நுரைச்சோலை வீடுகள் விரைவில் வழங்கப்படும் சாத்தியமில்லை
-காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் நிஹால் அஹமட்
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வீடுகள் பாதிக்கப்பட்டுப் போய் வீடற்றவர்களாக அலையும் பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்பட்டும் சாத்தியங்கள் ஏதும் தென்படவில்லை என காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் கைறுதீன் நிஹால் அஹமட் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினர் சார்பாக, சுனாமித் தாக்கம் ஏற்பட்டு 20 வருட நினைவு நாளன்று 26.12.2024 அம்பாறை மாவட்டச் செயலாளரைச் சந்தித்தபோது வீடுகள் விரைவில் பயனாளிகளிடம் வழங்கப்படாது எனும் நிலைமைகளை அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,
சவூதி அரசாங்க நிதியைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள வீடுகளை சுனாமியால் பாதிப்புற்றோருக்கு வழங்கக்கோரி அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம திடட்டமிடல் பணிப்பாளர் எச்.பி. அனீஸ் ஆகியோருடன், சுனாமியால் பாதிக்கட்டவர்களை உள்ளடக்கிய காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி சந்திப்பு ஒன்றை நடத்தியது.
சந்திப்பில், அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினைகள் உள்ளடங்கிய ஆவணம், கரும்பு விவசாயிகளின் நிலம் பறிக்கப்பட்டுள்ளமை, அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட விரிவான ஆய்வு ஆவணங்களும் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
மகஜர் நியாயமானது என தெரிவித்த மாவட்டச் செயலாளர் தனது நிலைப்பாடு தொடர்பில் சந்திக்கச் சென்ற காணியிழந்தோர் குழுவினரிடம் தெளிவுபடுத்தினார்.
“2009ஆம் ஆண்டு சுனாமி நுரைச்சோலை வீட்டுத் திட்ட வீடுகளையும் அதன் உட்கட்டுமானங்களையும் பயனாளிகளுக்கு வழங்க ஆயத்தமானபோது தீகவாபி பௌத்த தேரருடைய தலைமையில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும், அதன்பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தேரருடைய தலைமையில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பின் காரணமாகவும் வீட்டுத் திட்டத்தைக் கையளிப்பதில் தொடர்ந்தும் சிக்கல்கள் நிலவுகின்றது.
கடந்த 2024.12.20ஆம் திகதியும் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க என்னை அழைத்து இது தொடர்பில் கேட்டறிந்தார். வழக்கு தீர்ப்பை மீறி செயற்பட முடியாத நிலை உள்ளதைப்பற்றி கலந்துரையாடப்பட்டது.
சுனாமியால் பாதிப்புற்ற முஸ்லிம்களுக்கு வழங்கவேண்டும் என்றே சவூதி அரசு இவ்வீடுகளை நிர்மாணித்துத் தந்தது. இப்போதும் தாமதிக்காது அவ்வீடுகளை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குங்கள் என்றே சவூதி அரசு வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் 500 வீடுகளை வழங்கவும் நாங்கள் தயாராகவுள்ளோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வழக்குத் தீர்ப்பின்படி காணி பகிர்ந்தளிக்கும் தேசியக் கொள்கை அடிப்படையில் வழங்க கூறப்பட்டுள்ளது. கொள்கைப்படி தேசிய இன விகிதாசாரக் கொள்கைப்படி வழங்கத் தீர்மானித்தால் மிகச் சொற்பமான அளவே பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.ஆனால், அது நியாயமில்லை. அதன் காரணமாகவே இறுதியாக இவ்வீடுகளை மாவட்ட இன விகிதாசாரத்தின்படி பகிர்ந்தளிக்க நான் சிபாரிசு செய்துள்ளேன். ஆயினும் மேலிடத்திலிருந்து அதற்குரிய பதிலேதும் இன்னும் கிடைக்கவில்லை.
வழக்கினை மீண்டும் அழைக்க வேண்டும், அவ்வாறு வழக்காளிகள் மீண்டும் அழைக்கப்படும்போது அவர்களுடைய நிலைப்பாடு தொடர்பிலும் எமக்கு கூறமுடியாதுள்ளது. அவர்களுடன் சுமுகமாகப் பேச முயற்சிகள் ஏதும் எடுக்கப்பட்டதா என்பதையும் பார்க்கவேண்டும். அல்லது இன்னுமொரு மனித உரிமை மீறல் வழக்கினைத் தாக்கல் செய்து நீங்கள் நீதியைக் கோரலாம். யாருக்கும் அநியாயம் நடப்பதில் எனக்கு விருப்பமில்லை” என மாவட்டச் செயலாளர் தெரிவித்ததாக காணி உரிமைகளுக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் இணைப்பாளர் நிஹால் அஹமட் தெரிவித்தார்.
