எஸ்.எல்.எம்.சானாஸ்
எதிர்த்தரப்புக்களின் முழு வீச்சிலான விஷமப் பிரசாரங்களை முறியடித்து, பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டியதோடு, பாரம்பரிய வாரிசு அரசியலுக்கு தேசிய மக்கள் கட்சியினர் சமாதி கட்டியமை நாமறிந்ததே.
பதவியிழந்த ரணிலின் ‘வல் பாலமென் கொடவுனா பல புருது நாயகயோ’ (அழிவிலிருந்த நாட்டை நாங்களே மீட்டெடுத்தோம்) எனும் பசப்பு வார்த்தைகளை மக்கள் நம்பவில்லை. அரகல போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்கியது, ராஜபக்ஷாக்களின் ஊழல்வாதிகளை தம்மோடு இணைத்துக் கொண்டமை, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தாதது, கடந்த வருடத்தில் நடக்க ஏற்பாடாகியிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திப்போட்டமை போன்ற காரணங்களினால் முன்னாள் அரசு மண் கவ்வ நேரிட்டது.
இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கும் சஜித் அணியினரின் பாரம்பரிய அரசியல் மேடைப் பேச்சுக்கள், உறுதி மொழிகள் இளைய தலைமுறைக்கும், நடுத்தர வர்க்கத்திற்கும் மத்தியில் எடுபடவில்லை. ஏனைய சிங்களத் தலைமைகளோடு ஒப்பிடுகையில் இனவாத நோக்கமற்ற, காலை வாரும் அரசியலை விரும்பாத எதிர்க்கட்சித் தலைவர், அநுர முன்னெடுக்கும் நாட்டிற்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கும், அரசியல் சீர்திருத்தங்களுக்கும் இதய சுத்தியுடன் ஒத்துழைப்பு நல்குவதோடு, உட்கட்சிப்பூசலில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டால் மட்டுமே பிரதான எதிர்க்கட்சியின் பங்களிப்பினை நாடு பெற்றுக் கொள்ளும்.
மொட்டுக் கட்சியால் இனி மீண்டெழ வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. நாமல் பெற்றுக்கொண்ட மூன்று வீத வாக்குகள் அது அதல பாதாளத்திற்குள் விழுந்திருப்பதை உறுதி செய்துள்ளது. தள்ளாடும் மஹிந்த பொதுத் தேர்தலில் தனது எஞ்சிய அலி பாபாக்களைக் கரை சேர்க்க எடுத்த இறுதி முயற்சியும் கானல் நீராகியுள்ளது.
பதில் ஜனாதிபதித் தேர்தல் ரகசிய வாக்கெடுப்பில் தனது கட்சி உறுப்பினர் ஒருவரைத் தெரிவு செய்திருப்பின் பொதுஜன பெரமுன பிளவடையாமல் தேர்தலைச் சந்தித்து 15 இலட்சம் வாக்குகள் பெற வாய்ப்புக்கள் இருந்தன. ரணிலின் தெரிவு இறுதியில் தேசிய மக்கள் சக்தியினரின் எழுச்சிக்குக் கூடுதல் வழிவகுத்து மஹிந்த குடும்பத்தைத் தெருவில் நிறுத்தியுள்ளது.
அதேவேளை அரசியல் படுகொலைகள், பெருவாரியான ஊழல்கள், ஈஸ்டர் தாக்குதல் ஆகிய தொடரான வழக்குகளுக்கு முகம் கொடுத்து இவர்கள் எப்படி மீளெழப் போகின்றார்கள்? என்பதற்குக் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
எது எப்படியோ கடந்த பொதுத் தேர்தல் எதிர்க்கட்சியினருக்கு ஒரு அமிலப் பரீட்சையாக முடிந்து கைகளை பொசுக்கிக் கொண்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையுடன் அநுர தரப்பு முன்னெடுத்த அதிரடி நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டியதுடன் பொதுத் தேர்தலில் ஓர் அசாதாரண வெற்றியை ஈட்டிக் கொடுத்தது.
