எப்.அய்னா
இலங்கையில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் ஆட்சி நடந்து வரும் போதும், டீப் ஸ்டேட் அல்லது நிழல் அரசொன்று மறைமுகமாக செயற்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகின்றது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் முதல் இந்த நிழல் அரசு தொடர்பிலான சந்தேகம் மிகப் பெரும் அளவில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கத்துக்கும் அதன் அச்சுறுத்தல் காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகின்றது. அதன் விளைவு, அரசாங்கமானது பாதுகாப்புத் துறையுடன் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை மிக கவனமாக முன்னெடுத்து செல்வதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக நேற்று முன்தினம் (3) பொலிஸ் திணைக்களத்தின் உயர் பதவிகளில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மற்றும் இராணுவ உளவுத்துறை பிரதானி பிரிகேடியர் சந்திக மகதந்த்தில அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள், அரசாங்கம் நிழல் அரசுக்கு எதிராக செயற்பட ஆரம்பித்துள்ளது என எண்ணத்தோன்றுகின்றது.
இலங்கையின் குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்கும் பிரதான முன்னணி நிறுவனமான சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதானியாக கருதப்படும் அதன் பணிப்பாளர் பதவிக்கு வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சி.ஐ.டி. யின் பிரதிப் பணிப்பாளராக இதுவரை செயற்பட்டு வந்த சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் இமேஷா முதுமால உடன் அமுலுக்கு வரும் வகையில் சி.ஐ.டி.யின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சி.ஐ.டி.யின் பணிப்பாளராக செயற்பட்டு வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் தெஹிதெனிய, நுகேகொடை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக மாற்றப்பட்டு, இவ்வாறு சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் இமேஷா முதுமால சி.ஐ.டி. பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதியோடு முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த இடமாற்றத்துக்கு மேலதிகமாக பொலிஸ் திணைக்களத்தின் பல முக்கிய பதவிகளில் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக சி.ரி.ஐ.டி. எனக் கூறப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு, சி.சி.டி. எனக் கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு, எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவு, பீ.எப்.பி. ஏ.சி.டப்ளியூ.ஐ. எனப்படும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணை பணியகம் உள்ளிட்ட முக்கிய விசாரணை நிறுவனங்களின் பிரதானிகள் பதவிக்கும் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஏனைய பல பொலிஸ் நிர்வாக வலயங்களுக்கு பொறுப்பான பதவிகளிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக பொலிஸ் திணைக்களத்தின் 41 பதவிகளில் இவ்வாறு உடன் அமுலுக்கு வரும் வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதனைவிட இதுவரை பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய குற்றவியல் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ, பொலிஸ் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பீ. மனதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை கந்தளாய் பொலிஸ் வலயத்தின் பொறுப்பாளராக இருந்த அவர் அங்கிருந்து பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டு பொலிஸ் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே இப்போது அவர் பேச்சாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.ரி.ஐ.டி. எனக் கூறப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரசன்ன அல்விஸ் ஓய்வுபெற்ற நிலையில் அதன் பிரதிப் பணிப்பாளரான ஏ.ஜே. குணசேகர பணிகளை முன்னெடுத்து வந்தார். இந்த நிலையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.ஜே. குணசேகர தற்போது அங்கிருந்து இடமாற்றப்பட்டு அவருக்கு புதிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அதன்படி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஏ.ஜே. குணசேகர பீ.எப்.பி. ஏ.சி.டப்ளியூ.ஐ. எனப்படும் சிறுவர் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோக தடுப்பு மற்றும் விசாரணை பணியகத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் வெற்றிடமான சி.ரி.ஐ.டி. எனக் கூறப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக இதுவரை கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் எச்.டி.கே.எஸ். பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் சர்ச்சைக்குரிய பொலிஸ் பிரிவாக பேசப்பட்ட சி.சி.டி. எனக் கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதானி பதவியிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அரசியல் தேவைக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் பல்வேறு குற்றங்களை இந்த பொலிஸ் விசாரணை பிரிவே செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்த நிலையில், அதன் பதில் பணிப்பாளராக செயற்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி சி.சி.டி. எனக் கூறப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் புதிய பணிப்பாளராக குற்றவியல் விசாரணையில் அனுபவம் மிக்க சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் இந்திக லொகுஹெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அவர் பொலிஸ் பரீட்சைகள் பிரிவின் பணிப்பாளராக செயற்பட்டு வந்த நிலையிலேயே அங்கிருந்து அவர் இடமாற்றப்பட்டு இந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார்.
