புதிய அரசாங்கம் முஸ்லிம்களை ஒருபோதும் புறக்கணிக்காது
சமூகத்தை பாதிக்கும் தீர்மானங்களை எதிர்க்க தயங்கமாட்டோம் என்கிறார் பிரதியமைச்சர் முனீர் முளப்பர்
2021-.09.-13 அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பொது பல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரி “அல்லாஹ்” என்ற ஒரு கருத்தை தெரிவித்தார். மறுநாள் பாராளுமன்றம் முதல் பத்திரிகைகள் வரை அனைத்திலும் இதுதான் தலைப்புச் செய்தி. அந்த சந்தர்ப்பத்தில் இந்த கருத்து போலியானது என்பதை நிரூபித்து இஸ்லாம் மற்றும் தீவிரவாதம் பற்றி சிங்கள மொழியில் தெளிவுபடுத்துவதற்கான கட்டாய தேவை ஊடவியலாளர்களாகிய எமக்கு ஏற்பட்டது. அதற்காக நாங்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முதல் முஸ்லிம் தலைவர்கள் பலருடனும் உரையாடினோம். இறுதியில் ஞானசார தேரரின் இந்த கருத்துக்கு சிங்களத்தில் தெளிவாக பதில் வழங்கக்கூடிய ஒரு மௌலவியை சந்தித்தோம். அன்று, இஸ்லாமிய வெறுப்பும் இனவாதமும் தலைக்கு மேல் ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் தைரியமாக முன்வந்து ஞானசார தேரரின் கருத்துக்கள் அத்தனையும் பொய் என்பதை நிரூபித்தவர்தான் மௌலவி தான் முனீர் முளப்பர். இன்று அவர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு 109,815 விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முனீர் இலங்கை வரலாற்றில் இரண்டாவது முறை கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் உறுப்பினர் மற்றும் முதலாவது முஸ்லிம் ஆண் உறுப்பினர் என்ற பெருமையை பெறுகிறார். பிரதியமைச்சராக பதவியேற்ற பின்னர் விடிவெள்ளி அவரைச் சந்தித்து உரையாடியது.
நேர்கண்டவர்:சபீர் மொஹமட்
மாத்தறை வெலிகமவில் பிறந்த முனீர் முளப்பர், அரபா கனிஷ்ட வித்தியாலயம், மீயல்ல அல் மினா வித்தியாலயம் என்பவற்றில் கல்வி கற்றுள்ளதோடு பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் இணைந்து சாதாரண தர கல்வியுடன் இஸ்லாமிய கற்கை நெறியையும் பூர்த்தி செய்துள்ளார். பின்னர் மாத்தறை சாந்த தோமஸ் கல்லூரி மற்றும் ஹம்பாந்தோட்டை ஸாஹிரா கல்லூரிகளில் ஆசிரியராகக் கடமையாற்றியுள்ள இவர், 2014 முதல் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய பல செயற்பாடுகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். தனது சரளமான சிங்கள மொழிநடை காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை முனீர் பெற்றிருந்தார்.
அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படவில்லை என்ற மனக்குறை முஸ்லிம்கள் மத்தியில் உள்ளது. ஏனைய சமூகத்தினரும் கூட இதனை ஒரு குறையாகவே பார்க்கின்றனர். NPP யின் பிரதியமைச்சராக இந்த விவகாரத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
முஸ்லிம்களுடைய இந்த ஆதங்கத்தை எம்மால் மறுத்தலிக்க முடியாது. புதிய அரசாங்கம் மூலம் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இந்த தீர்மானத்திற்கு பின்னால் காணப்படுகின்ற நியாயங்களையும் ஆராய வேண்டும். முதலாவதாக இலங்கையில் ‘கபினட் அமைச்சுக்கள்’ புதிய அரசு ஒன்று நியமிக்கப்பட்டு சிறிது காலங்களில் மாறக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. மேலும் நாங்கள் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது சமூக உளவியல் தொடர்பான அறிவு எமக்கு மிக முக்கியமானது. ஆகவே நாங்கள் இந்த புதிய கெபினட் பற்றி நேர்மறையாக சிந்தித்தால் இந்த அரசாங்கம் என்பது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அரசு அல்ல. ஆகவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் இந்த அரசின் கீழ் புறக்கணிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நாங்கள் நிச்சயமாக அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.
