டில்வின் சில்வாவுடன் தேசிய ஷீரா சபை சந்திப்பு தேசிய, முஸ்லிம் சமூக விவகாரங்கள் குறித்து ஆராய்வு

0 35

தேசிய ஷூரா சபையின் (NSC) உயர்­மட்டக் குழு­வொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை (06.12.2024) மக்கள் விடு­தலை முன்­னணி (ஜே.வி.பி.) யின் செய­லாளர் டில்வின் சில்­வாவை பத்­த­ர­முல்­லையில் உள்ள அக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் சந்­தித்து ­தே­சிய மற்றும் சமூக பிரச்­ச­னைகள் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளது.

தூதுக்­கு­ழுவில் தேசிய ஷூரா சபையின் தலைவர் அஷ்ஷேக் எஸ்.எச்.எம். ஃபளீல், அதன் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி ரஷீத் எம்.இம்­தியாஸ், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஈரான் நாட்­டுக்­கான முன்னாள் தூது­வரும் தேசிய ஷூரா சபையின் முன்னாள் உப­த­லை­வர்­களில் ஒரு­வ­ரு­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.சுஹைர், சபையின் முன்னாள் தலைவர் சட்­டத்­த­ரணி ரீ.கே.அஷூர் மற்றும் சபையின் தற்­போ­தைய துணைத் தலைவர், சவூதி அரே­பி­யா­வுக்­கான முன்னாள் தூதுவர், மூத்த வழக்­க­றிஞர் ஜாவித் யூசுப் ஆகியோர் அங்கம் வகித்­தனர். சபையின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க தேசிய மக்கள் சக்தி(NPP)யின் செயற்­குழு மற்றும் வழி­ந­டத்தல் குழு உறுப்­பினர் அஷ்ஷேக் ஐ.என்.இக்ராம் அவர்­களும் இந்த சந்­திப்பில் கலந்து கொண்டார்.
கலந்­து­ரை­யா­டப்­பட்ட முக்­கிய விட­யங்கள்:

1. முஸ்லிம் அமைச்சர் நிய­மன விவ­காரம்
அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இல்­லா­தது குறித்து முஸ்லிம் சமூ­கத்தில் பல்­வே­று­பட்ட கருத்­தா­டல்கள் நிகழ்ந்து கொண்­டி­ருப்­ப­தா­கவும் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இருக்க வேண்டும் என முஸ்­லிம்கள் கோரிக்கை விடுப்­ப­தற்கு காரணம் முஸ்­லிம்­க­ளு­டைய விவ­கா­ரங்­களை அணு­கு­வ­தற்கும் அவற்­றிற்­காக குரல் கொடுப்­ப­தற்கும் அமைச்­ச­ரவை மட்­டத்தில் முஸ்­லிம்கள் இருப்­பது பொருத்தம் என்று கரு­து­வ­தாகும் என்றும் தற்­போ­தைய சூழலில் அப்­ப­டி­யான நிலை இல்லை என்றும் அந்தக் குறையை நிவர்த்தி செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அரசு இயந்­தி­ரத்தில் இருக்க வேண்டும் என்றும் குழு­வினர் சுட்டிக்காட்­டினர்.

2. ஆலோ­ச­னை­களை பெற்றுக் கொள்­வது
முஸ்­லிம்­க­ளு­டைய விவ­கா­ரங்கள் தொடர்­பாக அரசு எந்­த­வொரு தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு முன்பும் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த துறைசார் நிபு­ணர்கள், புத்­தி­ஜீ­விகள் போன்­றோரது ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­வது அவ­சியம் என்றும் வலி­யு­றுத்­தினர்.

3. நிபு­ணத்­து­வத்தை பெற்றுக் கொடுத்தல்
முஸ்லிம் சமூ­கத்தில் கல்வி, பொரு­ளா­தாரம், அர­சியல் போன்ற துறை­களில் நிபு­ணத்­துவம் மிக்க, சமூக ஆர்வம் கொண்ட புத்திஜீவிகள் கணி­ச­மான தொகை­யினர் இருப்­ப­தா­கவும் அவர்­க­ளது ஆலோ­ச­னை­களை நாட்டின் வளர்ச்­சிக்கு பெற்றுத் தரு­வ­தற்கு தேசிய ஷூரா சபை தயா­ராக இருப்­ப­தா­கவும் குழு­வினர் வலி­யு­றுத்­தினர்.

4. பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளுக்­கான தீர்­வு­க­ளுக்கு முன்­னு­ரிமை அளித்தல்
இலங்கை தேசம் பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருப்­பதால் மக்கள் அனு­ப­விக்கும் பொரு­ளா­தார நெருக்­க­டி­களை நிவர்த்தி செய்­வ­தற்கு முஸ்லிம் சமூ­கத்தின் ஆத­ரவை தேசிய ஷூரா சபையின் பிர­தி­நி­திகள் உறு­தி­ய­ளித்­த­துடன், அரபு இஸ்­லா­மிய நாடு­க­ளு­ட­னான தொடர்பை மென்­மேலும் வலுப்­ப­டுத்தி அந்த நாடு­களைச் சேர்ந்த முத­லீட்­டா­ளர்­களை இலங்­கையில் முத­லீடு செய்­வ­தற்கு ஊக்­கு­விப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட வேண்டும் என்றும் இது தொடர்பில் அந்த நாடு­க­ளுடன் தொடர்­பு­களை கொண்­டி­ருக்கும் இலங்கை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்தோர் அர­சுக்குத் தேவை­யான ஆலோ­ச­னை­க­ளையும் ஒத்­தா­சை­க­ளையும் வழங்க முடியும் என்றும் கூறினர். அரபு, இஸ்­லா­மிய நாடு­களில் சுமார் 2 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான இலங்­கையர் தொழில் செய்­கின்­றனர். இதனால் வரு­டாந்த வெளி­நாட்டுச் செலா­வ­ணி­யா­கிய 6 பில்­லியன் அமெ­ரிக்க டொலரில் 85% க்கும் அதி­க­மான தொகைப் பணம் கிடைத்து வரு­வதால் அந்த நாடு­க­ளு­ட­னான நல்­லு­ற­வி­னதும் தொடர்­பி­னதும் முக்­கி­யத்­து­வத்தை குழு­வினர் வலி­யு­றுத்­தினர்.

5. முஸ்­லிம்கள் நாட்­டுக்கு விசு­வா­ச­மா­ன­வர்கள்
இலங்கை தேசத்தின் ஐக்­கியம், ஆள்­புல ஒரு­மைப்­பாடு என்­பன பேணப்­பட வேண்டும் என்­பதில் முஸ்லிம் சமூகம் எப்­போதும் உறு­தி­யான நிலைப்­பாட்டில் இருப்­ப­தா­கவும் முஸ்­லிம்கள் நாட்­டுக்கு விசு­வா­ச­மா­ன­வர்கள் என்­ப­தையும் கடந்த காலங்­களில் பிரி­வினை வாதத்­திற்கு முஸ்­லிம்கள் ஆத­ரவு வழங்­கா­ததன் கார­ண­மாக குறிப்­பாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த முஸ்­லிம்கள் பல்­வே­று­பட்ட துன்­பங்­க­ளுக்கு உள்­ளா­னது பற்­றியும் தற்­போதும் கூட கணி­ச­மான தொகை­யினர் அகதி முகாம்­களில் வாழ்­வ­தையும் குழு­வினர் சுட்­டிக்­காட்­டினர்.

6. இன­வா­தத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்டை பாராட்டல்
முப்­பது வருட யுத்தம் முடி­வ­டைந்­த­தற்கு பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இன­வாத செயற்­பா­டு­களால் முஸ்லிம் சமூகம் பாரிய அளவு பாதிக்­கப்­பட்­டி­ருப்­ப­தையும் இன­வாதம் இந்த நாட்­டுக்கு ஒரு பேரா­பத்து என்­ப­தையும் குழு­வினர் சுட்­டிக்­காட்­டி­ய­துடன் தேசிய மக்கள் சக்­தியின் இன­வா­தத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்­டையும் பாராட்­டினர். கடு­மை­யான சட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வதன் மூலம் அல்­லாமல் கல்வி, உரை­யாடல் மற்றும் நல்­லி­ணக்­கத்தின் மூலம் இந்த பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­பட வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டினர்.

