்லை. எனினும் கடந்த 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஒரேயடியாக 300 புகலிடக் கோரிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டமை மட்டுமே ஒப்பந்தத்தை மீறி இலங்கை செயற்பட்டமைக்கான ஒரே ஒரு சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.
இலங்கை செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் பிரகாரம், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு நாட்டில் தங்கியிருக்க பூரண அனுமதி உள்ளது. திடீரென புகலிடம் கோரி வருபவர்கள், அவர்களுக்கான தங்குமிடத்தை தேடிக்கொள்ளும் வரை இவ்வாறு முகாமில் தடுத்து வைப்பது வழமையாக உள்ளது.
இலங்கையை பொறுத்தவரை, செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது அரசின் பொறுப்பாகாதபோதிலும் இலங்கை ஏற்றுக்கொண்டுள்ள சர்வதேச இணக்கப்பாடுகள், சர்வதேச சம்பிரதாயங்கள் பிரகாரம் அரசு அது தொடர்பில் செயற்பட வேண்டியுள்ளது. அதுமாத்திரமன்றி இதனை மனிதாபிமான அடிப்படையில் நோக்கி செயற்பட வேண்டியதும் அதன் தார்மீக கடமையாகும்.
உண்மையில், பிலிப்பைன் போன்ற ஆசிய நாடுகளை ஒத்த புகலிடக் கோரிக்கையாளர்களை அரவணைக்கும் சட்ட கட்டமைப்பொன்றினை இலங்கை உருவாக்க வேண்டும். மேலும் சர்வதேச அகதிகள் இணக்கப்பாட்டில் இலங்கை கையெழுத்திட வேண்டும். அப்போதே புகலிடக் கோரிக்கையாளர் விடயத்தில் நாம் காத்திரமாக செயற்பட முடியும்.
இலங்கையர்கள் சுமார் ஒரு மில்லியன் பேர் வரை வெளிநாடுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களாகவும், அகதி அந்தஸ்துள்ளவர்களாகவும் வாழும் சூழலில், நாம் உலகளவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் சாதகமான பரிசீலனைகளை முன்னெடுப்பதே மனிதாபிமானமாகும்.
அந்த வகையில் அரசாங்கம் இந்த மியன்மார் ரோஹிங்கிய அகதிகளை உடனடியாக திருப்பி அனுப்புவது பற்றிச் சிந்திக்காது அவர்களது பாதுகாப்பு மற்றும் உயிர்வாழும் உரிமையை கருத்திற் கொண்டு தற்காலிகமாக இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். மேலும் முல்லைத்தீவு முகாமில் அவர்களுக்கான போதிய வசதிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும் மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அகதிகளைப் பார்வையிட அனுமதியளிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம்.– Vidivelli