உதாரணமாக முஸ்லிம் தனியார் சட்டம் போன்ற விவகாரங்கள் அமைச்சரவைக்கு வரும்போது அதுபற்றிய முஸ்லிம் சமூகம் சார்பான கருத்துக்களை முன்வைக்க அங்கு ஒருவர் இருக்க வேண்டுமல்லவா?
முஸ்லிம் தனியார் சட்டம் போன்ற விவகாரங்கள் பற்றிய உரையாடல்கள் வரும்போது நிச்சயமாக அவை பற்றி பாராளுமன்றத்தில் பேசப்படும். மேலும் முஸ்லிம் சமூகத்திற்கும் சமூகம் என்ற அடிப்படையில் அவர்களுடன் நிலைப்பாடு பற்றிய ஒரு தெளிவு கட்டாயம் இருக்க வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற பிரச்சினைகள் திரும்பத் திரும்ப வந்து கொண்டே தான் இருக்கின்றது. இதற்கு முன் இருந்த பல அரசுகளும் இந்த முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். ஆகவே மீண்டும் ஒருமுறை இந்த விவகாரம் பற்றிய பேச்சு வரும்போது சமூகம் என்ற வகையில் ஒரு தெளிவான நிலைப்பாடு முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டும். மேலும் இதற்கு முன் இருந்த அரசு போல் ஏகோபித்த முடிவுகளை எமது அரசு எடுக்கமாட்டார்கள் என்ற உறுதியையும் இந்த அரசு மக்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளார்கள்.
தேசிய மக்கள் சக்தியின் பெயரில் இரு தேர்தல்களிலும் பெரு வெற்றியீட்டியுள்ள போதிலும் தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் கரம் ஓங்கியிருப்பதாக தெரிகிறதே? டில்வின் சில்வாதான் அனைத்தையும் தீர்மானிக்கிறாரா?டில்வின் சில்வா பற்றிய குற்றச்சாட்டு போலியானது. ஆனாலும் பொதுவாக இலங்கையில் உருவாக்கப்படுகின்ற அத்தனை கூட்டணிகளிலும் முக்கியமான கட்சி ஒன்று தான் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிலையில் இருக்கும். அரசியலில் இது ஒரு புதிய விடயம் அல்ல. மேலும் அவ்வாறு எவரும் ஏகோபித்த முடிவுகளை எடுப்பதில்லை. அமைச்சர்களை நியமிக்கும் போதுகூட உரிய தலைமைகள் எங்களிடமும் கருத்துக்களை பெற்றுக் கொண்டார்கள்.
முஸ்லிம் சமூகத்திலிருந்து NPP இல் தெரிவாகியுள்ள 8 எம்.பி.க்களும் புதியவர்கள் என்றும் தேசிய, சமூக விவகாரங்களில் அவர்களுக்கு போதுமான பரிச்சயம் இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே?
கடந்த காலங்களில் முஸ்லிம் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய அமைச்சர்கள் பற்றி கொஞ்சம் ஆராய்ந்தால் அவர்களுடைய அனுபவம் மற்றும் அவர்கள் பாராளுமன்றத்தில் மேற்கொண்ட விடயங்கள் என்பன பற்றி தெரிந்து கொள்ளலாம். தேசிய மக்கள் சக்தியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எவரும் சிறுபிள்ளைகள் அல்லர். அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு அடிப்படையில் சமூகம் சார்ந்த, முஸ்லிம்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் தம்மை அர்ப்பணித்தவர்களாகவே உள்ளார்கள். யதார்த்தம் என்னவென்றால் இன்று அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஆக இருக்கும் அனைவரும் ஏதோ ஒரு நாள் புதியவர்களாகவே பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளார்கள்.
நீங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானவர் என்றும் முஸ்லிம் கட்சிகளை அழிப்பதற்கு முயற்சிப்பதாகவும் கூறுகிறார்களே? அண்மையில் கம்பஹாவில் நீங்கள் பேசிய பேச்சு இந்த அர்த்தத்திலா?
