இனவாதமற்ற ஆட்சியும் அமைச்சரவையில் முஸ்லிமும்

புரிந்து கொள்வதற்கான சில குறிப்புகள்

0 92

அஹ்மத்

இலங்கை அர­சியல் வர­லாற்றில் இம்­முறைத் தேர்தல் குறிப்­பாக இரு முக்­கிய மாற்­றங்­களைக் கொண்­டுள்­ளது.

i. மிக குறை­வான வாக்­கு­க­ளையே வழ­மை­யாகப் பெற்று ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் தவிர எப்­போதும் எதிர்க்­கட்சி ஆச­னத்­தி­லேயே உட்­கார்ந்து வந்த வித்­தி­யா­ச­மான சிந்­தனைப் போக்கு கொண்ட கட்சி வெற்றி பெற்­றுள்­ளது. வெற்றி பெற்­றதை விட ஆச்­ச­ரி­ய­மா­னது விகி­தா­சாரத் தேர்தல் முறையில் சாதிப்­பது. அதுவும் மிகக் கடி­ன­மாக மூன்றில் இரண்டு பங்கு ஆச­னங்­களைப் பிடித்­த­மை­யாகும்.

ஓர­ளவு சிறந்த முறையில் இவ்­வாட்சி இருக்­கு­மாயின் இனி தவிர்க்க முடி­யாத அர­சியல் கட்­சி­யாக அது இலங்கை அர­சி­யலில் இடம்­பெறும் என்­பதில் சந்­தே­க­மில்லை. சிங்­கள சமூ­கத்தின் மிகப்­பெரும் ஆத­ரவைப் பெற்ற கட்­சி­யாக இது மாறி உள்­ள­மையை நாம் இங்கே கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

ii. தமிழ், முஸ்லிம் சமூ­கங்கள் கூட அக்­கட்­சியை பெரி­ய­ளவு தூரம் ஏற்­றுள்­ளமை இரண்­டா­வது முக்­கிய அம்­ச­மாகும். தமி­ழர்­க­ளது உரிமை சார் அல்­லது தனி­அ­தி­காரம் சார் அர­சியற் போராட்­டத்தை தமி­ழர்­களில் ஒரு பெரும்­பான்மை புறக்­க­ணித்­துள்­ளது என்­பது இங்கு கவ­னத்திற் கொள்­ளத்­தக்­க­தாகும். அவ்­வாறே முஸ்­லிம்­க­ளது தனிக் கட்சி சார் அர­சி­ய­லையும், முஸ்லிம் அர­சியல் தலை­மை­க­ளையும் முஸ்­லிம்கள் இத்­தேர்தல் மூலம் மிகவும் பின்­ன­டை­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

இந்த உண்­மையை நன்கு புரிந்து ஒரு வித்­தி­யா­ச­மான பாரம்­ப­ரியப் பேரம்­பேசல் அர­சியல் போக்­குக்கு முர­ணான அல்­லது மாற்­ற­மான அர­சியல் குழுவை நாம் எதிர் கொண்­டுள்ளோம் என்­ப­தையும் நாம் கவ­னத்திற் கொள்ள வேண்டும். அதா­வது இப்­போ­தைய பேரம்­பேசல் அர­சியல் போக்­குக்கு இது முர­ணா­னது என்­ப­தையே இங்கு கூறு­கிறோம். எனவே அத­னு­ட­னான எமது அணு­கு­மு­றையும் வித்­தி­யா­ச­மாக அமைய வேண்டும் என்­ப­தையே இங்கு உறு­திப்­ப­டுத்த முனை­கிறோம்.

இப்­போது முஸ்லிம் சமூ­கத்தில் நிறைய விமர்­ச­னங்­க­ளுக்கு உட்­பட்­டுள்ள அமைச்சுப் பதவி கொடுக்­கப்­ப­டா­மையை எடுத்து அத­னையும் சற்று விளக்­க­மாகப் பார்ப்போம்.
அமைச்சுப் பதவி கிடைக்­கா­மையை அரசு செய்த தவறு எனக் காண்­பதும் விமர்­சிப்­பதும் குறிப்­பிட்ட சகோ­த­ரர்­களைப் பொறுத்­த­வ­ரையில் நியா­ய­மா­னதே. முஸ்லிம் சமூ­கத்தில் அது பல­ராலும் ஏற்­கப்­ப­டு­வதும் நியா­ய­மா­ன­தே­யாகும். இலங்கை அர­சியல் வர­லாற்றில் இது வரை காண முடி­யாத நிகழ்வு அது எனக் கண்டு கவ­லைக்கும் கோபத்­திற்கும் உட்­ப­டு­வதும் எதிர்­பார்க்­கத்­தக்­க­தாகும், நியா­ய­மா­ன­தாகும் என்­பதில் சந்­தே­க­மில்லை. ஆனால் இந்த நிகழ்ச்­சியை வைத்தே ஜே.வி.பி யிலும் இன­வா­தப்­போக்கு மிகைப்­பட்­டுள்­ளது, முஸ்லிம் சமூ­கத்தை இது புறக்­க­ணித்­துள்­ள­மைக்கு இது ஒரு சான்று, முஸ்லிம் சமூ­கத்தை அது மதிக்­க­வில்லை என்­றெல்லாம் பேசு­வது அவ­சர முடி­வுகள் என்றே நாம் கரு­து­கிறோம்.

