அறிமுகம்
இணையப்பாவனைக்கு அடிமையாதல் முழு உலகையும் பாதிக்கும் ஒரு பிரச்சினையாகும். இது வயது வித்தியாசமின்றி சிறுவர்களையும் முதியவர்களையும் வெவ்வேறு அளவுகளில் பாதிக்கின்றது. ஆண்களும் பெண்களும் ஏனைய பால்நிலையைச் சார்ந்தவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இன்றைய நிலையில், இணையப் பாவனைக்கு அடிமைப்படுதல் என்பது குடும்பங்கள்தோறும் அனுபவிக்கின்ற ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல குடும்பங்களின் அமைதியை பாதிக்கின்ற விடயமாகவும் மாறியுள்ளது. சிறுவர்களின் நடத்தைகளில் நேரெதிரான மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளுள் அளவு மீறிய இணையப்பாவனையும் அடங்குகின்றது. பல பெற்றோர் தமது பிள்ளைகளின் உளவியல், உடலியல் மாற்றங்களை அவதானித்து வருந்திக் கொண்டிருக்கின்றார்கள். அதீத இணையப் பாவனையால் பிள்ளைகளின் புத்தாக்கத் திறன் பாதிப்படைந்து வருவதை அவர்கள் நாள்தோறும் காண்கின்றனர். எனினும், உளவியல் ஆய்வாளர்கள் சிலர் இதனை ஒரு பிறழ்வு நடத்தையாகக் கருதுவதில்லை. சிறுவர்கள் அதிக நேரம் இணையத்தில் செலவிடுவது, ஒரு பிரச்சினையா என்பது பற்றிய விஞ்ஞான ரீதியான விவாதங்கள் இப்போது அதிக அளவில் வெளிவரத் தொடங்கிவிட்டன. சிறுவர்களைப் பொறுத்தளவில், ஆச்சரியமான இணைய உலகம் எண்ணிலடங்காத வாய்ப்புகளையும் நன்மைகளையும் கொண்டுள்ளது. அதேபோன்று, எண்ணிலடங்காத ஆபத்துக்களையும் கொண்டுள்ளது. இதில் முக்கியமானது இணையப்பாவனைக்கு அடிமையாதலாகும்.
அடிமையாதல் என்றால் என்ன?
சுயகட்டுப்பாட்டினை மீறி டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதையும் அதனால், உள, உடல் மற்றும் சமூக ரீதியில் பாதிப்புக்கள் ஏற்படுவதையும் இணையப் பாவனைக்கு அடிமையாதல் என்கின்றோம். இணையத்திற்கு அடிமையாதல் என்பது பல வடிவங்களில் வெளிப்படும். 1995 ஆம் ஆண்டு அமெரிக்க மனநல மருத்துவரான ஐவன் கோள்ட் பேக் (Ivan Goldberg) இது பற்றி அதிகம் பேசியுள்ளார். இவர் ஒருவரிடம் ஏற்படும் நிர்ப்பந்த சூதாட்ட முனைப்புடன் இதனை தொடர்புபடுத்தி விளக்கியுள்ளார். இணையம் மற்றும் சமூக ஊடகத் தளங்களை பயன்படுத்தும் போது அதிலிருந்து விடுபட முடியாமல் ஒரு விதமான போதை நிலை ஏற்படுவதாக அவர் கருதுகின்றார். ஒருவிதப் போதைநிலையில்தான் இணையப் பாவனையிலிருந்து விலகியிருக்க முடியாத நிலையை ஏற்படுத்துகின்றது. சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் சிந்தனையை இணைய உலகில் பறக்க விடுகின்றது. சமூக ஊடகங்களைப் பற்றிய எண்ணத்தில் மனதை லயித்திருக்கச் செய்கின்றது.
இணையத்தில் நொடிப்பொழுதில் தகவல்களை திரட்டி, பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை பெற்றுக்கொள்ளும் போது அது ஒரு சொகுசான அனுபவமாக உள்ளது. இத்தகைய சொகுசான அனுபவத்தில் மெய்மறந்திருக்கும் போது அடிமையாதல் ஏற்படுகின்றது (Ivan Goldberg,1995). இணையத்திற்கு அடிமையாதல் என்பது அளவுக்கு மிஞ்சிய அல்லது சரியாக கட்டுப்படுத்த முடியாத நடத்தைகளை குறிக்கிறது. இதன் பெறுபேறாக உடல், உள மற்றும் சமூகப் பாதிப்பு அல்லது துன்பம் ஏற்படுகிறது என Martha Shaw and Black (2008) ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
எவ்வாறாயினும், இணையதளத்தில் ஊடாட்டத்தையும் தொடர்பாடலையும் தவிர்க்க முடியாத நிலையில்தான் அடிமைப்படுத்தலுக்கான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. எனவே, ஒருவர் இணையதளத்தை அதிக நேரம் பயன்படுத்துவது ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், அத்தகைய பாவனையை சுய கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாவிட்டால், இணையதளப்பாவனை அதனை பயன்படுத்துவோரை கட்டுப்படுத்தி, அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டால் அதனை பிரச்சினையாக கருத வேண்டும். நேரம் போவதே தெரியாமல் ஏனைய கடமைகளை விட இணையதளத்தை பயன்படுத்துவது முக்கியமானதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிந்தால் அதுவும் பிரச்சினைக்குரிய நிலைப்பாடாகும். சிறுவர்களிடம் இத்தகைய நிலைப்பாட்டை அவதானித்தால் அவர்களுக்கு பெற்றோரின் அல்லது முதியவர்களின் உதவி தேவைப்படுகின்றது எனக் கருதலாம்.
எவ்வாறாயினும், இணையப் பாவனைக்கு அடிமையாதலை உளவியல் ரீதியான பிறழ்வாகக் கொள்ள முடியாது என சில உளவியலாளர்கள் கருதுவதையும் மறுப்பதற்கு இல்லை.
அடிமையாதலின் வகைகள்
இணையத்திற்கு அடிமையாதலைக் கண்டறிவதற்கான அதிகாரபூர்வமாக ஒப்புதல் பெற்ற அளவுகோல்கள் இன்னும் இல்லை, ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கணினி மற்றும் இணைய அடிமைத்தன்மையின் ஐந்து துணைப்பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளனர். இத்தகைய வகைப்பாட்டை அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அடிமையாதல் முகாமைத்துவ மையம் வழங்கியுள்ளது.
இணையப் பாலியல்
இது மிகவும் தெளிவான இணைய அடிமையாதல் வகைகளில் ஒன்றாகும். பல்வேறு வகைகளில் தமது பாலியல் சார் உணர்வுகளை பரிமாறிக்கொள்ளவும் தீர்த்துக் கொள்ளவும் இணையத் தளங்களையும் கருவிகளையும் பயன்படுத்துவதை இது குறிக்கின்றது. பாலியல் உள்ளடக்கங்களைப் பார்த்தல், பாலியல் நடத்தைகளைப் போலச் செய்தல் மற்றும் அவற்றைப் பார்வையிடல், பாலியல் உள்ளடக்கங்களை பரிமாறுதல், பாலியல் அலப்பறைகளில் முகமறியாதோருடன் தொடர்பாடுதல், வெப்கேம் வாயிலாக அந்தரங்க உடற்பாகங்களை காட்டுதல் மற்றும் பார்த்து மகிழ்தல் என்பன இதில் உள்ளடங்குகின்றன.
இதற்காக அதிக நேரத்தை இளவயதினர் செலவிடுவதுண்டு. சுயகட்டுப்பாட்டை மீறி இதில் நேரம் செலவிடும் போது அடிமையாதல் நிலை ஏற்படுகின்றது. சிலர் மெய்நிகர் உலகை தமது படுக்கையறையாக கருதும் போக்கினைக் கொண்டுள்ளனர். நூற்றுக் கணக்கான வலைப்பின்னல் அரட்டையர்கள் இதற்காகவே இணைய உலகில் உலாவி வருகின்றனர். சிலர் முன்னறிமுகமற்றவர்களை சந்தித்து மெய்நிகர் உலகில் கணவன் – மனைவி போல, காதலன் – காதலி போல, பாலியல் நண்பர்கள் போல நடந்துகொள்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது. பெற்றோர் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.
இத்தகைய நடத்தைகளில் இளைஞர்கள் மாத்திரமன்றி சிறுவர்களும் வயது முதியவர்களும் ஈடுபாடு காட்டுவதுண்டு. இந்நிலை நிஜ உலகின் யதார்த்தத்தை மறக்கடிக்கின்றது. நிஜ உலகப் பாலியல் தொடர்பான நோக்கு நிலையை பாதிக்கின்றது. உண்மையான உறவுகளை இது பாதிக்கின்றது. இங்கு இணைய வழிப் பாலியல், நிஜ உலகத்துணையை அசட்டை செய்யத் தூண்டுகின்றது. அதிகம் இணையப் பாலியல் நடத்தைகளில் ஈடுபடுபவர்கள் நிஜ வாழ்வில் ஆர்வமும் நாட்டமும் இல்லாமலிருப்பர். எவ்வாறாயினும், இச்செயற்பாட்டுக்கு அதிக நேரத்தை எடுப்பது இணைய அடிமையாதலுக்கு இட்டுச் செல்கின்றது.
