ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை பார்வையிட மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கும் தடை
ஜனாதிபதிக்கு விரிவான கடிதம் அனுப்பினார் ஆணைக் குழு தலைவர் நோய் பரவலாம் என்ற அச்சமே தடைக்கு காரணமாம் என விளக்கம்
எப்.அய்னா
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் 103 பேரையும் பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அதிகாரிகளுக்கும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.ரி.பீ. தெஹிதெனிய, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பட்டு சட்டத்தின் 5 ஆவது அத்தியாயம் பிரகாரம், அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகள் இலங்கை பிரஜைகளுக்கு மட்டுமன்றி, இலங்கையின் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும் என சுட்டிக்காட்டி, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் 11(இ), 28 (2) ஆம் அத்தியாயங்களையும் ஞாபகப்படுத்தி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முப்படைகளின் பிரதானி மற்றும் ஜனாதிபதி எனும் ரீதியில் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விடயத்தில் தலையீடு செய்யவும், மனித உரிமைகள் ஆணைக் குழு அதிகாரிகள் தடையின்றி அவர்களது நலநோம்பு விடயங்கள் தொடர்பில் ஆராயவும் இயலுமான நிலைமையை ஏற்படுத்தி தருமாறு அக்கடிதம் ஊடாக கோரப்பட்டுள்ளது.
கடந்த 2024 டிசம்பர் 26ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்துக்கு ரோஹிங்யா அகதிகளை பார்வையிட சென்றிருந்த போதிலும், குடிவரவு, குடியகல்வுத் திணைக்களக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கமுடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதனால் அவர்கள் இந்த விடயத்தில் தலையீடு செய்ய முடியாமல் போனது. இதனையடுத்து மனித உரிமைகள் ஆணைக் குழுவின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், விமானப்படை அதிகாரி உள்ளிட்ட ஐவரை ஆணைக் குழு நேற்று முன்தினம் விசாரணைக்கு அழைத்து விளக்கம் கோரியது.
ஆபத்தான கடல் பயணம் ஊடாக வருகை தந்த ரோஹிங்கிய அகதிகளிடமிருந்து நோய்த்தொற்றுக்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்பட்டமையினாலேயே அவர்களைப் பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இதன்போது விளக்கமளித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் எல்.ரி.பி.தெஹிதெனிய தெரிவித்துள்ளார்.
‘புகலிட கோரிக்கையாளர்களாக வந்துள்ள ரோஹிங்கிய அகதிகளுடன் தொடர்புடைய வகையில் தோற்றம் பெற்றிருக்கும் நெருக்கடிநிலை குறித்துக் கலந்துரையாடுவதற்காக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்தையும் விமானப்படை அதிகாரிகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைத்திருந்தோம். இந்த ரோஹிங்கிய அகதிகள் முல்லைத்தீவிலுள்ள விமானப்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த வேளையில், அவர்கள் குறித்து ஆராய்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியான சந்திரசிறி அவ்விடத்துக்கு விஜயம் செய்திருந்தார். இருப்பினும் அகதிகள் குறித்து ஆராய்வதற்கு அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதனால் தான் இவர்களை நாம் அழைத்து விளக்கம் கோர வேண்டிய நிலை ஏற்பட்டது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின்படி நீதிமன்ற உத்தரவின் பிரகாரமோ அல்லது வேறு விதமாகவோ தடுத்துவைக்கப்பட்டிருப்போரை சென்று பார்வையிடுவதற்கும், அவர்களது நிலை குறித்து ஆராய்வதற்கும் ஆணைக்குழுவுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டிருக்கும் அவ்வதிகாரத்துக்கு அமைவாகவே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரி அங்கு ஆராய்வுக்குச் சென்றார். இருப்பினும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தான் பெரிதும் கவலையடைவதாக குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்மிடம் தெரிவித்தார். ரோஹிங்கிய அகதிகளால் ஏதேனும் நோய்கள் பரவக்கூடுமோ என்ற கரிசனையின் விளைவாகவே அவர்களைப் பார்வையிடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை எனவும், தற்போது சுகாதாரப்பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதனால் அகதிகளின் நிலைவரம் குறித்து ஆராய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இடமளிப்பதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதியளித்துள்ளார்’ என மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் எல்.ரி.பி. தெஹிதெனிய குறிப்பிட்டார்.
இந்த நிலையில், முல்லைத்தீவு விமானப்படை முகாமில், அகதி அந்தஸ்து கோருபவர்கள் எனும் ரீதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்ய பிரஜைகள் 103 பேரையும், மனித உரிமைகள் ஆணைக் குழுவின் சிறப்புக் குழுவொன்று தொடர்ச்சியாக மேற்பார்வை செய்ய திட்டமிட்டுள்ளது. குறித்த விமானப்படையில், இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதி, தடுப்பு முகாமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள பின்னணியில், அதன் செயற்பாடுகள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கீழ் இடம்பெறுவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.- Vidivelli