எனினும் ரணில்–சஜித் தரப்புக்களின் இனவாதமற்ற, நியாய சிந்தனையுள்ள வாக்காளர்களின் பெரும் பகுதி (வாக்களிப்பதைத் தவிர்த்த கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வாக்காளர்கள் உட்பட) அநுர தரப்பைச் சென்றடையாததும், ‘உடனுக்குடன்’ மாற்றத்தை எதிர்பார்க்கும் மொட்டுவின் மலிவான சிந்தனையுள்ள பெரும்பாலானவர்களே தே.ம.சக்தியினருக்கு வாக்களித்திருப்பதும் ஆரோக்கியமான விடயங்களல்ல.
அதே நேரம் அமைச்சுக்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட விதமும் எண்ணிக்கையும் (தேர்தல் கால வாக்குறுதிகளின் படி) நாட்டு மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு அமைச்சுப் பதவியாவது முஸ்லிம் சமூகத்திற்கு வழங்கப்படாதது குறித்து சலசலப்புக்கள் தோன்றியுள்ளன.
1977களுக்குப் பின் ஐ.தே.க (தற்போதைய ஐ.ம.ச.) இற்கு நிரந்தர வாக்கு வங்கியாக இருந்த முஸ்லிம்களின் கணிசமான வாக்குகள் தே.ம.சக்தியினருக்கு இம்முறை வழங்கப்பட்டிருப்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன. அமைச்சுப் பொறுப்புக்களின் தேவைகளுக்கப்பால் ஒரு பிரமாண்ட வெற்றியின் காத்திரமான பங்காளிகளை கௌரவிக்கவும் (தமிழர் தரப்பு அமைச்சுப் பதவிகள் பெற்றிருந்த நிலையில்) தே.ம.சக்தியினரின் நீண்ட அரசியல் பயணத்தில் முஸ்லிம்களை நிரந்தரமாக இணைத்துக் கொள்ளவும் கிடைத்த ஒரு சந்தர்ப்பத்தினை அரசு மேலிடம் அடையாளம் காணத் தவறியமை ஒரு சறுக்கலே.
ஜனரஞ்சகரமான விடயங்களுக்குச் சமாந்தரமாக நடைமுறையிலுள்ள ஒரு சில விடயங்களுக்கும் முன்னுரிமை வழங்காமல் விடுவது தே.ம.சக்தியினரின் எதிர்கால அரசியல் வெற்றிகளையே வலுவிழக்கச் செய்யும். அனைத்து இனங்களின் ஆதரவோடும் மாபெரும் வெற்றியீட்டிய அரசு, பாராளுமன்றத்தின் சபாநாயகர் பதவிக்கு ஒரு சிறுபான்மை இனப்பிரதிநிதியைச் சிபாரிசு செய்து அரசியல் முன்மாதிரியை வெளிப்படுத்தியிருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் கடந்த கால அரசுகளோடு தற்போதைய ஆட்சி பீடத்தை நாம் ஒப்பிட வேண்டியதில்லை. எந்த இனத்திற்கும் அநீதி இழைக்கப்படமாட்டாது எனும் ஜனாதிபதியின் வார்த்தையைத் திடமாக நம்பலாம்.
தே.ம.சக்தியினருக்கு (முஸ்லிம்கள் உட்பட) ஆணை வழங்கிய நாட்டு மக்கள் நீண்ட பட்டியல் ஒன்றையும் முன்வைத்திருக்கிறார்கள். வாழ்க்கைச் சுமை, பாரிய கடன், புரையோடிப் போயிருக்கும் இனவாதம், ஊழல், துஷ்பிரயோகம் என இந்நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களை முறியடிக்கக் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பு கைநழுவுமானால் சட்டியிலிருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாகிவிடும்.
பதவியிழந்துள்ள முன்னாள் தலைவர்களும், பாரம்பரியக் கட்சிகளும் காலை வாரத் தருணம் பார்த்திருக்கையில் எமது சமூகம் நிதானப்போக்கைக் கடைப்பிடித்தல் காலத்தின் கட்டாயமாகும். தொடர்ச்சியான விமர்சனங்களைத் தவிர்த்து மக்கள் பிரதிநிதிகளுடன் மட்டுமே இக்கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்வது விவேகமானது.
