எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர் விபரங்களை எங்களுக்கு தாருங்கள்
ரிஷாத் பதியுதீன் அரசாங்கத்திடம் கோரிக்கை
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
கொவிட் தொற்றில் மரணித்து எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர் விபரங்களை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதொடர்பில் அவர் நேற்று முன்தினம் இந்த சபைக்கு தெரிவித்த பதில் திருப்தியானதாக இல்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான காகிதாதிகளுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கொவிட் தொற்றில் மரணித்த ஜனாஸாக்களை எரித்தமை தொடர்பில் சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்த பதில் எங்களுக்கு திருப்தியானதாக இல்லை. இந்த அரசாங்கத்தில் இருக்கும் ஜனாதிபதி உள்ளிட்ட யாரும் இந்த ஜனாஸா எரிப்புக்கு ஆதரவானவர்கள் அல்ல. நூறு வீதம் அதற்கு எதிரான கொள்கையுடையவர்கள்.
ஆனால், ஜனாஸாக்களை எரித்தவர்கள்தான் கடந்த 4, 5 வருடங்களாக கோட்டாய ராஜபக்ஷ சென்ற பிறகு, ரணில் விக்ரமசிங்க அந்த ஆசனத்தில் அமர்ந்து, கோட்டாவுக்கு ஆதரவாக செயற்பட்டு, அந்த விடயங்களை வெளியில் கொண்டுவருவதை தாமதமாக்கிவந்தார். அந்த நடவடிக்கையை நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பதில்லை.
அதனால் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர் விபரங்களை எங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த விபரங்களை எங்களுக்கு வழங்கிய பின்னர் அந்த விடயங்களை நாங்கள் எதற்கு கேட்கிறோம் என்பதை நாங்கள் தெரிவிப்போம். அரச அதிகாரிகள் எழுதித்தரும் விடயங்களை இங்கு வந்து வாசிப்பதுதான் கடந்த காலங்களில் இருந்துவரும் வழமை. அதனால் ஜனாஸா எரிப்பு தொடர்பான கேள்விக்கான பதிலும் சுகாதார அமைச்சில் இருக்கும் அதிகாரிகள்தான் எழுதிக்கொடுத்திருப்பார்கள். அதனால் இந்த பெயர் விபரங்களை தயவுசெய்து வெளியிடுமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்.
கோட்டாபய செய்த இந்த பாரிய விளைவினால், பாரிய மக்கள் ஆணையுடன் அதிகாரத்துக்கு வந்தும் அவரால் இரண்டு வருடங்கள் கூட அந்த ஆசனத்தில் இருப்பதற்கு நாங்கள் நம்பும் இறைவன் இடமளிக்கவில்லை. அதேபோல் பாராளுமன்றத்தில் அதற்கு ஆதரவளித்த அனைவரும் இன்று மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளனர்.
கோட்டாவுடன் இருந்த 147 பேரில் 3பேரே மக்களால் தெரிவாகி பாராளுமன்றத்துக்கு வந்திருக்கின்றனர். அதனால் கொவிட் தொற்றில் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்குமாறு அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.- Vidivelli