இணையக் கட்டுப்பாடுகள்
இணையக் கட்டுப்பாடுகள் என்பது இணையத்தில் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்பாடுகளில் ஈடுபாடு காட்டுவதுடன் அதற்காக அதிக நேரத்தை எடுத்துக்கொள்வதாகும். இதில் இணையவழி சூதாட்டம், வர்த்தகம் செய்தல், நிகழ்நிலை ஏலங்களில் பங்கேற்றல், தன்னை மீறிய நிலையில் நிகழ்நிலை கொள்வனவில் ஈடுபடுதல் என்பன இதிலடங்கும். இந்த பழக்கங்கள் ஒருவரின் பொருளாதாரத்திற்கு தீங்காக இருக்க முடியும். தொழில்சார் மற்றும் கல்விப் பணிகளை மேற்கொள்ள இடையூறாகவிருக்கலாம். அதிகமான பணத்தை செலவளிப்பதன் மூலம் அல்லது இழப்பதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். சிறுவர்களையும் இளைஞர்களையும் வழிநடத்தும் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இது பற்றிய தெளிவுடன் இருப்பது முக்கியமானதாகும். சிறுவர்களுடன் இது பற்றிய உரையாடல்களில் ஈடுபடுவது மிகவும் கட்டாயமாகும்.
இணைய உறவுகள்
இணைய வெளி உறவுகளுக்கு அடிமையாதல் என்பது மற்றுமொரு முக்கிய பிரச்சனையாகும். இது இணையத்தளத்தில் அல்லது சமூக ஊடகங்களில் சந்திக்கின்ற உறவுகளுக்காக அதிக நேரம் செலவிடுவதை குறிக்கின்றது. சில வேளைகளில் பெற்றோர்களை விட, உடன்பிறப்புகளை விட, உறவினர்களை விட, அயல்வீட்டவர்களை விட, குடும்ப நண்பர்களை விட இணையத்தில் சந்திக்கின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை இணைய உலகுக்கு அடிமையாதல் நிலை குறிக்கும். அத்தோடு, இணையவெளியில் அல்லது சமூக ஊடகங்களில் சந்திக்கின்றவர்களுக்கு சுய கட்டுப்பாட்டை மீறிய நிலையில் நேரமொதுக்குவது எமது வெளியுலகத்தை குறுகச் செய்கின்றது. இத்தகைய அடிமையாதலில் – மெய்நிகர் உறவுகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்கின்ற அவாவினை தோற்றுவிக்கும். இணைய வெளி உறவுகளுக்காக எதனையும் செய்யத் தோன்றும். குடும்ப உறவினர்களா அல்லது இணையவெளி உறவினர்களா என்று வருகின்ற பொழுது இணையவெளி உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தோன்றும். இணையவெளியில் அல்லது சமூக ஊடகங்களில் சந்திக்கின்ற நட்புக்கள் அறிமுகமில்லாதவர்களாக இருந்தாலும் கூட அவர்களுடைய நட்பினை உயரியதாகக் கருதத் தோன்றும்.
இணைய வெளி உறவுகளுக்கு அடிமையாதல் பல தளங்களில் இடம்பெறுகின்றன. சமூக ஊடகங்கள், சமூக வலைப்பின்னல் விண்ணப்பங்கள் (வட்ஸாப், மற்றும் சிக்னல்) இணைய அலப்பறைத் தளங்கள் (Chatrooms) போன்றவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.
இணையவெளி உறவுகளுக்கு அடிமையாதல் மூலம் பல தீங்குகள் ஏற்படுகின்றன. அதில் முதன்மையானது உண்மையான உறவுகளுடனான தொடர்பாடலில் ஆர்வமற்றுப் போவதாகும். உண்மையான உறவுகளுடன் அன்பினை பேணிக் கொள்வது சிரமமான ஒரு அனுபவமாக அமையும். சிறுவர்களிடமும் இளைஞர்களிடமும் உள்ள சமூக இயலுமைகள் பாதிக்கப்படும். நிஜ உலகில் அவர்களுக்கு நண்பர்கள் இல்லாது போகலாம். மாயையாக உள்ள இணைய உறவுகளில் தங்கி வாழ்கின்ற நிலைமை உருவாகும். சிறுவர்களை பொறுத்தவரை நிகழ்நிலை உறவுகளை அளவுக்கதிகம் நம்புவதன் மூலம் பல விபரீதங்கள் ஏற்பட முடியும். இவற்றை அடுத்துவரும் பகுதிகளில் விபரமாக நோக்கலாம்.- Vidivelli