எம்.வை.எம்.சியாம்
2024 செப்டம்பர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட தரம் 5 க்கான புலமைப்பரிசில் பரீட்சை பாரிய சர்ச்சையைத் தோற்றுவித்துள்ளதை நாம் அறிவோம்.
இந்த சர்ச்சை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம், முடிவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் பகுதி ஒன்றின் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியாகியமையால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நிபுணர்கள் குழு முன்வைத்த 3 தீர்வுகளில் பொருத்தமான தீர்வை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில்
பரீட்சை சர்ச்சை
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2849 மத்திய நிலையங்களில் இடம்பெற்றதுடன் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு 323879 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். எனினும் பரீட்சையின் முதலாவது பரீட்சைத்தாளின் மூன்று வினாக்கள் பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாகவே சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இதற்கமைய இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்ததுடன் இது தொடர்பான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.அதன்படி புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை தயாரித்த குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் மற்றும் வழிநடத்துதல் பிரிவின் பணிப்பாளரார் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறு வலியுறுத்தி பல சந்தர்ப்பங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
சர்ச்சைக்கு தீர்வு காண விசேட
நிபுணர்கள் குழு நியமனம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டு பரீட்சை மதிப்பீட்டு முறை தொடர்பில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியமித்தார். அத்துடன் விரைவில் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு பிரதமர் பணிப்புரை விடுத்திருந்தார். மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் அநீதியும் ஏற்படாமல் அவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தகுந்த நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க பிரதமர் ஏற்கனவே முறையான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
நிபுணர்கள் குழுவின் பரிந்துரை
இந்த பரீட்சையை மீள நடத்துவது 10 வயதான பிள்ளைகளின் மனநிலையில் பாரிய பாதிப்பையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்றும் அனைத்து மாணவர்களுக்கும் நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதாலும் மிகப் பொருத்தமான மாற்றீடாக பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக இனங்காணப்பட்ட மூன்று வினாக்களுக்கும் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் புள்ளிகளை வழங்குவது பொருத்தமானது என அந்த நிபுணர் குழு பரிந்துரைத்தது. அப்பரிந்துரைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கல்வி அமைச்சின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனத்தெரிவித்து நடைபெற்று முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது பகுதியின் வினாத்தாளுக்கான பரீட்சையை மீண்டும் நடத்துமாறு கோரி நான்கு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்கள் மீதான விசாரணைகள் இடம்பெற்றதுடன் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடவும் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. அத்துடன் மனு மீதான தீர்ப்பை 31 ஆம் திகதி (நேற்றுமுன்தினம்) அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வெளியான 3 கேள்விகள் தொடர்பிலும் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன்படி முன்கூட்டியே வெளியான மூன்று கேள்விகளுக்கும் அனைவருக்கும் இலவச புள்ளிகள் வழங்க பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எடுத்ததாக கூறப்படும் முடிவையும் அதற்கு ஒப்புதல் அளித்து கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி அமைச்சர்கள் குழு எடுத்த முடிவையும் இரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
அதன்படி அண்மையில் முடிவடைந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் பகுதி ஒன்றின் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியாகியமையால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நிபுணர்கள் குழு முன்வைத்த 3 தீர்வுகளில் பொருத்தமான தீர்வைத்தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவிட்டது.
அதன்பின்னர் இந்த பரீட்சை தொடர்பான பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் பரீட்சைகள் ஆணையாளர் நாயக்கத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை விட இந்த வினாத்தாளின் மூன்று கேள்விகள் முன்கூட்டியே வெளியாக காரணமாக இருந்ததாக கூறப்படும் தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஐ.ஜி.எஸ்.பிரேமதிலக்க மூன்று மில்லியன் ரூபாவையும் மேலதிக வகுப்பு ஆசிரியர் என்று கூறிக்கொள்ளும் சமிந்த குமார இளங்கசேகர இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்துக்கு நட்டயீடாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் அதனை நேற்றுமுன்தினம் முதல் நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்தது.
அத்துடன் குறித்த இருவருக்கும் எதிராக விசாரணைகளை துரிதப்படுத்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஊடாக ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழும் அவ்விருவருக்கும் எதிராக விசாரணைகளை முன்னெடுக்கவும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த தீர்ப்பில் மேலும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுடன் நடந்த கலந்துரையாடல் ஒன்று தொடர்பில் விடயங்களை சுட்டிக்காட்டிய நீதியரசர்கள் இதனூடாக சுயாதீனமாக முடிவெடுப்பதற்கான அதிகாரம் மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தன்னுடைய உள்ளக முடிவெடுக்கும் செயல்முறையை விட்டு விலகி அந்த பொறுப்பை பிரதமர் கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
பிரதமர்/கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் அதிகாரத்தை பறிக்கவோ அல்லது செயல்முறையில் பாதிப்பை ஏற்படுத்தவோ நினைக்கவில்லை என்றாலும் அவர்களின் தொடர்பு அந்த விளைவை ஏற்படுத்தியுள்ளதாக நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே முன்கூட்டியே வெளியான மூன்று கேள்விகளுக்கும் இலவச மதிப்பெண்கள் வழங்கும் முடிவு சட்டவிரோதமானது என்ற தீர்மானத்துக்கு உயர்நீதிமன்றம் வந்துள்ளது.
கசிந்ததாக கூறப்படும் குறித்த மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்களை வழங்குதல் அந்த மூன்று கேள்விகளையும் நீக்கிவிட்டு புள்ளிகளை வழங்கல் அல்லது மீளப்பரீட்சையை நடாத்துதல் ஆகியனவே நெருக்கடியை தீர்ப்பதற்காக நிபுணர்கள் குழு முன்வைத்த 3 தீர்வுகளாகும்.
நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா என்பதும் சந்தேகத்திற்குரியதே. மூன்று தீர்வுகளில் எதனை நடைமுறைப்படுத்தினாலும் சிக்கல்கள் தோற்றம் பெறவே வாய்ப்புண்டு. அது ஒருபோதும் பெற்றோர்களையும் மாணவர்களையும் திருப்திப்படுத்துவதாக அமையாது.
தொடர்ந்தும் சர்ச்சைகளைத் தோற்றுவிக்கும் இந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை முறைமையை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் கல்வியமைச்சு இறுக்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.- Vidivelli