முஸ்லிம் கட்சிகள் மற்றும் அதன் தலைமைகளை பார்க்கும் விதத்தில் என்னைப் பார்க்க வேண்டாம். பெரும்பாலான முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களில் இருந்து முஸ்லிம்களுடைய வாக்குகளைப் பெற்றே பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். அவ்வாறான சமூகப் பின்னணியில் இருந்து வருபவர்களுக்கு ஒரு முக்கியமான சமூக கடமை இருக்கின்றது. மேலும் அவர்கள் அந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி குரல் கொடுக்க வேண்டும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் கம்பஹா மாவட்டத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை முஸ்லிம் அல்லாதவர்களுடைய வாக்குகளின் மூலமே பாராளுமன்றத்திற்கு வந்துள்ளேன். அத்துடன் நான் ஒரு தேசிய கட்சியை பிரதிநிதி. நான் முஸ்லிம் தேசிய கட்சி ஒன்றின் முஸ்லிம் பிரதிநிதி என எங்கேயும் கூறவில்லை. தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒரு முஸ்லிம். எனவே என்னை மொத்த முஸ்லிம் சமூகத்தினுடைய தலைவராக பார்க்க வேண்டாம். முஸ்லிம்கள் சார்ந்த பிரச்சினைகள் எழும் போது நிச்சயமாக நான் அது சார்ந்து பேசுவேன். மேலும் நாடு என்ற அடிப்படையில் ஏனைய இன மத மக்களுடைய உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளின் போதும் குரல் கொடுப்பேன். சரளமாக கூறினால் நான் ஒரு இனத்திற்கு மதத்திற்கு மாத்திரம் சேவை செய்யக்கூடிய மக்கள் பிரதிநிதியாக இங்கே வரவில்லை.
இன்று அரசாங்கம் ஏதேனும் தீர்மானம் எடுத்தால் அதற்கு முஸ்லிம்கள் உங்கள் மீதுதான் விரல் நீட்டுகிறார்கள். உதாரணமாக தப்லீக் ஜமாஅத்தில் வந்த இந்தோனேசியர்கள் கைதான விடயத்திற்கு நீங்கள் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பது போன்ற விமர்சனங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தவிர்க்க முடியாத காரணங்களால் முஸ்லிம் சமூகம் தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் தலைவராக என்னை பார்க்கின்றார்கள். மேலும் பாராளுமன்றத்தில் இருக்கின்ற ஏனைய அமைச்சர்களை விட என்னுடன் மக்களுக்கு ஒரு நெருக்கம் காணப்படுகின்றது. ஏனென்றால் கடந்த ஒரு சில வருடங்களாக தேசிய மக்கள் சக்தியுடன் நான் நாடு பூராகவும் சென்று பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன். மேலும் மக்களும் ஏதேனும் பிரச்சினைகள் வந்தால் அவர்களுடைய மாவட்டங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொள்வதற்கு முன்னர் என்னை தொடர்பு கொள்கின்றார்கள். நான் என்னால் இயன்ற அளவு அவர்களுக்கு சேவை செய்யக்கூடியவனாக இருக்கின்றேன்.
தேசிய முஸ்லிம் விவகாரங்கள் மேலெழும்போது எதிரணியிலுள்ள அரசியலில் அனுபவம்வாய்ந்த ஹக்கீம், ரிஷாட், கபீர், இம்தியாஸ் போன்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்று செயற்பட முடியும் என நம்புகிறீர்களா? இதற்கு உங்கள் கட்சி இடமளிக்குமா?
நான் பொதுவாக பிரச்சினைகள் சவால்கள் வரும் போது மூத்த அனுபவம் வாய்ந்தவர்களுடன் அது பற்றி கலந்துரையாடுவேன். அதிலே முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்கள் என பலரும் இருக்கின்றார்கள். அரசியல் என வரும்போது எமது கட்சியில் இருக்கின்ற அது சார்ந்த தலைமைகள் மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களிடம் நான் கதைப்பேன். மேலும் நீங்கள் கூறிய தலைவர்கள் அரசியல் களத்திலே எதிர்த்தரப்பில் இருந்தாலும் அவர்களுடனான மனிதநேய தொடர்புகள் எப்போதுமே எமக்கு காணப்படுகின்றது. கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர்களை மானபங்கப்படுத்தியோ தவறாக கதைத்தோ நான் அரசியலில் ஈடுபடமாட்டேன். இஸ்லாத்தில் கூட அது தவறான ஒரு தலைமைத்துவப் பண்பாகும். மேலும் எமது கட்சியின் அடிப்படை கொள்கைகள் வரம்புகள் என்பன காணப்படுகின்றன. அதற்குள் இருந்து கொண்டு நாங்கள் பிற தொடர்புகளையும் மேற்கொள்கின்றோம்.
அண்மையில் டில்வின் சில்வாவை தேசிய ஷூரா சபை சந்தித்து பேசியிருந்தது. இவ்வாறு முஸ்லிம் சிவில் அமைப்புகளின் கருத்துகளைப் பெற்று நடைமுறைப்படுத்த தே.ம.ச. தயாராகவுள்ளதா?
