மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்த விவகாரம்: மத்ரஸாவுக்கு புதிய நிர்வாக சபை நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
அதிபர், விரிவுரையாளரும் பிணையில் விடுவிப்பு
(பாறுக் ஷிஹான்)
மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்த மாணவர்கள் கல்வி கற்றுவந்த நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரிக்கு புதிய நிர்வாக சபையொன்றினை நியமிக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த அரபுக் கல்லூரியின் தற்போதைய நிர்வாக சபையினை கலைத்து விட்டு புதிய நிர்வாக சபையினை உடனடியாக நியமிக்குமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு நீதவான் டி. கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
மாவடிப்பள்ளி பிரதேசத்தில் கடந்த 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக குறித்த அரபுக் கல்லூரியின் ஆறு மாணவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் கடந்த திங்கட் கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் குறித்த அனர்த்தம் தொடர்பான விசாரணைகள் கடந்த திங்களன்று சம்மாந்துறை நீதிவான் டி. கருணாகரன் முன்னிலையில் இடம்பெற்றது. இதன்போது, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிந்தவூர் காசிபுல் உலும் அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் இவ்வழக்கு விசாரணைகள் முடிவடையும் வரை குறித்த அரபுக் கல்லூரியின் அதிபர் மற்றும் விரிவுரையாளர் ஆகியோர் அரபுக் கல்லூரிக்கு செல்லக்கூடாது எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த விசாரணையின் போது காரைதீவு பிரதேச செயலாளர் மாவட்ட அனர்த்தன நிவாரண சேவைகள் அதிகாரி ஆகியோரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.
குறித்த வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன் நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரையும் அடுத்த தவணையின் போது மன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli