பி.எம்.எம்.பெரோஸ் நளீமி
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர்,
மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து
இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக நம்மில் பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களிலும் அச்சு ஊடகங்களிலும் பரிமாறுகின்றோம். இருந்தாலும் இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் என்று வருகின்ற பொழுது அவர்கள் தொடர்பான ஒட்டு மொத்த தகவல்களையும் அவர்களது பிரச்சினைகள் தொடர்பான தரவுகளையும் அதன் தன்மைகளையும் அது தொடர்பான முழுமையான விபரங்களையும் ஒரு இணையத்தளத்தில் பெறக்கூடிய வாய்ப்பு இல்லை என்று கூறுவது மிகவும் கவலையாக உள்ளது.
குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள், சொத்து அழிப்புகள், காணிகளை அணுக முடியாமல் தடை விதிக்கப்படுகின்ற விடயங்கள், அரசியல், சமூக, பொருளாதார, கலாசார உரிமைகளை அனுபவிக்க முடியாமல் ஏற்படுகின்ற பல்வேறு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விடயங்கள் சமூக வலைத்தளங்களிலும் உள்ளூர் வலைத்தளங்களிலும் சில போது தேசிய பத்திரிகைகளிலும் தமிழ் மொழியில் வெளிவந்திருப்பதை அவதானிக்கலாம்.
ஆனாலும் எமது பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் அறிந்து கொள்கின்ற வகையில் அல்லது கல்வியியலாளர்கள் சர்வதேச ஆய்வாளர்கள் இந்த தகவல்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான ஆங்கில மொழி மூலம் சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு இணைய வழி தகவல் மையம் இல்லாமை பெரும் குறைபாடாகும்.
தமிழ் மொழி மூலம் எங்கள் பிரச்சனைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வதன் ஊடாக நாம் அந்தப் பிரச்சினைகள் பற்றி உள்ளூர் மட்டத்தில் தகவல் பரப்ப முடியுமே தவிர அவற்றை சர்வதேச சமூகம் அல்லது இந்த நாட்டிலே இருக்கின்ற பெரும்பான்மை சமூகத்தின் நியாயமான ஆய்வாளர்கள் கூட புரிந்து கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
ஆனால், முஸ்லிம் சமூகம் தொடர்பான தகவல்களை முழுமையாகவும் நம்பத்தகுந்த முறையிலும் ஒரே இடத்தில் சேகரிக்கச் செய்வதற்கான தரவுத் தளங்கள் இல்லாமை ஒரு கவலையான நிலையை உருவாக்கியுள்ளது.
முன்னைய முயற்சிகளின் தோல்வி
சமூக அக்கறை உள்ள சில சகோதரர்கள் ஒன்றிணைந்து சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக முஸ்லிம் தகவல் மையம் (எம் ஐ சி) என்ற ஒன்றை ஆரம்பித்து அதில் நாளாந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக ஆவணப்படுத்துகின்ற முயற்சி இடம் பெற்றது. ஆனால் அந்த முயற்சியை தொடர்ந்து முன் கொண்டு செல்வதற்கு சமூகத்தில் உள்ள பொறுப்பு வாய்ந்த சிவில் சமூக அமைப்புகளோ அல்லது இயக்கங்களோ அல்லது அரசியல் கட்சிகளோ அல்லது பள்ளிவாயல்களோ அதற்கு அனுசரணை வழங்கியிருக்கவில்லை. அதனால் அம்முயற்சி செலற்றுப் போனது.
சர்வதேச தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்
அண்மையில் ஓர் ஆய்வுக்காக தகவல்களை முன்வைத்த பொழுது அந்த ஆய்வு தொடர்பாக அதன் தகவல்மூலம் தொடர்பாக சர்வதேச பல்கலைக்கழகங்களும் ஆய்வாளர்களும் இந்த தரவுகள் அனைத்தும் ஆங்கில மொழிமூல அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் உள்ளதா? அல்லது சர்வதேச செய்தி நிறுவனங்கள் அவை தொடர்பாக பிரசுரித்துள்ளனவா?அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஆய்வுச் சஞ்சிகைகளில் இது தொடர்பான எழுத்துக்கள் ஆங்கில மொழி மூலம் வெளியிடப்பட்டுள்ளனவா? போன்ற கேள்விகளை கேட்கின்றார்கள். இவ்வாறான முறைகளையே அவர்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆதாரபூர்வமான தகவல்களாக பார்க்கிறார்கள்.
