தப்லீக் ஜமாஅத் பணிகளுக்காக இலங்கைக்கு வருகை தந்த இந்தோனிஷிய பிரஜைகள் எண்மர் அண்மையில் நுவரெலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட விவகாரம் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்த அறிக்கையில் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர். கைது செய்யப்பட்ட சமயம் இவர்களது கைகளில் கடவுச்சீட்டுக்களோ வீசாக்களோ இருக்கவில்லை எனத்தெரிய வருகிறது. எனினும் இவர்களது வீசாக்களை நீடிப்புச் செய்வதற்காக கடவுச் சீட்டுக்கள் கொழும்பிலுள்ள தப்லீக் தலைமையகத்தில் இருந்ததாகவும் சம்பவத்தைத் தொடர்ந்து அவை உடனடியாக நுவரெலியா பொலிசாரிடம் கையளிக்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.
அண்மையில் பொத்துவில் அறுகம்பே பகுதியில் இஸ்ரேலியர்கள் தமது வீசா விதிமுறைகளை மீறி யூத சமய வழிபாடுகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதன்போது இவ்வாறு பலர் கைது செய்யப்பட்டதாக எந்த தகவல்களும் வெளிவரவில்லை. எனினும் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன. இப்பின்னணியில் பார்க்கும்பேது தப்லீக் பணியாளர்கள் விடயத்தில் பொலிசார் ஏதேனும் அழுத்தங்களின் கீழ் செயற்பட்டுள்ளனரா என்ற சந்தேகத்தை பலரும் எழுப்புகின்றனர். வீசா விதிமுறைகளை மீறும் சகல நாட்டுப் பிரஜைகள் மீதும் சட்டத்தை சரிசமமாகப் பயன்படுத்த வேண்டியது பொலிசாரின் கடப்பாடாகும்.
இதனை மீறும் பொலிசாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து மத பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதனை விடவும் இலங்கையிலுள்ள இஸ்லாமிய பிரசார அமைப்புகள் வெளிநாட்டுப் பிரசாரகர்களை இலங்கைக்கு வரவழைப்பதை தாமாகவே தவிர்ந்து கொண்டிருந்தன. எனினும் நிலைமைகள் சீராகியுள்ள நிலையில் தப்லீக் பணிகளுக்காக பல நாடுகளிலிருந்தும் பணியாளர்கள் இலங்கைக்கு வருகை தருவதை அவதானிக்க முடிகிறது. இவர்கள் இலங்கைக்கு வருகை தருவது தொடர்பில் கொழும்பிலுள்ள மர்கஸ் தலைமையகம் மூலம் முன்கூட்டியே குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்து அனுமதியைப் பெற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேஷியர்கள் விடயத்திலும் கடந்த ஒக்டோபர் மாதமே இதற்கான எழுத்து மூல அனுமதிக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.
எது எப்படியிருந்த போதிலும் இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து இஸ்லாமிய மார்க்கப் பிரசாரகர்களோ அல்லது பணியாளர்களோ வருவது தொடர்பில் நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஏகோபித்த முடிவுக்கு வருவதே ஆரோக்கியமானதாகும். உலகளாவிய ரீதியில் இவ்வாறான இஸ்லாமிய பிரசாரப் பணிகள் அவசியம் என்கின்ற போதிலும் அந்தந்த நாடுகளின் சூழ்நிலைகள் மற்றும் சட்ட திட்டங்களை கவனத்திற் கொண்டு செயற்படுவதே அனைவருக்கும் பாதுகாப்பானதாகும்.
கடந்த காலங்களில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய நிறுவனங்களின் அழைப்பின் பேரில் பிரசாரகர்களாக இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பில் முஸ்லிம்கள் மத்தியிலும் பிற சமூகத்தினர் மத்தியிலும் ஏற்பட்ட சலசலப்புகள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். சில பெளத்த தீவிரப் போக்காளர்கள் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் முஸ்லிம் ஆன்மீகத் தலைவர்கள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததையும் நாம் அறிவோம். தற்போது நிலைமைகள் சுமுகமடைந்துள்ள போதிலும் எதிர்காலத்தில் இனவாத சக்திகளுக்கு தீனி போடாதவாறு எமது நடவடிக்கைகள் அமைவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் வெளிநாடுகளிலிருந்து சென்று இவ்வாறான பணிகளில் ஈடுபடுவதற்கும் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் வெளிநாட்டவர்கள் இவ்வாறான பணிகளில் ஈடுபடுவதற்குமிடையில் பாரிய வேறுபாடு இருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் நாம் கவனத்திற் கொள்வது சிறந்ததாகும்.
இலங்கையில் மார்க்கப் பிரசாரப் பணிகளை முன்னெடுக்க சகல முகாம்களிலும் போதுமான உலமாக்கள் பிரசாரகர்கள் பேச்சாளர்கள் இருக்கின்ற நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஏன் இவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்ற கேள்வியை சிலர் முன்வைக்கின்றனர். இதற்கான பதிலை சம்பந்தப்பட்ட இஸ்லாமிய அமைப்புகளே முன்வைக்க வேண்டும். இது விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பன கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது நாட்டுக்கும் நல்லதல்ல; நமது நாட்டுக்கு விருந்தினர்களாக வரும் வெளிநாட்டவர்களுக்கும் நல்லதல்ல. இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இயக்க வேறுபாடுகளை மறந்து சிந்திப்பார்கள் என நம்புகிறோம். – Vidivelli