மேலும், இங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தெளிவுகாண வேண்டிய பல கேள்விகள் எமக்கு எழுந்தது.
உதாரணமாக, காணி பகிர்ந்தளிப்பதில் தேசியக் கொள்கை என்ன? அது பிரதேசத்தில் எவ்வாறு அமுல்படுத்தப்படும்? வீட்டுப் பிரச்சினை ஏன் காணிப் பிரச்சினையாக மாறியது? வழக்கில் எதிர்த்தரப்பு வாதம் என்னவாக இருந்தது? என்ற விடயங்கள் அலசி ஆராயப்பட வேண்டும்.
இந்த விடயத்தில் தன்னார்வமாக செயற்படும் ஆர்வமுள்ள சட்ட வல்லுநர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் அரச அதிகாரிகள் அனைவரும் இணைந்து பாதிப்புற்ற மக்களுக்கு நியாயம் கிடைக்கப் போராட வேண்டியுள்ளது. என்றும் நிஹால் அஹமட் வலியுறுத்தினார்.இதேவேளை அக்கரைப்பற்று சுனாமியால் பாதிப்புற்றோர் சங்கத்தின் தலைவர் ஐ.எல்.ஏ. குத்தூஸ் இந்த விடயம் தொடர்பில் கடந்த 26.12.2024 அன்று மாவட்ட செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர், பிரதமர், மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்றுடன் சுனாமி இயற்கைப் பேரழிவு ஏற்பட்டு 20 வருடங்களாகிவிட்டது. இருந்த போதிலும் பாதிப்புற்று வீடு வாசலை முழுவதுமாக இழந்த எங்களுக்காக எமது அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இன்னும் கிடைக்கவில்லை, நீதி மறுக்கப்படுகின்றது.
26.12.2004 ஆம் திகதி இலங்கையின் கரையோரத்தைத் தாக்கிய இயற்கை அனர்த்த சுனாமி பேரலையால் வீடு, வாசலை இழந்தவர்கள் அனைவருக்கும் அந்தந்தப் பிரதேசங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டும், அவை கௌரவமாக கையளிக்கப்பட்டும் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதிலும் அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் சுனாமியால் பாதிப்புற்ற எமக்காக சவூதி அரசு எமது அரசுடன் ஒப்பந்தம் செய்து சுனாமிப் பாதிப்புக்காகவே என்று மானியமாக நிதி வழங்கி 2009 இல் நுரைச்சோலைப் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளும், பாடசாலையும், வைத்தியசாலையும், சந்தைத் தொகுதியும், பள்ளிவாசலும், விளையாட்டு மைதானமும் இன்னும் பல உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய ஒட்டுமொத்த அழகிய கிராமமே இனவாதத்தாலும், சுயநலவாதத்தாலும் அழிந்துபோன மனிதநேயத்தின் சாட்சியமாகி 15 ஆண்டுகளாக காடாகிக் காணப்படுகின்றது.
சுனாமியால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதவர்களுக்கும், சுனாமிக்கு தொடர்பே இல்லாத பிரதேசங்களிலும்கூட சுனாமிக்கான நிதி, உட்கட்டமைப்பு உதவிகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
ஜனாதிபதி அவர்கள் நுரைச்சோலை சுனாமி வீடுகளைப் பகிர்ந்தளிக்க எடுத்த தீர்மானத்தினை நாம் வரவேற்கின்றோம். இருந்த போதிலும் இந்த வீடுகளை மாவட்ட இன விகிதாசாரத்தில் பகிர்ந்தளிக்க உயர்மட்ட ஏற்பாடுகள் நடைபெறுவதாக கேள்வியுற்றோம். அது உண்மையாக இருந்தால், நாம் மிகுந்த மனவேதனைப்படுகின்றோம். இன்னுமின்னும் எம்மை ஏமாற்றுவதற்கு எடுக்கும் முயற்சிகளே இது. இதனை எம்மால் ஏற்கமுடியாது.
சுனாமியாலும், இனவாதத்தாலும் பாதிப்புற்று 20 வருடங்களாக இருப்பதற்கு இடமில்லாமல் அங்குமிங்குமாக குடிசைகளிலும், வாடகை வீடுகளிலும் குழந்தை குட்டிகளுடன் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றோம். இந்நிலையிலேயே இனவாதத்தையும், ஊழலையும், வீண்விரயத்தையும் ஒழித்து நாட்டைக் கட்டியெழுப்புவோம் எனும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேர்தல் விஞ்ஞாபனத்தினை நம்பி வாக்களித்துள்ளோம். எமது பிரார்த்தனைகளும் சேர்ந்தே புதிய அரசினை நிலைப்படுத்தியுள்ளது. பாதிப்பினை பாதிப்பாக பார்த்து பாரபட்சமின்றி அதற்கு நீதியை நிலைநாட்டாது கடந்த அரசாங்கங்கள் செய்தது போன்று இனத்தின் பெயரால் அநியாயமிழைப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. பாதிப்புற்றோருக்கான நீதியை மாவட்ட விகிதாசாரம் என்றும் தேசிய விகிதாசாரம் என்றும் பங்குபோட எமது நாட்டினுடைய பிரஜைகளோ, அரசாங்கமோ அனுமதியளிக்கக்கூடாது. இவ்வாறானதொரு முடிவினை அரசு மேற்கொண்டால் அம் முடிவானது, இனவாதத்தை இல்லாது செய்வதற்கான அரசின் கொள்கைகளை அரசே மீறும் செயலாகவே அமையும்.
எமது நியாயமான கோரிக்கைகள் பின்வருமாறு,
குறித்த சுனாமி வீடுகளை வழங்குவதற்காக அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தினால் இறுதியாக பூர்வாங்க பரிசீலனைகள் செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட காத்திருக்கும் பயனாளிகள் பட்டியலில் 268 குடும்பங்கள் உள்ளன. இப் பட்டியலில் உள்ள எமக்கு முதலில் இந்த வீடுகளை கௌரவமாக வழங்கிவைக்கக் கோருகிறோம்.
500 வீடுகளில் மீதமாகவுள்ள 232 வீடுகளை அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலும், மேலும் இவ் வீட்டுத் திட்டத்திற்கு அயலில் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் வசிக்கும் வீடு வாசல் அற்ற வறிய குடும்பங்களைப் பாரபட்சமின்றி தெரிவு செய்து வழங்கக் கோருகிறோம்.
குறிப்பாக பல சமூகங்களையும் கொண்டமையும் கிராமமாக இதனை மாற்றும்போது, சமூக நல்லிணக்கத்திற்காகவும், கிராமிய வறுமை ஒழிப்பு மற்றும் கிராமிய அபிவிருத்திக்காக உண்மையான அர்ப்பணிப்புடன் சேவையாற்றக்கூடிய சமூக செயற்பாட்டாளர்களுக்கும், சிவில் சமூக நிறுவனங்களுக்கும் தங்கி நின்று சேவையாற்றுவதற்காக ஒருசில வீடுகளை பொது உடமையாக ஒதுக்கி வைப்பதும் சிறந்தது.
தற்போது காடாகிக் கிடக்கும் இந்த வீடுகளை குடியிருக்கும் நிலைக்கு கொண்டுவருவதற்கு எங்களால் உடல் உழைப்பினை வழங்க முடியும், தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசு செய்து வழங்கவேண்டுமெனக் கோருகிறோம்.
இயற்கைச் சூழலுடனும், அறநெறிகளுடனும், உழைக்கும் மக்களைக் கொண்ட அழகிய கிராமம் ஒன்றினைக் கட்டிஎழுப்புவதற்காக பங்களிப்புடனான இணைந்த கிராமிய அபிவிருத்தித் திட்டம் ஒன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தல் வேண்டும் என்பதனையும் கோருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் இந்த விடயம் தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்து கொண்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. 15 வருடங்களுக்கும் மேலாக மனித நடமாட்டமின்றி பாழடைந்து போயுள்ள இந்த வீட்டுத் திட்டத்தை புனரமைப்பது கூட சவால்மிக்க காரியம்தான். அதற்குக் கூட பெருந்தொகைப் பணத்தை செலவிட வேண்டி வரும்.
எது எப்படியிருப்பினும் சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டம் அவர்களுக்கே கிடைப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் ஏனையோருக்கு வழங்குவது பற்றிச் சிந்திக்கலாம்.
இது விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீவிர கவனம் செலுத்த வேண்டும். இவ்வீட்டுத் திட்டத்தை இனியும் தாமதிக்காத வீடற்ற மக்களுக்க வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- Vidivelli