லத்தீப் பாரூக்
தமிழில்: சப்ரி அஹமட்
கடந்த 14 மாதங்களுக்கு மேலாக தண்ணீர், உணவு, மருந்து, மின்சாரம் உள்ளிட்ட உயிர் வாழ்வதற்குத் தேவையான அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளால் விநியோகிக்கப்பட்டு வீசப்படும் 85,000 தொன் இற்கும் அதிகமான குண்டுகளாலும் இஸ்ரேலின் அதி நவீன அழிவு தரும் ஆயுதங்களினாலும் இன்றுவரை காசா, பலஸ்தீன் மக்களின் மீதான படுகொலை தாக்குதல்கள் தினம் தினம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்த அப்பட்டமான இனப்படுகொலைக்கு அமெரிக்காவின் அடிவருடிகளாக செயற்படும் சில முஸ்லிம் அரபு நாடுகளும் உடந்தையாக உள்ளன.
இரண்டாம் உலகப்போருக்குப்பின்னர் மனிதகுல வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான இனச்சுத்திகரிப்பாகக் கருதப்படும் இத்தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பலஸ்தீனப்பிரதேசமானது உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாக மாற்றம் பெற்று இதுவரை சுமார் 44,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்களை கொன்று குவித்ததன்மூலம் இன்று அது மாபெரும் மயான பூமியாக காட்சியளிக்கிறது.கொல்லப்பட்ட மக்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இதில் எஞ்சியவர்கள் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமற்று தத்தமது உயிர்களை மட்டும் காப்பாற்றியவர்களாக திறந்தவெளியில் தற்காலிக கொட்டில்களில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.
போர்க்குற்றங்களுக்காக உலகின் பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலை புறக்கணித்து வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விடயமாக, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பென்ஞ்சமின் நெதன்யாகு மீது போர்க்குற்றம் சுமத்தி அவரை கைது செய்வதற்கான பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது.
பலஸ்தீன் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இக் காட்டுமிராண்டித்தனமானது மேற்குலகில் உள்ள யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் உடனடியாக போர் நிறுத்தம் செய்யக்கோரி முஸ்லிம்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளது. இஸ்ரேலிய போர் குற்றங்களுக்கு முடிவு கட்டக் கோரி உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்களும் எதிர்ப்புக் கோஷங்களும் எழுப்பப்படுகின்றன. குறிப்பாக பல மேற்கு நாடுகளின் தலைநகரங்களில் இவை தினசரி நிகழ்வாகிவிட்டன. அந் நாட்டு பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்க எடுக்கும் முயற்சிகளால் பல பல்கலைக்கழகங்கள் போர்க்களங்களாக மாறியுள்ளன.
மனித குலத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இஸ்ரேலின் அட்டூழியங்களால், இறைமையுள்ள நாடாக இருந்த பலஸ்தீன நிலத்தின் மீது 1948 ஆம் ஆண்டு யூத சியோனிச சதிகள் மூலம் ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலினை, ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோஷங்களும் முன்னரை விட தற்போது வலுப்பெற்று வருகின்றன.
இவ்வாறு உலகமே இஸ்ரேலை ஒதுக்கித் தள்ளும் இந்தப் பின்னணியில், இலங்கையின் ஹிக்கடுவை மற்றும் அருகம்பை பகுதிகளில் பலஸ்தீனத்தில் இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலிய படைகளுடன் இணைந்து போரிடுவதற்காக பல்வேறு உலக நாடுகளிலிருந்தும் அழைத்து வரப்பட்டுள்ள கூலிப்படைகளுக்கு பயிற்சி முகாம்கள் நடாத்தப்படுவதாக அதிர்ச்சி தரும் அறிக்கைகள் வெளியாகியுள்ளன. அதிலும் குறிப்பாக அருகம்பை, எல்ல மற்றும் வெலிகம போன்ற பிரதேசங்களில் இவர்களது சட்ட விரோத செயற்பாடுகளின் பிரசன்னம் தொடர்பில் உள்ளூர் ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன.
மேலும் தெஹிவளை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் “சபாத்” (Chabad) என்று அழைக்கப்படும் யூதர்களின் வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளிவருகின்ற அறிக்கைகளின் படி, இலங்கையின் உள்நாட்டு சட்டங்களுக்கு மாற்றமாக இஸ்ரேலியர்கள் சொத்துக்களை வாங்குகிறார்கள், ஹோட்டல்களை கட்டுகிறார்கள் மற்றும் இலங்கையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பலஸ்தீனிற்கும் ஹமாசிற்கும் எதிரான மனோபாவம் உடையவர்களாக மூளைச்சலவை செய்வதில் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
இன்று பலஸ்தீனில் இஸ்ரேல் மேற்கொள்ளும் போர்க்குற்றங்களை பிரதான ஊடகங்களில் வெளிவரா வண்ணம் தடுக்கும் முயற்சிகளிலும் இஸ்ரேலிய முகவர்கள் ஊடுருவி செயற்படுகின்றனர். குறிப்பாக தினசரி இடம் பெறும் பலஸ்தீன் காசா அழிவுகள் தொடர்பில் இலங்கையின் முன்னிலை ஊடகங்களில் செய்திகள் இருட்டடிப்பு செய்து வெளியிடப்படுவது கவலைக்குரியது. இதன் மூலம் நாட்டு மக்களுக்கு இஸ்ரேலின் மனித குலத்திற்கு விரோதமான செயற்பாடுகள் தொடர்பில் மிகக் குறைந்த தகவல்களே வெளிப்படுத்தப்படுகின்றன.