இதேவேளை, எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளராகவும் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த விசாரணைப் பிரிவின் பணிப்பாளராகவும் பெண் ஒருவர் நியமிக்கப்படுவது முதல் சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது. அதன்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னெடுக்கும் குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பிரதான விசாரணை நிறுவனமான எஸ்.ஐ.யூ. எனப்படும் பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளராக சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் எச்.எம்.எல்.ஆர். அமரசேன நியமிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகத்திலிருந்து அவர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனைவிட, பொலிஸ் மேலதிக படைப் பிரிவின் கட்டளை தளபதியாகவும் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவின் பிரதிப் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி பொலிஸ் மேலதிக படைப் பிரிவின் கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைவிட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர்களாக இருந்த ஏனைய அதிகாரிகளும் அத்திணைக்களத்தில் இருந்து இடமாற்றப்பட்டுள்ளனர். சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை மற்றும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரந்தெனிய எல்பிட்டிய பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பாளராகவும், நிதி மற்றும் வணிக குற்ற விசாரணைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மொஹான் லால் பொலிஸ் சுற்றுலா பிரிவின் பணிப்பாளராகவும், மனிதக் கடத்தல் மற்றும் சமுத்திர குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சமரகோன் பண்டா பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவின் பணிப்பாளராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். எனினும் சி.ஐ.டி.யின் மற்றொரு பிரதான பிரிவான சட்ட விரோத சொத்துக்கள் குறித்த விசாரணைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
இந்த இடமாற்றங்களுக்கு மேலதிகமாக தலைநகர் கொழும்பின் உயர் பொலிஸ் பதவிகள் அனைத்திலும் அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி கொழும்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இதுவரை செயற்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்ரகுமார பொலிஸ் மேலதிக படைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி வெற்றிடமான கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு இதுவரை குருநாகல் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதில் கடமைகளை முன்னெடுத்து வந்த ஏ.எல்.யூ.என்.பி. லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தலைநகர் கொழும்பின் பொலிஸ் நிர்வாக வலயங்களின் பிரதானிகளும் இடமாற்றப்பட்டுள்ளனர்.
இது இவ்வாறிருக்க, கடந்த 3 ஆம் திகதி இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்னால், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களை ஆசிரியர் சேவையில் இணைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போது 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் செய்தோருக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் இவ்வாறு அவர்களை கைது செய்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தையும் கலைக்க நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவரை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அவரே பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
இது தொடர்பில் தலங்கம பொலிஸார் அந்த நபரிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ள நிலையில், அவர் தான் இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர் எனவும், இராணுவ உளவுத்துறையின் உத்தரவில் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரை பின்னர் பொலிஸார் விடுவித்துள்ளனர். எனினும் பொலிஸாரை தாக்கி ஆர்ப்பாட்டத்தை குழப்பி, அரசாங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்த இராணுவ உளவுத்துறை திட்டமிட்டதா என இப்போது சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறான நிலையிலேயே, இராணுவ உளவுத்துறை பிரதானி பிரிகேடியர் நேற்று முன்தினம் 3 ஆம் திகதி மாலை முதல் அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு இராணுவ மேற்கு கட்டளை தலைமையகத்துக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இராணுவ உளவுத்துறை பிரதானியாக இருந்து இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பிரிகேடியர் சந்திக மஹதந்த்தில, இதற்கு முன்னர் சுரேஷ் சலே, கொடித்துவக்கு ஆகிய உளவுத்துறை பிரதானிகளுடன் இணைந்து செயற்பட்டவர். அரகல போராட்டத்தின் போதும் போராட்டக் காரர்களிடையே உளவுத்துறையினரை அனுப்பி குழப்பம் விளைவிக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இவ்வாறான நிலையில் அவரின் செயற்பாடுகள் தொடர்பில் சந்தேகம் இருக்கும் பின்னணியில் அவர் இப்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, இன்னும் 182 பொலிஸ் நிலையங்களில் அரசியல்வாதிகளின் தேவைக்காக நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளே உள்ளதாக கூறுகின்றார்.
அப்படியானால், நாட்டில் மாற்றத்தை கோரிய ஆட்சியை சீர் குலைக்க முனையும் நிழல் அரசொன்றை முறியடிக்க, பாதுகாப்புத்துறையில் களையெடுத்தலை புதிய அரசு ஆரம்பித்திருக்கின்றதா எனவும் எண்ணத்தோன்றுகின்றது.- Vidivelli