ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் வெற்றியளித்துள்ளதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரான அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் முதன் முறையாக இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி இலங்கையில் ஆட்சியமைத்த போது இந்தியா – இலங்கை இடையிலான உறவு எப்படி இருக்கப் போகிறது என்ற கேள்வியை பலரும் எழுப்பினர். சீன சார்பு நிலைப்பாட்டைக் கொண்ட அநுர தலைமையிலான ஆட்சி எவ்வாறு இந்தியா மற்றும் அமெரிக்காவை சமாளிக்கப் போகிறது என்ற சந்தேகம் எல்லோரிடமும் இருந்தது. எனினும் அநுரவின் இந்திய விஜயமானது அந்த சந்தேகங்களைக் களையும் வகையிலும் இந்திய இலங்கை உறவை வலுப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
குறிப்பாக “இலங்கையை இந்திய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம்” என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அளித்த வாக்குறுதி கவனிப்புக்குரியது. ஹம்பாந்தோட்டையில் சீனாவின் ஆய்வுக் கப்பல் ‘யுவான் வாங்க் 5’ நிறுத்தப்பட்டதை தனது பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக பார்த்த இந்தியாவுக்கு திஸாநாயக்கவின் இந்த வார்த்தைகள் நம்பிக்கை அளிப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை கடந்த காலங்களில் எடுத்துள்ள மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த அநுர குமார திஸாநாயக்கவின் இந்திய பயணம் தெற்காசிய பிராந்தியத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இடதுசாரியான அநுர குமார திஸநாயக்க சீனா பக்கம் சாய்வாரா அல்லது இந்தியா பக்கம் சாய்வாரா என்ற கேள்விகள் அவர் பதவியேற்றது முதல் எழுந்தன. இந்திய அமைதி படையை இலங்கைக்கு அனுப்ப வழிவகுத்த 1987 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை மக்கள் விடுதலை முன்னணி கடுமையாக எதிர்த்தது. இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டை அவசியமற்றதாக கருதிய அக்கட்சி, இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இருந்து இந்தியா விலகியிருக்க வேண்டும் என்றும் 1980களில் வலுவாக குரல் எழுப்பியது.
எனினும் தற்போது நிலைமைகள் முற்றாக மாற்றமடைந்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணி தனது கடந்த கால இறுக்கமான கொள்கைகளைத் தளர்த்தி தேசிய மக்கள் சக்தி எனும் பரந்த கூட்டணியின் கீழ் இரண்டு தேர்தல்களை வென்று பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவுடன் பகையை வளர்த்துக் கொண்டு அக் கட்சியினால் ஆட்சி செய்ய முடியாது என்பதே யதார்த்தமாகும். அதேநேரம் ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தை அரவணைத்துச் செல்ல வேண்டியதும் இந்தியா முன்னுள்ள கடப்பாடாகும்.
2022 இல் இலங்கை சந்தித்த மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து, மீள்வதற்கு இந்தியா வழங்கிய நிதியுதவி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே இந்தியா வழங்கிய ஆதரவுக்கு தாம் நன்றிக் கடன்பட்டிருப்பதாக ஜனாதிபதி அநுர தெரிவித்திருந்தார். இதேவேளை இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையிலும் ‘சாகர்’ தொலைநோக்குத் திட்டத்திலும் சிறப்பிடம் பெற்றுள்ள இலங்கைக்கு இந்தியா தனது ஆதரவை தொடர்ந்து வழங்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே இந்தியாவுக்கான விஜயத்தினை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்வுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்தியாவில் வைத்து தெரிவித்துள்ளார். அத்துடன் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் ‘இருதரப்பு-கூட்டு வெற்றி’ என்ற கோட்பாட்டுடன் அனைத்து நாடுகளுடன் உறவுகளை பேணவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். டில்லியில் உள்ள இந்தியன் பவுண்டேசனில் நடந்த நிகழ்வென்றில் பங்கேற்று உரையாற்றியபோதே வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
‘‘நாங்கள் ஒரு புதிய அரசாங்கமாக, சீனாவுடனும், இந்தியாவுடனும், அமெரிக்கா, ரஷ்யா, கியூபா மற்றும் வட கொரியா போன்ற பிற நாடுகளுடனும் நல்ல உறவைக் கொண்டிருக்கவே விரும்புகின்றோம்’’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுக்கான விஜயத்தை முன்னுரிமைப்படுத்தியிருந்தாலும், எமது அரசாங்கம் டில்லி மற்றும் பீஜிங் ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்பார்க்கின்றது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜனாதிபதி அநுரவின் பீஜிங் பயணம் ‘சீனா-இலங்கை’யின் பாரம்பரிய நட்பை மேம்படுத்தும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் என்பதோடு அது இலங்கை மக்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில் புதிய அரசாங்கம் இந்தியா – சீனா என்ற பொறிக்குள் சிக்காமல் அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கக் கூடிய நடுநிலையானதொரு வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிப்பதே வரவேற்கத்தக்கதாகும். அதுவே பொருளாதார நெருக்கடியால் துவண்டுபோயுள்ள நாட்டை மீண்டும் தூக்கி நிறுத்த வழிவகுப்பதாக அமையும்.- Vidivelli