(றிப்தி அலி)
வக்பு சபை மற்றும் ஹஜ் குழு ஆகியவற்றுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க புத்தசாசன, மத விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த அரசாங்கத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராக செயற்பட்ட விதுர விக்ரமாநாயக்கவினால் நியமிக்கப்பட்டவர்களே வக்பு சபையினதும் ஹஜ் குழுவினதும் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கு எதிராக பல முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பில் காபந்து அமைச்சரவையின் போது புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராக செயற்பட்ட விஜித ஹேரத் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சராக தற்போது நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதுள்ள வக்பு சபை மற்றும் ஹஜ் குழு ஆகியவற்றினை கலைத்துவிட்டு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற முக்கிய சந்திப்பொன்றிலும் அமைச்சர் கலந்துரையாடியதுடன் விரைவில் குறித்த இரண்டுக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஹஜ் குழுவினால் அண்மையில் ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட ஹஜ் கோட்டாவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli