மாவனெல்லை சிலை உடைப்பு விவகாரம்: தலைமறைவாகியுள்ள இரு சந்தேக நபர்களை புலனாய்வுத்துறை தொடர்ந்தும் தேடுகிறது
தீவிரவாத குழுக்கள், அரசியல் தரப்புகளின் பின்னணி குறித்தும் விசேட விசாரணை
மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரு பிரதான சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் தேடி வருகின்றனர். இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே மேலும் இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான புலனாய்வு விசாரணைகளை கண்காணிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர மாவனெல்லைக்கு விஜயம் செய்துள்ளார்.
இவருடன் விசேட புலனாய்வாளர்கள் அடங்கிய குழுவொன்றும் அப்பகுதிக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் சகலரும் விரைவில் கைது செய்யப்படுவரென குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் சமூகங்களுக்கிடையில் பதற்றத்தை தோற்றுவிக்கும் நோக்கில் செயற்படும் தீவிரவாதக் குழுவொன்றின் உறுப்பினர்களா என்பதையும் இவர்களின் பின்னணியில் ஏதேனும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் நோக்கிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள்களிலேயே புத்தர் சிலைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்றுள்ளதாகவும் சுத்தியல்களைப் பயன்படுத்தியே சிலைகளை உடைத்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இவ்வாறு சிலைகளை உடைக்கப் பயன்படுத்திய இரண்டு சுத்தியல்களும் சந்தேக நபர்கள் வழங்கிய தகவல்களுக்கிணங்க கைப்பற்றப்பட்டுள்ளன.
சகல சந்தேக நபர்களும் மாவனெல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்களாவர் என பொலிசார் தெரிவிக்கின்றனர். இவர்கள் மாவனெல்லையின் ரந்திவெல மற்றும் மஹாகத்தேகமவின் ஹிங்குல ஆகிய இரு பிரதேசங்களின் சந்திகளிலுள்ள சிலைகளை உடைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
டிசம்பர் 26 ஆம் திகதி அதிகாலையில் சிலையொன்றை உடைத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இளைஞர் ஒருவரைப் பிடித்து பிரதேசவாசிகள் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞர் வழங்கிய வாக்குமூலத்திற்கமைய ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இருவர் தாமாக முன்வந்து பொலிசில் சரணடைந்தனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.
இதேவேளை, குறித்த சந்தேக நபர்களுக்கும் வெலம்பொட, கடுகஸ்தோட்டை, பேராதெனிய, பொத்துஹர பிரதேசங்களில் உள்ள கோவில்கள் மற்றும் சிலைகளை உடைத்த சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா எனும் கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli