கிழக்கின் உயர் பதவிகளுக்கு முஸ்லிம்களை உள்வாங்கிய ஆளுநர்
றிப்தி அலி
கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவினால் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்த மாகாண அமைச்சுக்களுக்கு நிரந்த செயலாளர்கள் நியமிக்கப்படாமல் இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஒன்றினைச் சேர்ந்த அதிகாரிகள் பதில் கடமையாற்றி வந்தார்கள்.
இவ்வாறான நிலையிலேயே தற்போது இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்தினைச் சேர்ந்த நிரந்த செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்திலுள்ள இன விகிதாசாரத்துக்கு அமைய இந்த நியமனங்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைய பின்வருவோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண சபையில் பிரதம செயலாளர், வீதி அபிவிருத்தி அமைச்சு, சுகாதார அமைச்சு, விவசாய அமைச்சு, பேரவைச் செயலகம், முதலமைச்சு, பொதுச் சேவைகள் ஆணைக்குழு, ஆளுநர் செயலகம் மற்றும் கல்வி அமைச்சு ஆகிய ஒன்பது முக்கிய நிறுவனங்கள் காணப்படுகின்றன.
இவற்றுக்கான செயலாளர் பதவிகள் 3:3:3 என்ற விகிதிசாரத்தில் பங்கிடுவதே வழமையாகும். இதுவொரு எழுதப்படாத விதியுமாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வியத்மக அமைப்பின் உறுப்பினரான அனுராத யஹம்பத் ஆளுநராக இருந்த காலப் பகுதியில் இந்த எழுதப்படாத விதி மீறப்பட்டது.
குறிப்பாக முஸ்லிம் சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கிலேயே இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டது. அனுராதா யஹம்பத்தினைத் தொடர்ந்து ஆளுநராக வந்த செந்தில் தொண்டமானும் இந்த எழுதப்படாத விதியினை மீறியே செயற்பட்டார்.
குறிப்பாக, அவருக்கு விருப்பமான கனிஷ்ட தரத்தினைச் சேர்ந்தவர்களை சிரேஷ்ட பதவிக்கு பதில் கடமையாற்றுவதற்காக நியமித்தார். அதே நேரம், முஸ்லிம் சிவில் அதிகாரிகளுக்கு பதவிகள் எதுவும் வழங்காமல் ஓரப்படுத்தினார்.
இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரிகளான ஏ.எம். மன்சூர் மற்றும் எம்.எம். நசீர் போன்றோருக்கு முக்கிய எந்தப் பதவிகளும் முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானினால் வழங்கப்படவில்லை.
இதற்கு எதிராக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களை அடுத்து மேற்படி இரண்டு மூத்த அதிகாரிகளுக்கும் மாகாண அமைச்சுக்களின் செயலாளர் பதவிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறான நிலையில் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து, மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு, மாகாண வீடமைப்பு அதிகார சபை, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, மாகாண சுற்றுல்லா பணியகம், மாகாண முன் பள்ளி கல்விப் பேரவை மற்றும் மாகாண கூட்டுறவு உத்தியோகத்தர்கள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் புதிய ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர்.
மேற்படி நிறுவனங்களின் தலைவர் பதவிக்கு முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் கூட ஆரம்பத்தில் உள்வாங்கப்படவில்லை. இது பாரிய சர்ச்சையினை தோற்றுவித்தது. இதன் காரணமாக மாகாண முன் பள்ளி கல்விப் பேரவையின் தலைவராக முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்த ஒருவர் கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டார்.
இவ்வாறான நிலையில் பாராளுமன்றத் தேர்தலின் பிற்பாடு நிறுவப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் அமைச்சரவையில் முஸ்லிம் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்பதும் பாரிய விமர்சனத்துக்குள்ளாகி இருந்தது. அதேவேளை, அஷ்ஷெய்க் முனீர் முழப்பருக்கு பிரதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனத்திலும் ஆரம்பத்தில் முஸ்லிம்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இதற்கு எதிராகவும் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான வை.எல். நவவி, விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இப்படியான சூழ்நிலையிலேயே கிழக்கு மாகாண அமைச்சுக்களுக்கான நிரந்த செயலாளர்கள் ஆளுநரினால் நியமிக்கப்பட்டனர்.
இந்த நியமனங்கள் அங்கு வாழும் இனங்களின் விகிதிசாரத்தின் அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. ஆளுநரின் இந்த செயற்பாடு தற்போது வரவேற்கப்படுகின்றது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற நியனமங்களும் இந்த அடிப்படையிலேயே இடம்பெற வேண்டும் என்றே கிழக்கு மாகாண மக்கள் விரும்புகின்றனர்.
அதேவேளை, முன்னாள் ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் நெருங்கிச் செயற்பட்டு அவருடைய தவறான தீர்மானங்களுக்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகள் தற்போதைய ஆளுநரினால் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதுவுமொரு சிறந்த செயற்பாடாகும்.
சட்டங்கள், நிதிப் பிரமாணங்கள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றினை மீறியே முன்னாள் ஆளுநர் செந்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு குறித்த அதிகாரிகளும் உடந்தையாக இருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இவ்வாறான நிலையிலேயே சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளராக டாக்டர் அனில் ஜயசிங்க, கடந்த திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார். மருத்துவ நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான இவர், கொரோனா வைரஸ் பரவல் காலப் பகுதியில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக செயற்பட்டார். அக்காலப் பகுதியில் ஊடகங்களில் மிகவும் பிரபல்யமானவராக இவர் காணப்பட்டார். இவரது செல்வாக்கு அதிகரிப்பதை விரும்பாத சிலரின் அழுத்தங்களால் சுற்றாடால் அமைச்சின் செயலாளராக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
பதவியுயர்வு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனம் பதவி இறக்கமாகவே நோக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அமைச்சின் செயலாளராக இவர் நியமிக்கப்பட்டமை பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன் சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன.
குறிப்பாக பலவந்த ஜனாஸா எரிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களில் ஒருவராக இவரும் உள்ளமையினால் குறித்த பதவியிலிருந்து இவர் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.
இதேவேளை, பலவந்த ஜனாஸா எரிப்பின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அதேபோன்று இதற்கு காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அக்காலப் பகுதியில் முக்கிய பதவி வகித்தவர் மீண்டும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் ஊடாக பலந்த ஜனாஸா எரிப்பிற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பாதுகாக்கப்படுவார்களா என்ற சந்தேகமும் தோன்றியுள்ளது. எவ்வாறாயினும், தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளித்தது போன்று பலந்த ஜனாஸா எரிப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் கடமையாகும்.- Vidivelli