7. சமா­தான சக­வாழ்வு வேலை திட்­டங்கள்
இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கி­யத்தை கட்­டி­யெ­ழுப்­பவும் முஸ்லிம் சமூ­கத்தை இது தொடர்­பாக நெறிப்­ப­டுத்­தவும் வலு­வூட்­டவும் கடந்த காலங்­களில் தேசிய ஷூரா சபை கணி­ச­மான வேலைத் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­தாக நினை­வு­ப­டுத்­திய குழு­வினர், குறிப்­பாக தற்­போது பிரதி அமைச்­ச­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அஷ்ஷைக் முனீர் முளப்பர் அவர்கள் சமா­தான சக­வாழ்வு வேலைத் திட்­டங்­க­ளுக்­காக தேசிய ஷூரா சபை­யுடன் கடந்த காலங்­களில் மிக நெருக்­க­மாக இருந்து செயல்­பட்­ட­தா­கவும் குறிப்­பிட்­ட­துடன் இது போன்ற வேலைத்திட்­டங்­களை எதிர்­கா­லத்­திலும் செயல்­ப­டுத்­து­வ­தற்கு ஷூரா சபை தயா­ராக இருப்­ப­தா­கவும் தெரி­வித்­தனர்.

8. தேசிய ஷூரா சபை பற்­றிய அறி­முகம்
தேசிய ஷூரா சபையின் நோக்­கங்கள், இலக்­குகள்,அதன் கட்­ட­மைப்பு,கடந்த கால செயற்­பா­டுகள் பற்­றிய ஓர் அறி­மு­கத்தை வழங்­கிய குழு­வினர் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர் முஸ்லிம் சமூ­கத்­தோடு தொடர்­பான 27 அம்­சங்­களை உள்­ள­டக்­கிய கோரிக்­கை­களை உள்­ள­டக்­கிய மனுவை தேசிய மக்கள் சக்தி அமைப்­புக்கு கைய­ளித்­த­மையை நினை­வு­ப­டுத்­தி­ய­துடன் அதில் உள்­ள­டங்­கிய அம்­சங்கள் தொடர்­பாக மேலும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு சபை தயா­ராக இருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டனர். அந்த மனுவின் பிரதி ஒன்­றையும் அனுர குமார திஸா­நா­யக்க அவர்கள் ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­யப்­பட்ட பின்னர் அவ­ருக்கு ஷூரா சபை அனுப்­பிய வாழ்த்துச் செய்­தியின் பிர­தி­யையும் ஷூரா சபை பற்­றிய அறி­மு­கத்தை கொண்ட ஓர் ஆவ­ணத்­தையும் உள்­ள­டக்­கிய கோப்­பொன்றை குழு­வினர் டில்வின் சில்வாவிடம் கைய­ளித்­தனர்.

9. ஜே.வி.பி செய­லா­ளரின் பதில்:
குழு­வி­ன­ரது கருத்­துக்­களை செவி­ம­டுத்த செய­லா­ளர் இந்த அரசு இன ரீதி­யான அடிப்­ப­டையில் எத­னையும் நோக்­கு­வ­தில்லை என்றும் இன­வா­தத்தை அது கடு­மை­யாக எதிர்க்­கி­றது என்றும் குறிப்­பாக அண்மைக் காலத்தில் மூவர் இன­வா­தத்தை தூண்டும் வகை­யி­லான நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டபோது கைது செய்­யப்­பட்­ட­தையும் நினை­வூட்­டினார். ஒவ்­வொரு இனத்­தி­னதும் சமயம், மொழி, குறிப்­பாக ஆடைக் கலா­சாரம் போன்ற தனித்­து­வங்­களில் இந்த அரசு தலை­யி­ட­மாட்­டாது என்­ப­தையும் அவற்றை பாது­காப்­ப­தற்­காக அது எப்­போதும் முன்­னிற்கும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தினார்.

கடந்த தேர்­தலில் அனைத்து இனத்­த­வர்­களும் ஐக்­கிய மக்கள் சக்திக்கு எவ்வித வேறுபாடுகளையும் பார்க்காமல் வாக்களித்திருப்பதை குறிப்பிட்ட அவர், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தமது கட்சி பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்கது என்றும் எதிர்பாராத இடங்களில் கூட முஸ்லிம் வேட்பாளர்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்களது வாக்குகள் கிடைத்திருப்பதானது மக்களது மனப்பாங்கில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தை காட்டுவதாகவும் தெரிவித்தார்.

தேசிய ஷூரா சபை உறுப்பினர்களுடன் தான் இதற்கு முன்னரும் அவ்வப்போது சந்தித்திருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்ட அவர் தொடர்ந்தும் தொடர்புகளை வைத்துக் கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.
தேசிய ஷூரா சபையின் வேண்­டு­கோ­ளுக்கு இணங்க, பிர­தி­ய­மைச்சர் முனீர் முளப்ஃபர் இந்த சந்­திப்­புக்­கான ஏற்­பா­டு­களைச் செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.