நீண்ட காலத்திற்குப் பின்னர் அரச ஹஜ் குழுவிற்கு அரசியல் தலையீடுகளின்றி தகுதிவாய்ந்த உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகும். இது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திலுள்ள பல்வேறு தரப்பினரும் தமது திருப்தியை வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் ஏற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் புதிய அரச ஹஜ் குழுவினை புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாசார அமைச்சர் ஹினிதும சுனில் செனவி கடந்த வாரம் நியமித்தார்.
புதிய ஹஜ் குழுவின் தலைவராக பல்தேசிய கம்பனிகளின் பணிப்பாளராக கடமையாற்றுகின்ற றியாஸ் மிஹுழார் நியமிக்கப்பட்டுள்ளார். விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளர் வை.எல்.எம். நவவி, சிரேஷ்ட சட்டத்தரணியும் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான டி.கே. அசூர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம், தொழிலதிபரும் கணக்கீட்டு பட்டதாரியுமான எம்.எஸ்.எப்.ஹக் ஆகியோர் இக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பதவி வழியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரும் இக்குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனங்கள் எந்தவித அரசியல் தலையீடுகளோ சிபாரிசுகளோ இன்றி தகுதியின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹஜ் குழுவில் இடம்பெற்றுள்ளோர் கடந்த காலங்களில் தாம் பணியாற்றிய துறைகளில் நற்பெயரைச் சம்பாதித்தவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறான தகுதிவாய்ந்தவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இவ்வாறானவர்களைப் புறந்தள்ளி அரசியல்வாதிகளுக்கு வால் பிடிப்பவர்களுக்கே பதவிகளும் பொறுப்புக்களும் வழங்கப்பட்டன. இதனால் புனித மார்க்க கடமைகளுடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கூட பாரிய குளறுபடிகளும் மோசடிகளும் தோற்றம் பெற்றன. இவ்வாறான மோசடிக்காரர்களுக்கு கடந்த கால ஆட்சியாளர்களும் பாதுகாப்பு அரணாக விளங்கினர். எனினும் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிப்பதில்லை என்ற கொள்கையில் உறுதியாவுள்ளது. அதன் வெளிப்பாடே ஹஜ் குழுவுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையாகும்.
கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த கட்சிகளின் ஆதரவாளர்களும் அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்களுமே ஹஜ் குழுவில் நியமிக்கப்பட்டனர். இதன் காரணமாக இலங்கையின் ஹஜ் விவகாரங்களில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. இறுதியாக பதவியில் இருந்த ஹஜ் குழுவின் முறைகேடுகள் தொடர்பில் தமக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அண்மையில் கூட முன்னாள் புத்தசாசன மத விவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார். இந்நிலையில்தான் தற்போது பொருத்தமான அங்கத்தவர்களைக் கொண்ட ஹஜ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பதவியில் இருந்த ஹஜ் குழுவினால் ஹஜ் முகவர்களுக்கு பகிரப்பட்ட ஹஜ் கோட்டாக்களை இரத்துச் செய்துவிட்டு புதிதாக நேர்முகப் பரீட்சையினை நடத்தி கோட்டாக்களை பகிருமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில் புதிய ஹஜ் குழு கோட்டாக்களை பகிர்ந்தளிக்கும் விடயத்தில் பொருத்தமான வழிமுறை களைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஏலவே சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையின் ஹஜ் ஏற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வகையில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் இந்த இடத்தில் நினைவூட்டத்தக்கதாகும். அதனையும் கருத்திற் கொண்டு புதிய ஹஜ் குழு செயற்பட முடியும்.
எது எப்படியிருப்பினும் ஹஜ் விவகாரத்தில் கடந்த காலங்களில் நிலவிய ஊழல் மோசடிகள் பாரபட்சங்கள் புதிய ஹஜ் குழு மூலமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கை யாத்திரிகர்கள் இம்முறை சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொள்வது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
அறவிடப்படும் பணத்திற்கு ஏற்ற சேவையை வழங்காத ஹஜ் முகவர்களுக்கு எதிராக புதிய ஹஜ் குழு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய குழுவில் அனுபவம் வாய்ந்த வர்த்தகப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் அங்கம் வகிப்பதால் இந்த விடயத்தை அவர்கள் நேர்மையாகக் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வலுத்துள்ளது. அந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் புதிய ஹஜ் குழு செயற்படும் என நம்புகிறோம்.- Vidivelli