பதவியில் அமர்ந்துள்ள ஜனாதிபதியின் முன் பல சவால்கள் இருப்பினும் வீழ்ச்சியுற்றிருக்கும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியை வெளிக் கொணர்வது, அமெரிக்கா, இந்தியா உட்பட மேற்குலகத்தைத் திருப்திப்படுத்துவது என்பன கடின இலக்குகளாகும்.
சர்வதேச நாணய நிதியத்தோடு எட்டப்பட்டிருக்கும் இணக்கப்பாடுகளை சிறந்த முறையில் கையாள்வது, உள்நாட்டு உற்பத்தியையும் ஏற்றுமதிப் பொருளாதாரத்தையும் அதிகரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிவது, நாடு கடந்து வாழும் இலங்கையர் உட்பட அந்நிய முதலீட்டாளர்களை இங்கு அழைத்து வருதல் போன்ற பணிகளைக் கிரமமாக முன்னெடுப்பாராயின், நாட்டின் பொருளாதாரத்தை அவரால் மீட்டெடுக்க முடியும். ஊழலிற்கு எதிரான ஜனாதிபதியின் கடும்போக்கும் அதற்குக் கைகொடுக்கும்.
கத்தோலிக்கர்களின் படுகொலைகளுக்குப் பின்னால் மொசாட்டும் பிராந்திய வல்லரசொன்றும் தொடர்புபட்டுள்ளது எனும் செய்தி அரசிற்கு நல்ல சமிக்ஞையல்ல. ஈஸ்டர் பண்டிகைத் தாக்குதலோடு சம்பந்தப்பட்டு மாயமானதாக நம்பப்படும் சாரா எனும் புலஸ்தினி ராஜேந்திரனின் வகிபாகம் வெளிச்சத்திற்கு வருவதை இச்சக்திகள் விரும்புமா?
பதவியேற்றிருக்கும் இவ்விடதுசாரிகளின் வருகையை ஆரம்பம் தொட்டே உலக, பிராந்திய வல்லரசுகள் இரண்டும் விரும்பவில்லை. சந்திப்புக்களும் கைகுலுக்கல்களும் சம்பிரதாயத்திற்குத்தான் இடம்பெற்றனவேயொழிய மனப்பூர்வமாகவல்ல. ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் – -ரணில் தரப்பை இணைக்கும் முயற்சிகள் அமெரிக்க தூதரகத்தால் முன்னெடுக்கப்பட்டு வந்ததை சில ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.
மேற்குலகோடு தொடர்புகளைப் பேணும் பிரதான எதிர்க்கட்சியினருடன் அரசு இணக்கப்பாட்டுடன் செயற்படுதல் விவேகமானது. மக்களால் நிராகரிக்கப்பட்டாலும் வல்லரசுகள் விரும்பும் ரணில்-–ராஜபக்ஷாக்களின் தில்லு முல்லுகளை நீர்த்துப் போகச் செய்ய தே.ம.சக்தியினருக்கு இருக்கும் தெரிவும் இதுவே. புவிசார் அரசியல் விளையாட்டில் அநுபவமற்ற அநுரவை ஒரம் கட்ட ரணில் டில்லியைப் பயன்படுத்துவார் என ஒரு செய்தி வெளியாகியுள்ளது
இம்ரான்கானின் PTI கட்சியினர் (அனைத்து கட்சிகளுக்கும் ஊழலுக்கும் எதிராக) சென்ற தனி வழிப்பயணம் (London plan எனும் சதிக்கு வழியமைத்து) பாகிஸ்தானின் ஒரு சிறந்த தலைவரான இம்ரான்கானை தனிமைப்படுத்துவதற்கு காரணமானதை NPP யினர் ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்.
உள்நாட்டில் நிர்வாகத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் அதேவேளை வெளிச் சக்திகளுடன் முரண்படாமலும் (சிறந்த வெளியுறவுக் கொள்கை யொன்றினூடாக) அநுர அரசினால் பயணிக்க முடியுமாயின் அது நாட்டிற்கு நலவாக அமையும். – Vidivelli