(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
ஹிஜ்ரி 1446 ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்றுமுன்தினம் டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது நாட்டின் எப்பாகத்திலும் தலைப் பிறை தென்படாததால் இலங்கை வாழ் மக்கள் புனித ஜுமாதுல் ஆகிரஹ் மாதத்தை புதன்கிழமை ஜனவரி 01ஆம் திகதி 30ஆக பூர்த்தி செய்து மஹ்ரிபு தொழுகையுடன் புனித ரஜப் மாதம் ஆரம்பமாகின்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் பிரதித் தலைவர் மெளலவி அல் மஹ்தூமி ஏ.எல்.எம்.ரிழா (அல் ஹஸனி) உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாவசலின் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி, ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்களின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது புனித மிஹ்ராஜ் இரவு எதிர்வரும் ஜனவரி 27ஆம் திகதி மாலை செவ்வாய் இரவு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.