நிச்சயமாக. நீண்ட காலமாக இலங்கை முஸ்லிம்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் முகாமுடன் மாத்திரமே நெருங்கிய உறவுகளைப் பேணி வந்தார்கள். இதனாலேயே அடுத்த அரசியல் முகாமிற்கு முஸ்லிம்கள் பற்றிய ஒரு சிறந்த தெளிவு இருக்கவில்லை. ஆகவே முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் எமக்கு இந்த நாட்டில் காணப்படுகின்ற அத்தனை அரசியல் முகாம்களுடன் ஒரு உறுதியான தெளிவு தேவை. எனவே இவ்வாறான சந்திப்புகள் அரசியல் கட்சிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துகின்றது. அத்துடன் ஏற்கனவே காணப்பட்ட தவறான சிந்தனைகளில் இருந்து மீண்டு வர இவ்வாறான சந்திப்புகள் உதவுகின்றன.
தேசிய மக்கள் சக்திக்குள் முஸ்லிம்களின் பிரசன்னம் போதாது என்பது விளங்குகிறது. அதனுள் மேலும் பல தகுதியானவர்களை உள்வாங்குவீர்களா?
நிச்சயமாக உள்வாங்கவுள்ளோம். நாங்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஊழல் குற்றச்சாட்டுகள் அற்ற நேர்மையான பல முஸ்லிம் புத்திஜீவிகளுடனும் சந்திப்புகளை மேற்கொண்டு எமக்கு அவர்களுடைய ஆதரவை வழங்குமாறு கூறியிருந்தோம். சிலர் இணைந்து பயணித்தார்கள். இன்னும் சிலர் நாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என நினைத்து எம்மோடு இணையவில்லை. அதில் ஒரு சிலர் நாங்கள் வெற்றியடைந்த பின்னர் எம்மோடு சேர்ந்து பயணிப்பதற்காக வந்தார்கள். எனினும் ஒரு சில காரணங்களால் அது சிரம சாத்தியமானது. எவ்வாறாயினும் நாங்கள் சிறந்த தலைவர்களை எப்போதும் இனம் கண்டு அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்குவதற்கு தயாராக உள்ளோம். என்னுடைய இந்த பதவிக்கு கூட என்னை விட தகுதியான எவரேனும் வந்தால் நிச்சயமாக அவருக்கு நான் இந்த கதிரையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன்.
அரசாங்கத்தின் சில தீர்மானங்களால் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு குறையும் என சிலர் எதிர்வு கூறுகிறார்கள். அதற்கு வாய்ப்புள்ளதா?
இது ஒரு அரசியல். அரசியல் ரீதியாக தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள். இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் எம்மோடு இணைந்து பயணித்த சந்தர்ப்பங்கள் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் இம்முறை பரவலாக அவர்கள் எமக்கு ஆதரவு தந்தார்கள். அதனால் பாரம்பரிய அரசியல் முகாமில் இருந்த முஸ்லிம் தலைவர்கள் தற்போது கதி கலங்கிப் போயுள்ளார்கள். உண்மையிலேயே ஒரு சிலர் தற்போது இனவாதம் வேண்டாம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த எம்மை இனவாதிகள் என காட்டுவதற்கு முயற்சிக்கின்றார்கள். எனவே முஸ்லிம் சமூகம் இவ்வாறான சூழ்ச்சிகளில் விழுந்து விடாமல் விழிப்பாக வேண்டும். பிரச்சினைகள் வரும்போது கலந்துரையாடலின் மூலம் சுமுகமாக அவற்றை தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சிக்க வேண்டும்.
எனவே இறுதியாக கூற வேண்டிய விடயம் யாதெனில் நாங்கள் அரசியலுக்கு வந்தது சொத்துக்களை சேர்ப்பதற்கோ ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்கோ அல்ல. நான் மட்டுமன்றி என்னோடு இருக்கின்ற அனைவருக்கும் இந்த தெளிவான சிந்தனை மற்றும் நோக்கம் இருக்கின்றது. மேலும் 76 வருட மோசமான அரசியல் கலாசாரத்தில் இருந்து திடீரென ஓரிரு மாதங்களில் எங்களால் எல்லாவற்றையும் தலை கீழாக மாற்றி விட முடியாது. அரசியல்வாதிகள் மாத்திரமன்றி மக்களும் மாற வேண்டும். மக்கள் மாறாதவிடத்து இங்கே எதுவுமே மாறாது.- Vidivelli