(எப்.அய்னா)
கொரோனா தொற்றால் உயிரிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை கட்டாய தகனம் செய்த நடவடிக்கையின் பின்னால் உள்ள சதியை வெளிப்படுத்துமாறு கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, இனவாத நோக்கங்களை கண்டறிந்து நீதியை நிலைநாட்டுமாறும் முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க கடந்த டிசம்பர் 22 ஆம் திகதியன்று இந்த முறைப்பாட்டை பொலிஸ் தலைமையகத்திற்கு நேரில் சென்று அளித்துள்ளார்.
கடந்த 2020 மார்ச் 31 ஆம் திகதி சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாரச்சி, அப்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்டோர் இதில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், 2021.02.14 அன்று சுகாதார அமைச்சின் செயலாளராக இருந்தவர், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் முடிவெடுத்த தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினர்கள், கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தவர்களையும் விசாரணைக்கு உட்படுத்துமாறு முறைப்பாட்டாளரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த தீர்மானத்திற்கு காரணமாக இருந்த நிபுணர்கள் குழுவில் உறுப்பினர்களாகவிருந்த ( சட்ட வைத்திய ஆலோசகர் சன்ன பெரேரா, வைத்திய ஆலோசகர் ஆனந்த விஜேவிக்ரம, சட்ட வைத்திய ஆலோசகர் ரொஹான் ருவன்புர, சட்ட வைத்திய ஆலோசகர் பி.பீ. தசநாயக்க, நுண்ணுயிரியல் ஆலோசகர் ஷிரானி சந்ரசிறி, நுண்ணுயிரியல் ஆலோசகர் மாலிக கருணாரத்ன, வைத்தியர் துல்மினி குமாரசிங்க, சட்ட வைத்திய ஆலோசகர் பிரபாத் சேனசிங்க,சட்ட வைத்திய அதிகாரி சிரியந்த அமரரத்ன, பேராசிரியர் மெத்திகா விதானகே, வைத்தியர் ஹசித்த திசேராஆகியோரை பொறுப்புக் கூற வேண்டியவர்கள் என பெயரிட்டு முறைப்பாட்டாளர் குற்றவியல் விசாரணை கோரியுள்ளார்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின தொடர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம்கள் மீதான இனவாத அடக்குமுறை, அரச அங்கீகாரத்தோடு வியாபித்ததாக குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்கட்டியுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரந்த ரன்மல் என்டனி அமரசிங்க, அதன் தொடர்ச்சியே கொவிட் தொற்றினால் மரணமடைந்த ஜனாஸாக்களை தகனம் செய்த நடவடிக்கை எனவும், அது முற்று முழுதாக முஸ்லிம்களை இலக்குவத்தது எனவும் சுட்டிக்கடடியுள்ளார். அதனால் இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.- Vidivelli