எனவே இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சர்வதேச சமூகம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அவசியமான சந்தர்ப்பங்களில் சர்வதேச நீதியை நாட வேண்டி ஏற்படும் போது சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான இவ்வாறான தகவல்களை வழங்கும் ஒரு தகவல் மையத்தின் தேவையினை இவை உணர்த்துகின்றன.
ஆராய்ச்சியாளர்களுக்கான தடை
இலங்கை முஸ்லிம்கள் தொடர்பாக வெளிநாட்டு மாணவர்களும் ஆய்வுகளை செய்கிறார்கள். அவர்கள் முதலில் இத்தகைய தகவல்களை தேடுகிறார்கள் ஆனால், இதற்கான ஒழுங்குபடுத்தப்பட்ட சிறப்பாக தொகுக்கப்பட்ட தரவுகளை அவர்கள் பெற முடியாத நிலை காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார் பிரச்சினைகளை சர்வதேச சமூகத்தின் ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்கள் புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளை இல்லாமல் ஆக்குகின்ற சூழலை ஏற்படுத்துகின்றது. இதன் மூலம் அவர்கள் எமது பிரச்சினைகள் பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலையோ அல்லது தவறாக புரிந்து கொள்ளக்கூடிய நிலையோ ஏற்படுகின்றன.
முஸ்லிம் சிவில் சமூக
அமைப்புகளின் பங்கு
முஸ்லிம் சமூகத்தின் நலன்களுக்காக செயல்படும் சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் இத்தகைய தகவல் மையத்தை உருவாக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதில் அக்கறை இல்லாமல் இருப்பது சமூகத்தின் சிறந்த திட்டமிடல் இல்லாததன் விளைவா என்ற கேள்வியும் எழுகின்றது.
ஒட்டு மொத்தமாக பார்த்தால் எம்முடைய சிவில் சமூக நிறுவனங்கள் அல்லது அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சமூகம் சார்ந்த ஆக்கபூர்வமான ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்க தரத்திலான ஆய்வுகளையோ முன்னெடுப்புக்களையோ தகவல்களையோ தயார்படுத்தவில்லை என்பது வேதனையானது.
தீர்வு மற்றும் காலத்தின் தேவை
இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முழுமையான பிரச்சினைகளையும், மற்றும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் சர்வதேச மனித உரிமைகள் சட்டங்களின் அடிப்படையிலும் ஜனநாயகப் பெறுமானங்களின் அடிப்படையிலும் உடனுக்குடன் வெளியீடு செய்து கொண்டிருக்கின்ற சர்வதேச தரம் வாய்ந்த ‘இலங்கை முஸ்லிம் தகவல் மையம்’ ஒன்றை உருவாக்குவது அவசியமாகின்றது.இத்தகைய மையம் இலங்கையின் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் சர்வதேச சமுதாயத்திற்குக் கொண்டு செல்லும். இதன்மூலம் சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு தரவுகளை வழங்குவது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன்களுக்கும் வழிகாட்டியாக இருக்கும்.
இலங்கையில் பல திறமை வாய்ந்த முஸ்லிம் ஆளுமைகள் உள்ள நிலையில், அவர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் இது சாத்தியமாகும். இத்தகைய தகவல் மையம், இன, மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையின் அடையாளமாகவும், சமூக ஒற்றுமையின் தளமாகவும் திகழ வேண்டும்.
எனவே முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சர்வதேச தரத்திலான ஆதாரங்களுடன் ஆதரிக்கும் முஸ்லிம் தகவல் மையம் உருவாக்கம் நாளடைவில் மட்டுமல்ல, இன்றே தொடங்க வேண்டிய ஒரு அவசியமான பணியாகும்.
இந்த முயற்சியை இலங்கை தேசிய சூறா கவுன்சில் போன்ற பொதுவான அமைப்பு முன்னெடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.- Vidivelli