போர்க் குற்றவாளிகள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்து ஆணை: உலகளாவிய ரீதியில் தனிமைப்படுத்தப்படும் இஸ்ரேலும் அமெரிக்காவும்..

0 52

எம்.எம். சுஹைர்
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி)

கடந்த நவம்பர் 21ஆம் திகதி சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்றம் ஏகமன­தாக மேற்­கொண்ட தீர்­மா­னத்தின் படி இஸ்ரேல் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்யாஹு மற்றும் இஸ்­ரே­லிய முன்னாள் பாது­காப்பு அமைச்சர் யோவ் களான்ட் (Yov Gallant) ஆகி­யோரை கைது செய்­வ­தற்­கான பிடி­வி­றாந்து ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வை தொடர்ந்து இஸ்­ரேலும் அதனைப் பின்­பு­லத்தில் நின்று ஆத­ரிக்கும் அமெ­ரிக்­காவும் உலக அரங்கில் குறிப்­பி­டத்­தக்க வகையில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதே­வேளை ஐரோப்­பாவின் சக்­தி­மிக்க பல நாடுகள் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் இத்­தீர்ப்­பா­னது மதித்து செயற்படுத்­தப்­பட வேண்டும் என்றும் கருத்து வெளி­யிட்­டுள்­ளன.

ஐரோப்­பிய ஒன்­றியம் தவிர பிரிட்டன் கனடா, பிரான்ஸ், போர்த்­துக்கல், நெதர்­லாந்து, ஸ்பெயின், இத்­தாலி, சைப்ரஸ், அயர்­லாந்து, பின்­லாந்து, செக் குடி­ய­ரசு மற்றும் ஸ்லோவே­னியா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு எல்­லையில் நெதன்­யாஹு மற்றும் களான்ட் ஆகி­யோரில் யாரேனும் நுழைந்தால் உட­ன­டி­யாக கைது செய்­யப்­ப­டு­வார்கள் என்று பகி­ரங்க அறிக்­கை­களை வெளி­யிட்­டுள்­ளன.

ஐக்­கிய நாடுகள் சபையின் அங்­கீ­காரம் பெற்று கிட்­டத்­தட்ட 124 நாடுகள் கையெ­ழுத்­திட்டு ரோம் சாச­னத்தின் படி உரு­வாக்­கப்­பட்ட சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் அனைத்து பிடி­வி­றாந்து ஆணை­க­ளையும் தங்கள் பிராந்­தி­யங்­களில் செயல்­ப­டுத்த இந்­நா­டுகள் கட­மைப்­பட்­டுள்­ளன. இச் சர்­வ­தேச ரோம் சாச­னத்தில் அமெ­ரிக்கா, இஸ்ரேல் மற்றும் இலங்கை உள்­ளிட்ட நாடுகள் கையெ­ழுத்­தி­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்க ஒரு விட­ய­மாகும்.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­ற­மா­னது தனது அறிக்­கையில் “இஸ்­ரே­லிய பிர­தமர் நெதன்­யாஹூ மற்றும் பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்த களாண்ட் ஆகியோர் மற்­ற­வர்­க­ளுடன் இணைந்து குற்றச் செயல்­களை செய்­வ­தற்கு துணை புரிந்­தார்கள் என்றும் கொலை, துன்­பு­றுத்தல், அப்­பாவி மக்­களை பட்­டி­னியால் வதைத்தல் மற்றும் மனி­தா­பி­மா­ன­மற்ற செயல்­களில் ஈடு­பட்­டமை போன்ற குற்­றங்­களை இழைத்­ததன் மூலம் இவர்கள் ஒவ்­வொ­ரு­வரும் தனித்­த­னி­யாக போர்க் குற்­றத்­திற்­கான பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதில் “மற்­ற­வர்கள்” என்று தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­னது, எனது பார்­வையில் இஸ்­ரே­லிய அமைச்­ச­ரவை அமைச்­சர்கள், தேசிய பாது­காப்பு ஆள­ணி­யினர், இஸ்­ரே­லிய பாது­காப்புப் படை­யினர், ஆயுதம் தாங்­கிய படைப்­பி­ரி­வினர், மற்றும் குறிப்­பாக இலங்­கையில் சுற்­றுலாப் பய­ணிகள் என்ற பெயரில் தங்கி இருப்­ப­தாக நம்­பப்­படும் கொலை, துன்­பு­றுத்தல், மற்றும் மனி­தா­பி­மா­ன­மற்ற செயற்­பா­டு­களில் ஈடு­படும் சில நபர்கள் ஆகி­யோ­ரையும் குறிக்­கி­றது.

மேலும் இதில் “மற்­ற­வர்கள்” என்­பதில் இக்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு பின்­ன­ணியில் நின்று உதவும் ஐக்­கிய அமெ­ரிக்­காவும் உள்­ள­டக்­கப்­பட வேண்டும். எனினும் அமெ­ரிக்­கா­வையோ அல்­லது அதன் ஜனா­தி­பதி ஜோ பைட­னையோ இதில் தொடர்­பு­ப­டுத்­து­வது விவே­க­மற்­றது என்று இன்னும் பலர் நம்­பு­கி­றார்கள்.

இதே­வேளை, பலஸ்­தீ­னர்கள் மீதான இஸ்­ரேலின் படு­கொ­லைகள் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் பிடி­வி­றாந்­து­க­ளையும் மீறி தினம் தினம் நடை­பெற்றுக் கொண்டே இருக்­கின்­றன.

இலங்­கையில் யூதர்கள் அல்­லது இஸ்­ரே­லி­யர்கள் உள்­ளிட்ட அனைத்து தரப்­பி­னரும் சுற்­றுலாப் பய­ணிகள் என்ற பெயரில் வர­வேற்­கப்­பட்­டாலும் இலங்­கையின் தேசிய நலன் மற்றும் சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் பரிந்­து­ரைகள் ஆகி­ய­வற்றைக் கருத்தில் கொண்டு இஸ்­ரேலின் ஆயு­தப்­படை சார்ந்த நபர்கள் இலங்­கைக்குள் உள்­நு­ழை­வது தடுக்­கப்­பட வேண்டும். இலங்­கை­யா­னது ரோம் ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டாத போதிலும் சர்­வ­தேச சட்­டங்­களை மதிக்கும் ஓர் அம்­ச­மாக இதனை நடை­மு­றைப்­ப­டுத்த முன்­வர வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

2023 ஆம் ஆண்டு ஒக்­டோபர் 8ம் திகதி முதல் 2024 நவம்பர் 23ம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் மொத்­த­மாக 44,056 பலஸ்­தீன மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். இதில் பெண்­க­ளி­னதும் சிறு­வர்­க­ளி­னதும் எண்­ணிக்கை அதி­க­மாகும். இதே­வேளை இவ்­வெண்­ணிக்­கையில் இஸ்­ரேலின் குண்­டுத்­தாக்­குதல்களுக்கு இலக்­காகி கட்­டிட இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­குண்­ட­வர்கள் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்­லை­யென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இதன்­படி சரா­ச­ரி­யாக ஒவ்­வொரு நாளும் 108 படு­கொ­லைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஆனால் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதி சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கா­னது, தீர்ப்­பினை பெறு­வ­தற்கு ஆறு மாத காலங்­க­ளுக்கு மேற்­பட்ட காலம் காத்­தி­ருக்க வேண்­டி­யி­ருந்­தமை கவ­லைக்­கு­ரி­யது.

இந்தப் பிடி­யா­ணை­யா­னது “தெய்ப்” (Deif) என்று அறி­யப்­படும் ஹமாசின் இரா­ணுவ கட்­டளை தள­பதி இப்­ராஹிம் அல் மஸ்­றியின் (Ibrahim Al-Masri) மீதும் தனி­யான ஒரு தீர்ப்­பாக விடுக்­கப்­பட்­டுள்­ளது. அவர் ஏற்­க­னவே இஸ்­ரே­லினால் கொல்­லப்­பட்­டுள்ளார் என்று தெரி­விக்­கப்­பட்ட போதும் நீதி­மன்­றத்­தினால் அது கருத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை.

சிலி நாட்டின் சர்­வா­தி­கார தலை­வ­ராக இருந்து பல மனித உரிமை மீறல்­க­ளுக்கு துணை புரிந்­த­தாக சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தினால் குற்­ற­வா­ளி­யாக அடை­யாளம் காணப்­பட்டு இப்­ப­டி­யான ஒரு பிடி­வி­றாந்து பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்த ஜெனரல் அகஸ்டோ பினோசெட் (General Augusto Pinochet) ஒரு பய­ண­மாக பிரித்­தா­னியா சென்­றி­ருந்­த­போது 1998 ஆம் ஆண்டு அந்­நாட்டின் லண்டன் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அந்தக் காலப்­ப­கு­தியில் பிரித்­தா­னி­யாவின் டெலி­கிராப் பத்­தி­ரிகை, அவர் கைது செய்­யப்­ப­டா­தி­ருந்தால் பிரித்­தா­னி­யாவின் குற்­ற­வியல் நீதி­மன்ற நீதி­ப­திகள் வேலை நிறுத்தம் செய்­வ­தற்கு தயா­ராக இருந்­தார்கள் என்று தெரி­வித்­தி­ருந்­தது.

தற்­போது வெளி­யேறிச் செல்ல தயா­ராக இருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோ பைடன் , சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் இத் தீர்ப்பை “மூர்க்­கத்­த­ன­மா­னது” என்று வர்­ணித்­தி­ருக்­கிறார். தினமும் சரா­ச­ரி­யாக 108 பலஸ்­தீ­னர்கள் கொல்­லப்­படும் நிகழ்வை அவர் ஒரு பொருட்­டா­கவே கரு­த­வில்லை என்­பது இதி­லி­ருந்து வெளிப்­ப­டு­கின்­றது. ஏனெனில் எவ்­விலை கொடுத்­தா­வது முஸ்லிம் நாடு­களை உள்­ள­டக்­கிய மத்­திய கிழக்கை தனது பூரண கட்­டுப்­பாட்டில் வைத்­துக்­கொள்­வ­தற்­காக அமெ­ரிக்கா இஸ்­ரேலை ஒரு கால­னித்­துவ செயற்­திட்­ட­மா­கவே இது­வரை பயன்­ப­டுத்தி வரு­கின்­றது.

அதே நேரம், புதி­தாக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தனது அமெ­ரிக்­கா­விற்­கான புதிய இஸ்­ரே­லிய தூது­வ­ராக மைக் ஹக்­கபி (Mike Huckabee) யினை நிய­மிக்க உள்­ள­தாக யாஹூ (Yahoo) தகவல் தெரி­வித்­துள்­ளது. இவர் பழ­மை­வாத கிறிஸ்­தவ போத­கர்கள் மத்­தியில் பிர­பல்­ய­மிக்க ஒரு நப­ரா­க­வி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மேலும் அவர்­களில் பலர் பைபிளின் பழைய ஏற்­பாட்டின் பிர­காரம், யூதர்­களை கட­வுளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்கள் என்றும் இஸ்ரேல் அவர்­க­ளது உரிமைமிக்க தாயகம் என்றும் கூறப்­ப­டு­வதை ஏற்றுக் கொள்­ப­வர்கள் என்­பது இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