​அவ்­வாறே ஜே.வி.பி க்கு கொடுத்த ஆத­ரவை இக்­கா­ர­ணத்­திற்­காக மீளப் பெறு­வதும் அவ­ச­ர­மாக எடுக்கும் முடி­வுகள் என்றே கரு­து­கிறோம். ஜே.வி.பி முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் விடும் தவ­று­களை விமர்­சித்து அவர்­க­ளோடு கலந்­து­ரை­யாடி தொடர்ந்து அவர்­க­ளோடு சென்­றதன் பிறகு முடி­வுக்கு வரு­வதே பொருத்­த­மான முடி­வாக முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் அமைய முடியும் எனக் கரு­து­கிறோம். இதற்­கான கார­ணங்­களைக் கீழே தரு­கிறோம்.

இலங்கை, இனக்­க­ல­வ­ரங்­களை மிக அதி­க­மாகக் கண்ட நாடு. 1976 முதல் 2003 வரை மட்டும் முஸ்­லிம்­களை நோக்கி எழுந்த 30 இனக்­க­ல­வ­ரங்­களை அது கண்­டது. அதா­வது சரா­ச­ரி­யாக வரு­டத்­திற்கு ஒரு இனக்­க­ல­வரம் என்ற சரா­ச­ரியை அது கொண்­டுள்­ளது. அதன் பின்­னரும் திகன, அளுத்­கம, குரு­நா­க­லையின் பல பகு­திகள் என பல பெரிய இனக்­க­ல­வ­ரங்­களை முஸ்லிம் சமூகம் கண்­டது. அதனால் முஸ்லிம் சமூகம் இழந்­தவை மிகப் பெரி­யது என்­பதில் சந்­தே­க­மில்லை. இந்த அரசு இன, மதத் தீவி­ர­வா­தங்­க­ளுக்கு எதி­ரான அரசு என திரும்பத் திரும்பப் பிர­க­டனப் படுத்­தப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தியின் அக்­கி­ரா­சன உரை­யிலும் அது இறு­தி­வரை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் முஸ்­லிம்கள் பாது­காப்­பாக வாழ இந்த அரசே பொருத்­த­மா­னது என்­பதை நாம் கவ­னத்திற் கொள்ள வேண்டும்.

இரண்­டா­வது, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு நிகழ்வு. அதற்கு முன்­னரும் பின்­னரும் எவ்­வாறு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்­தன என்­பது நாம் அனு­ப­வித்த நிகழ்­வு­க­ளாகும்.

மத்­ர­ஸாக்கள், இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள் சந்­தே­கத்­திற்­கு­ரி­ய­ன­வா­கின. தொடர்ந்து விசா­ர­ணை­களும், கைது­களும் நிக­ழ்ந்­தன. இன்னும் அலை பூர­ண­மாக நின்று விட­வில்லை. அரபு மொழியே தடை செய்­யப்­பட்டு விடுமோ என்ற நிலை தோன்றி அரபு மொழி நூல்கள் இறக்­கு­மதி செய்­வது இன்று வரை தடை­செய்­யப்­பட்ட நிலையே உள்­ளது.
அடுத்து கொவிட் தொற்றின் போது ஜனாஸா எரிக்கும் நிலை மிகக் கடு­மை­யாகக் கொண்டு செல்­லப்­பட்­டது.

இந்த எல்லா நிகழ்ச்­சி­களின் போதும் குறித்த அர­சாங்­கங்­களில் அமைச்­ச­ர­வையில் எமது முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் இருந்­தார்கள். ஆனால் அவர்­களில் சிலர் மௌனம் காத்­தார்கள். சிலர் ஓர­ளவு பேசி­னார்கள், சத்­த­மிட்­டார்கள், குரல் கொடுத்­தார்கள். ஆனால் இங்கு குறிப்­பிட்ட எவற்­றையும் அவர்­களால் எந்த வகை­யிலும் மாற்ற முடி­ய­வில்லை. இதி­லி­ருந்து எமக்கு புரியும் உண்மை கீழ்­வ­ரு­மாறு அமை­யலாம்.
இனத் தீவிரம் அல்­லது இன உணர்வு மிகைத்த ஓர் அரச தலைமை அமையும் போது அமைச்­ச­ரையில் முஸ்­லிம்கள் இருந்த போதிலும் அவர்­களால் எதுவும் செய்ய முடி­வ­தில்லை.

அவ்­வாறே இனத்­தீ­விரம் அற்ற இன, மத தீவி­ரத்தை மறுக்கும் ஒரு அரச தலைமை அமைந்தால் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் இல்­லா­த­போ­திலும் மக்கள் நிம்­ம­தி­யாக வாழலாம். இந்த உண்­மை­யையே இப்­போ­தைய அர­சாங்­கத்தில் பார்க்கப் போகிறோம். அதற்கு சற்றுக் கால அவ­காசம் கொடுக்க வேண்டும் என்­றுதான் நாம் கூறு­கிறோம்.

முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் கீழ்­வ­ரு­வன மிக முக்­கி­ய­மா­ன­தாகும்.
i. உயிர்த்த ஞயிறு தின நிகழ்வின் உண்மை நிலை வெளிப்­ப­டுத்­தப்­பட்டு முஸ்லிம் சமூகம் மதப்­ப­யங்­க­ர­வா­தத்தை தன்னுள் அடக்­கி­யுள்­ளது என்ற கருத்து பொய் என்­பது தெளி­வாக வேண்டும்.
ii. மத்­ர­ஸாக்கள், பள்­ளிகள், இஸ்­லா­மிய நிறு­வ­னங்­க­ளுக்கு எதி­ரான கெடு­பி­டிகள் நிறுத்­தப்­பட வேண்டும்.
iii. அரபு நூல்கள் தடை நீங்கி மத்­ர­ஸாக்­களும், இஸ்­லா­மிய நிறு­வ­னங்­களும் இஸ்­லா­மிய ஆய்­வா­ளர்­களும் அவற்றைப் பெறு­வது இல­கு­வாக்கப்பட வேண்டும்.
iv. தனியார் சட்டம், காதி நீதி­மன்றம், வக்ப் என்­பன சீர­மைக்­கப்­பட்டு சிறந்­த­மு­றையில் இயங்­க­வி­டப்­பட வேண்டும்.
v. முஸ்லிம் சமய திணைக்­களம் ஒரு சீரான நடை­மு­றையைப் பேணி இயங்க ஆவன செய்­யப்­பட வேண்டும்.

இவ்­வ­ள­வையும் முன்னாள் அர­சு­களால் அவற்றின் கெபி­னட்டில் முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்தும் செய்ய முடி­ய­வில்லை. இந்த அரசில் இது செய்­யப்­ப­டு­மானால் கெபி­னட்டில் அமைச்­சர்கள் இல்­லாமை கூட ஒரு பெரிய தாக்­கத்தை விளை­விக்­க­வில்லை எனப் புரிந்து கொள்­ளலாம். இதன் பொருள் அமைச்­ச­ர­வையில் ஒரு முஸ்லிம் இல்­லா­ம­லி­ருப்­பது சரி, அதனை ஏற்றுக் கொண்டு விட வேண்டும் என்­பது அல்ல. இந்த அர­சோடு உற­வா­டு­வதில் உள்ள வித்­தி­யா­ச­மான போக்­கையே நான் குறிப்­பிட வரு­கிறேன்.
அத்­தோடு இன்­னொரு பகு­தி­யையும் இங்கே நாம் இணைத்துக் கொள்ள வேண்டும்.
பொரு­ளா­தார ரீதி­யா­கவும், கல்வி ரீதி­யா­கவும் நாடு ஓர­ள­வா­வது சீர்­ப­டு­வது சாத்­தியம் என்று அனு­மா­னிக்க முடி­கி­றது. அது சாத்­தி­யப்­பட்டால் முஸ்லிம் சமூ­கமும் பெரும் பயன்­பெறும் சாத்­தி­ய­முள்­ளது. ஏனெனில் முஸ்லிம் சமூகம் வறுமை கூடிய சமூகம். அத்­தோடு கல்வி ரீதி­யாக நிறையப் பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ளும் சமூகம் என்­பது தெளி­வா­ன­தொரு உண்­மை­யாகும்.

இறு­தி­யாக இப்­ப­கு­தியில் இன்­னொரு முக்­கிய அம்­சத்தை குறிப்­பிட்டு முடிக்­கிறோம்.
முஸ்லிம் சமூகம் சுதந்­தி­ரத்­திற்கு முன்னால் சில அர­சியல் தலை­மைத்­து­வங்­களைக் கண்­டது. சுதந்­தி­ரத்தின் பின்னர் பதி­யுத்தீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ். ஹமீத், எம்.எச்.எம் அஷ்ரப் என்ற சிறந்த தலை­மைத்­து­வங்­களைக் கண்­டது. அதன் பின்னர் அந்தத் தரத்­தி­லான முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்­களை முஸ்லிம் சமூகம் காண­வில்லை. முஸ்லிம் சமூக நலன்­க­ளையே மையப்­ப­டுத்தி உரு­வான முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாப­கரின் மறைவின் பின்னர் துண்டு துண்­டாக உடைந்து போனது.

இப்­போது ஒரு வித்­தி­யா­ச­மான கட்­சியில் இணைந்து முஸ்­லிம்கள் சிலர் பாரா­ளு­மன்றம் சென்­றுள்­ளனர். அவர்கள் முஸ்லிம் சமூ­கத்தின் எதிர்­கால அர­சியல் தலை­மை­க­ளாக உரு­வாகும் சந்­தர்ப்பம் உள்­ளது. பாரா­ளு­மன்­றத்தின் உள்ளே சென்­ற­வர்கள் மாத்­தி­ர­மல்ல. அவ்­வாறு செல்­லாது கட்­சியின் உள்ளே நெருக்­க­மாக உழைக்கும் இன்னும் சிலரும் உள்­ளனர். இவ்­வாறு உரு­வாகி வரும் இந்த அர­சியற் செயற்­பாட்­டா­ளர்­க­ளையும் முஸ்லிம் சமூகம் ஆத­ர­வ­ளித்து வளர்த்­தெ­டுக்க வேண்டும்.

பல தசாப்­தங்­க­ளாக சில அர­சியல் தலை­மைத்­து­வங்­களை முஸ்லிம் சமூகம் கண்டு வந்­தது. அவர்கள் விட்ட தவ­று­க­ளையும், பல­வீ­னங்­க­ளையும் நாம் கண்டோம். தமக்குப் பின்னால் பொறுப்புச் சுமக்­கக்­கூ­டிய இளம் தலை­மை­களை உரு­வாக்கும் வழி­மு­றைகள் கூட அவர்­க­ளிடம் இல்­லா­மையைக் கண்டோம். இந்த நிலையில் புதிய சில அர­சியல் தலை­மைகள் எமக்குத் தேவை என்­பதில் சந்­தே­க­மில்லை. அந்தப் பின்­ன­ணியில் முஸ்லிம் சமூகம் இப்­பு­திய தலை­மை­களை நோக்க வேண்டும் என்று தான் நாமும் கேட்டுக் கொள்­கிறோம்.

அதே­வேளை இன­வாதம், கட்­ட­மைப்பு ரீதி­யாக வேரூன்­றிய நாடு இது. இன­மை­ய­வாதம் கொண்ட இத்­த­கைய நாடு­களில் ஒடுக்­கப்­படும் சிறுபான்மையாக இன நீக்கம் செய்யப்பட்டு இலங்கையராகுமாறு கேட்கும் நிலையே இங்கு காணப்படுகிறது. இவ்வாறு பேசி ஒரு வித்தியாசமான அரசியல் போராட்டம் பற்றி உரையாடும் சகோதரர்கள் எம்மிடையே உள்ளனர். அவ்வாறே அழுத்தக் குழுவாக இருந்து செயற்படல் சிறுபான்மை சமூகத்திற்கு எவ்வாறு அவசியம் எனப் பேசுவோரும் உள்ளனர். இச் சகோதரர்கள் தமது கருத்தை சமூகமயப்படுத்தி சமூக அங்கீகாரம் பெற்று ஓர் அரசியல் ஒழுங்கை உருவாக்கட்டும். எது சமூகத்திற்கு நலன்பயக்கிறதோ சமூக அங்கீகாரம் பெறுகிறதோ அது நிலைக்கட்டும்.

ஆனால் இப்போது ஜே.வி.பி கட்சி, அதில் இணைந்துள்ள முஸ்லிம் அரசியற் செயற்பாட்டாளர்கள் களத்தில் உள்ளனர். அமைச்சு கிடைக்கவில்லை என்பதற்காக அந்தக் கட்சியையும் அதன் அரசியல் தலைமைகளையும் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்பதனையே இங்கு நாம் கூற வருகின்றோம். இது ஜே.வி.பி யைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுங்கள் எனக் கூறுவதாக அமையாது என்பது தெளிவு.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.