வீசா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டு: இந்தோனேஷியர்கள் நுவரெலியாவில் கைது
16 ஆம் திகதிவரை விளக்கமறியல்; தப்லீக் ஜமாஅத்தில் பங்கேற்றபோது சம்பவம்
(எப்.அய்னா)
வீசா விதிமுறைகளை மீறி, ஆன்மீக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 8 இந்தோனேஷியர்களை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டவர்கள் சிலர், ஆன்மீக போதனைகளில் ஈடுபடுவதாக நுவரெலிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்த போதே, அவர்கள் வருகைதரு வீசாவில் வந்துள்ளமையும், அந்த வீசா விதிகளின் பிரகாரம் அவர்களுக்கு ஆன்மீக பிரசாரத்தில் ஈடுபட முடியாது என்பதும் தெரியவந்துள்ளது.
அத்துடன் கைது செய்யப்படும் போது குறித்த 8 பேரிடமும் கடவுச் சீட்டு மற்றும் வீசா கைவசம் இருக்கவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.
இவ்வாறான நிலையில் அவர்களை பொலிஸ் நிலையத்தில் ஒரு அறையில், அவர்களது ஆன்மீக நடவடிக்கைகளை முன்னெடுக்க வசதிகளையும் செய்துகொடுத்து பொலிஸார் தடுத்து வைத்து விசாரித்த பின்னர், நுவரெலிய நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்துள்ளனர்.
குடிவரவு குடியகல்வு சட்டத்தின் பிரகாரம், வீசா விதிகளை மீறியதாக கூறி இவர்கள் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் 8 பேரின் கடவுச் சீட்டுக்களும் வீசாாக்களும் மன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த சட்டப் பிரிவின் கீழ் தனக்கு பிணையளிக்கும் அதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டிய நீதிவான், குறித்த 8 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் அன்றைய தினம் 8 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்.- Vidivelli