இங்கு மத­ரீ­தி­யாக நாம் கவ­னிக்க வேண்­டிய மற்­று­மொரு முக்­கிய விடயம் உள்­ளது . இஸ்­ரே­லி­யர்கள் தாம் நம்­பிக்கை கொள்ளும் பைபிளின் பழைய ஏற்­பாடு, ஆதி­யா­கமம் 17 : 8 இல் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒரு வச­னத்தை தவ­றான விளக்­க­வு­ரைக்கு உட்­ப­டுத்­து­கி­றார்கள். அதா­வது ஆபி­ர­கா­முக்கு (நபி இப்­ராஹிம் – அலை) இறை­வனின் வாக்­கு­று­தி­யாக வழங்­கப்­பட்ட ஒரு வச­ன­மா­கிய “நான் உனக்கும் (ஆபி­ரகாம் என்று பொருள்­படும்) உனது சந்­த­திக்கும் நீ தற்­போது அந்­நி­யப்­ப­டி­ருக்கும் கானான் (பலஸ்தீன்) முழு­வ­தையும் வாழ்நாள் முழுதும் நிலைத்து நிற்கும் உரிமை உடைய நில­மாகக் கொடுப்பேன்” என்ற வச­னத்தை தமக்கு மாத்­திரம் வாக்­க­ளிக்­கப்­பட்ட நில­மாக பலஸ்தீன் இருப்­ப­தாக அவர்கள் அர்த்தம் கொடுக்­கின்­றனர். ஆனால் பைபிளின் பழைய ஏற்­பாட்­டிலும் புதிய ஏற்­பாட்­டிலும் இவ்­வ­ச­னத்­திற்கு மாற்­ற­மாக உள்ள பல விட­யங்­களை அவர்கள் ஏற்க மறுக்­கின்­றனர். பழைய ஏற்­பாட்டின் ஆதி­யா­கமம் 17:8 வச­னத்­தினை நாம் தனி­யாக எடுத்துக் கொண்டால் கூட அதில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ள­தா­வது “ஆபி­ரகாம் மற்றும் அவ­ருக்குப் பின் அவ­ரு­டைய சந்­ததி (அவ­ரது பிள்­ளைகள்)” என்று கூறப்­ப­டு­கின்­றது.

இன்னும் தெளி­வாக கூறினால், இப்­ராஹிம் நபியின் மக­னா­கிய இஸ்­மாயில் நபியின் பிள்­ளை­களில் அரே­பி­யர்கள் அடங்­கு­கி­றார்கள். அவரின் பரம்­ப­ரையில் வந்த முஹம்­மது நபி (அலை) அவர்கள் மூல­மாக அரே­பிய வழித் தோன்­றல்­க­ளான முஸ்­லிம்கள் மற்றும் கிறிஸ்­த­வர்கள் ஆகி­யோரும் அடங்­கு­கி­றார்கள். இவ்­வி­ரு­சா­ரா­ரையும் புறக்­க­ணிப்­ப­தற்­காக சியோ­னி­ச­வா­திகள் அவ் வச­னங்­க­ளுக்கு தவ­றான விளக்கம் கற்­பிக்­கி­றார்கள்.
1897ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட சியோ­னிச கூட்­ட­மைப்­புக்கு சுமார் 108 ஆண்­டு­க­ளுக்கு முன்பு, அதா­வது 1917 ஆம் ஆண்டு பலஸ்­தீனை ஆக்­கி­ர­மித்த பிரித்தானியாவின் காலனித்துவ சக்திகள் எழுதிய கடிதமொன்றில், பலஸ்தீனில் இஸ்ரேலை ஒரு தனி நாடாக உருவாக்க, பிரித்தானிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று அறிவித்திருந்தது.

1917 ஆம் ஆண்டு வரை சுதந்திர பலஸ்தீனில், அரபு முஸ்லிம்கள் (81%), அரபுக் கிறிஸ்தவர்கள் (11%) மற்றும் யூதர்கள் (8%) என்ற விகிதத்தில் அனைவரும் அமைதியாகவே வாழ்ந்தனர். அதே சமயம் இஸ்ரேல் என்ற தேசம் உலக வரைபடத்திலேயே இருக்கவில்லை. ஆனால் இன்று பலஸ்தீன் ஐக்கிய நாடுகள் சபையில் “பார்வையாளர் அந்தஸ்து” மாத்திரம் பெற்ற நாடாக, அதுவும் 2012 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு, ஒரு வலி மிகுந்த மரணத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. அதே நேரம் மேற்கின் காலனித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது இனவாத தேசமாகிய இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டு அதன் முழுமையான அங்கத்துவமும் பெற்று மத்திய கிழக்கிலேயே அணு ஆயுத சக்தியை கொண்டுள்ள ஒரே ஒரு நாடாக இன்று உலக அரங்கில் வீற்றிருக்கின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.