ஏ.எல்.நிப்றாஸ்
முன்னாள் அமைச்சர் வேதாந்தி எம்.எச்.சேகு இஸ்ஸதீன் கடந்த வாரம் மரணமானதை தொடர்ந்து அவர் முன்வைத்த கருத்தியல் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் பரவலாக பேசப்படுகின்றது. அவரது போராட்ட குணமும், அவர் வலியுறுத்திய கோட்பாடுகளும் இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிலாகித்துப் பேசப்படுகின்றன.
எத்தனையோ அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், மக்கள் பிரதிநிதிகள் வருகின்றார்கள், போகின்றார்கள், மரணிக்கின்றார்கள். ஆனால் வரலாறு எல்லோரையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வதில்லை. சமூகம் எல்லோரது இழப்பையும் ‘உண்மையிலேயே’ ஒரு வெற்றிடமாக உணர்வதில்லை.
அப்படியென்றால், வேதாந்தி சேகு இஸ்ஸதீன் மட்டும் ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகின்றார்? அதுவும் அவர் உயிருடன் இருந்தபோது இல்லாத அளவுக்கு பெருமைப்படுத்தப்படுகின்றார் என்ற கேள்வி அவரைப் பற்றித் தெரியாத பலருக்கு ஏற்படலாம். அதற்கான விடைதான் இந்தக் கட்டுரையாகும்.
சேகு இஸ்ஸதீன் மூன்று தடவை தேசியப்பட்டியல் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றார். பிரதியமைச்சராக, அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக இருந்திருக்கின்றார். ஆனால், அவர் எந்த மக்களுக்காக குரல் கொடுத்தாரோ அந்த மக்கள் அவரை நேரடியாக வாக்குகள் மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பவில்லை என்பதுதான் கவலையாகும்.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் இருப்பு, இனப் பிரச்சினைத் தீர்வில் அவர்களுக்குரிய பங்கு, முஸ்லிம் தேசியம், முஸ்லிம் சுயநிர்ணயம், முஸ்லிம் சமஷ்டி, தனி அலகு என்று பல விடயங்களை தெளிவாக தனது வாழ்நாள் முழுவதும் பேசியும் எழுதியும் வந்தார்.
ஆனால், 90களின் பின்வந்த பல முஸ்லிம் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மேற்குறிப்பிட்ட விவகாரங்களின் ஆழஅகலமோ, அதன் வரைவிலக்கணமோ தெரியாது.
வெறுமனே முஸ்லிம் தேசியம் என்று பேசினாலும் சேகுவின் அளவுக்கு அதைப் புரிந்து கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மிகக் குறைவு என்பதே உண்மையாகும்.
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபுக்கு நிகரான அந்தஸ்தில் வைத்து கடைசிவரையும் நோக்கப்பட்ட அரசியல்வாதியாக இஸ்ஸதீன் இருந்தார். சமூகத்திற்காக போராடுவதில் சேகுவேரா போல, சிந்தனை தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார். ஆயினும், துரதிர்ஷ்டவசமாக, அப்போது அவரது பெறுமதியை உணர முடியாத மாய உலகில் இருந்தனர்.
இந்த சமூகம் தன்னை விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற அரபு வசனத்தை கூறியே அவர் தன் உரைகளை ஆரம்பிப்பது வழக்கம். ஆனால், தனது அரசியலை குறிப்பாக கிழக்கு முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ளவில்லையே என்ற வலி அவருக்கு கடைசி வரையும் இருந்தது என்றுதான் கூறவேண்டும்.
கடந்த நவம்பர் 28ஆம் திகதி சேகு இஸ்ஸதீன் மறைந்தார். அதன் பிறகு, அவர் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றார். நினைவு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. இதற்கு இன்னுமொரு காரணமும் உள்ளது.
அதாவது மாற்றம் என்ற பெயரில் முஸ்லிம்கள் பெருவாரியாக என்.பி.பி. உள்ளிட்ட பெருந்தேசியக் கட்சிகளின்பால் இழுபட்டுச் சென்றுள்ளனர். ஆனால், அங்கும் உரிய அந்தஸ்துக்கள் வழங்கப்படுமா என்ற பலத்த சந்தேகம் அமைச்சரவை நியமனத்தின் பின்னர் எழுந்துள்ளது.
எனவே, இது சரிப்பட்டு வராது என்றும், முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும். அதனை மறுசீரமைக்க வேண்டும் என்றும் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்படுவதால், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியல் கோட்பாட்டின் வித்தகர் என்ற வகையிலும் சேகு இஸ்ஸதீனின் வகிபாகம் நினைவுக்கு வருகின்றது.
1944ஆம் ஆண்டு மே 12ஆம் திகதி அக்கரைப்பற்றில் பிறந்த சேகு இஸ்ஸதீன் அடிப்படையில் பயிற்றப்பட்ட ஓர் ஆங்கில ஆசிரியராவார். அக்காலத்திலேயே வேதாந்தி என்ற பெயரில் இலக்கிய உலகில் மிகப் பிரபலமாகியிருந்தார். 1982ஆம் ஆண்டு சட்டத்தரணியான பிறகு, தீவிர அரசியலில் இறங்கினார்.
எம்.எச்.எம்.அஷ்ரபுடன் ஏற்பட்ட நட்பு இலங்கை முஸ்லிம் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தக் காரணமானது. சேகு இஸ்ஸதீன் அறிவிலும் பேச்சிலும் தோற்றத்திலும் கூட திடகாத்திரமானவர். விடுதலை வேட்கை இயல்பாகவே அவரிடமிருந்தது.
முஸ்லிம்கள், பெருந்தேசியக் கட்சிகளுடனோ அல்லது தமிழ்க் கட்சிகளுடனோ தொடர்ந்தும் இணைந்து பயணிக்க முடியாத நிலை 1980களில் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியல் இயக்கம் ஒன்று தேவை என்பதை அஷ்ரபும் சேகு உள்ளிட்ட அவர்களது நண்பர்களும் உணர்ந்தார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் உருவானது. சேகு தவிசாளரானார். மு.கா.வின் யாப்புகளை வரைந்ததிலும், கொள்கைகளை வகுத்ததிலும் சேகு முதன்மையானவர். அவர் இல்லாதிருந்திருந்தால் மு.கா. என்ற இயக்கமே உருவாகியிருக்காது என்று மர்ஹூம் அஷ்ரப் கூறியிருக்கின்றார். அந்தளவுக்கு அவரது பங்கு பிரதானமாக இருந்தது.
மு.கா.வின் தலைவராக அஷ்ரபும், தவிசாளராக சேகு இஸ்ஸதீனும் கோலோச்சிய பொற்காலமது. அக்காலத்தில்தான் தனித்துவ அடையாள அரசியல் கிடுகிடுவென கிழக்கில் வளர்ச்சி பெற்றது.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூத்த அரசியல் சிந்தனையாளரான மர்ஹூம் எம்.ஐ.எம் மொஹிதீனின் கோட்பாடுகள் இதற்கு அடித்தளமாக அமைந்தன. அந்தக் கோட்பாடுகளை அரசியலை நோக்கி கொண்டு சென்றவர் சேகு இஸ்ஸதீன் என்றால், அவற்றை அரசியல்மயப்படுத்தி வெற்றி கண்டவர் அஷ்ரப் என்று சொல்லலாம்.
1987 இல் இலங்கை–இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வந்தது. தமிழ் ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்கள் மீது அழிச்சாட்டியங்களை கட்டவிழ்த்து விட்டன.
இதற்கிடையில் 1988 மாகாண சபை தேர்தலையடுத்து அமையப் பெற்ற இணைந்த வடகிழக்கு மாகாண சபையில் மு.கா. அங்கம் வகித்ததுடன், சேகு இஸ்ஸதீன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். இதன்படி அவரே இணைந்த வடகிழக்கின் முதலும் கடைசியுமான முதலமைச்சராவார்.
பின்னர் தனியீழ பிரகடனம் மேற்கொள்ளப்பட்டதுடன் சமகாலத்தில் ஆயுதக்குழுக்கள் முன்கையெடுத்தன. சமகாலத்தில், இந்திய இராணுவத்தாலும், விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களாலும் முஸ்லிம்கள் மீதான கொலைகள், கடத்தல், இனச் சுத்திகரிப்பு ஆரம்பமாகி விட்டிருந்தது. பின்னர் மாகாண சபை கலைந்தது.
இந்த தருணத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய வகிபாகமொன்றை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அரசியல் ரீதியாக மக்களை சரியாக வழிப்படுத்துவது மட்டுமன்றி, ஆயுதக் குழுக்களிடமிருந்து கிழக்கின் முஸ்லிம்களை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்தமும் உருவானது. இதனை அப்போது மு.கா.வில் இருந்த அரசியல் தலைவர்கள் எல்லோரும் மிகச் சரியாகச் செய்தனர் என்று சொல்லலாம்.
இக்காலப்பகுதியில், எம்.எச்.எம்.அஷ்ரப், சேகு இஸ்ஸதீன் போன்றோர் இலங்கை- –இந்திய ஒப்பந்தத்தையும் தமிழ் ஆயுத குழுக்களையும் நேரிடையாகவே எதிர்த்தனர். ‘இலங்கை-–இந்திய ஒப்பந்தம் முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்ட அடிமைச்சாசனம்’ என்று பகிரங்கமாக பேசினர். வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாகவே வலியுறுத்தினர்.
மிக முக்கியமாக, கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகவும், ஊர்களை காவல் செய்வதற்காகவும் இளைஞர்களை தயார்படுத்தியதுடன் அதற்கான தைரியத்தையும் வளத்தையும் வழங்கியதில் சேகு இஸ்ஸதீனுக்கு பிரதான பங்குள்ளது.
அதேபோன்று, இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களுக்கான பங்கை வலியுறுத்தியதுடன், முஸ்லிம் தேசியம், முஸ்லிம் சுயநிர்ணயம் பற்றி வலியுறுத்தி வந்தார். அதனாலேயே சமூகவிடுதலைப் போராட்டத்தின் தானைத் தளபதியாக ஒரு ஹீரோவைப் போலவே இளைஞர்கள் கருதினர்.
இந்தக் கட்டத்தில்தான், 1992 மே 16ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சேகு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு முஸ்லிம் கட்சியின் ஊடாகவும் தேசிய ஐக்கிய முன்னணி ஊடாகவும் அவர் அரசியலை முன்னெடுத்தார். 2000, 2001, 2004ஆம் ஆண்டுகளில் தேசியப் பட்டியல் மூலம் எம்.பி.யாக நியமிக்கப்பட்டு, ஊடக பிரதியமைச்சராகவும், ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2010ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதிநிதித்துவ அரசியலில் அவர் இல்லை. ஆனாலும் நோய்வாய்ப்படும் வரைக்கும் இயங்கிக் கொண்டே இருந்தார். முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் முஸ்லிம் தேசியம் சுயநிர்ணயம், முஸ்லிம் சமஷ்டி, இனப் பிரச்சினை தீர்வில் உப பங்கு பற்றியும் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தவர்தான் மர்ஹூம் சேகு இஸ்ஸதீன்!
இவரது அரசியல் தொடர்பிலும் விமர்சனங்கள் இருந்தன. ஆனால் அதனையெல்லாம் தாண்டி முஸ்லிம்களுக்கான அரசியல் உரிமைப் போராட்டத்தில் அவர் முக்கியமானவர். தானைத் தளபதியாக கருத்தியல் தலைவராக அவர் ஆற்றிய பங்கு வரலாறாக மாறியிருக்கின்றது.
எனவே, முஸ்லிம் தனித்துவ அரசியல் அழிந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் மர்ஹூம் சேகு இஸ்ஸதீன் போன்றோரின் முஸ்லிம் சமூகம் பற்றிய கருத்தியல்களை, கோட்பாடுகளை தூசுதட்டி, நமக்கான அரசியலை மீளக் கட்டியெழுப்புவதே நமது கடமை.
சேகுவின் கனவுகள் மட்டுமன்றி, இந்த சமூகத்தின் அபிலாஷைகளுக்கு செய்கின்ற பெரும் உபகாரமாக அது அமையும்.- Vidivelli