உதாரணமாக, இலங்கையில் ஒளிபரப்பப்படும் பியோ டீவி (Peo TV) இன் “செனல் 97” மூலமாக இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் யூத அரசை மிகவும் அமைதியை விரும்பும் ஒரு நாடாகவும் காண்பிக்கும் வகையில் அப்பட்டமான பொய்கள் பரப்பப்படுகின்றன. ஆதரவற்ற பலஸ்தீன மக்கள் மீதான போர், படுகொலைகள், மனித அவலங்கள் மற்றும் அழிவுகளுக்குப் பின்னால் இஸ்ரேலிய அரசு உள்ளது என்ற உண்மையை இந்த ஒளிபரப்பு அலைவரிசை மூடி மறைக்கின்றது.
மேலும் ஒரு எடுத்துக்காட்டாக, யூடியூப் சமூக வலைத்தளத்தில் ஒரு சிங்களப் பெண்மணி யூதர்களை மிகவும் மனிதாபிமானமுடைய மக்கள் என்றும் பலஸ்தீனர்களையும் அவர்களின் பிரதிநிதியான ஹமாஸினையும் மிகவும் மோசமாக சித்தரித்து விவரிக்கும் காட்சிகளையும் காணக் கூடியதாக உள்ளது.
அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் சியோனிச சார்புப் பேரணி ஒன்றை யூத முகவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதே வேளை, இலங்கையிலிருந்து தொழிலுக்காக அனுப்பப்பட்ட சுமார் 10,000 பேருக்கு அதிகமான மனித வளங்கள் இஸ்ரேலின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. மேலும் கடந்த ஆட்சியில் இலங்கை இஸ்ரேலுடன் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளது.
இலங்கையில் யூத வழிபாட்டுத் தலங்களை அமைப்பதற்கும் பல்வேறு நாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் கூலிப்படையினருக்கு இலங்கையில் இராணுவப் பயிற்சி வழங்குவதற்கும் பொறுப்பாகவிருக்கும் இஸ்ரேலிய முக்கிய புள்ளி ஒருவருக்கு இலங்கை இராணுவம் பாதுகாப்பு வழங்குவதாக மற்றுமொரு அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
இது கடந்த எட்டு ஆண்டுகளாக இடம் பெறுவதாக யூடியூப் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Kader Master (காதர் மாஸ்டர்) என்ற யூடியூபரின் தகவலின்படி இஸ்ரேலிய தனியார் பாதுகாப்பு நிறுவனங்களால் பயிற்சி மையங்கள் நடத்தப்படுவதாகவும் “சபாத்” எனப்படும் இஸ்ரேலிய வழிபாட்டுத் தளங்களில் ராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான ஒரு மிக முக்கிய செய்தியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கான சபாத் தூதுவரான ரப்பி ஸ்வி கோகன் (Rabbi Zvi Kogan )கடந்த மாதம் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு கொலைத் தாக்குதல் என்று தெரிவித்தனர்.
“சபாத்” இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட்டின் ஒரு முன்னிலை அமைப்பாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதேவேளை மொல்டோவிய நாட்டு வம்சாவளி இஸ்ரேலியரான கோகன் இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஆரம்பித்ததிலிருந்து சமூக வலைத்தளங்களின் பலமான எதிர்ப்புக்கு இலக்காகியிருந்தார்.
இலங்கையை பொறுத்தவரையில் இந்த விடயமானது இஸ்ரேல் தொடர்பில் காலம் காலமாக ஆட்சி செய்த முன்னைய அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகளின் பிரதி பலனாக தற்போதைய அரசாங்கத்திற்கு தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு நெருக்கடியாகவே தோன்றுகின்றது. எவ்வாறாயினும், இலங்கையின் சமூக மத நல்லிணக்கத்தையும், நாட்டின் தற்போதைய அமைதிச் சூழ்நிலையையும் தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இவ்விடயம் தொடர்பில் தீர ஆராய்ந்து சட்டவிரோத சமூக செயற்பாடுகளில் ஈடுபடும் யூதர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை தற்போது பதவியேற்றுள்ள புதிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
இலங்கையில் சில காலங்களுக்கு முன்பு முடுக்கி விடப்பட்ட முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையும் இஸ்லாத்தை பூதாகரமாக சித்தரிக்கும் பல்வேறு நிகழ்வுகளும் நடைபெற்ற போது இந்துத்துவ பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு கட்டமைப்புகளின் பிரசன்னம் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல என எண்ணுவது ஆச்சரியமன்று.
இதேவேளை இலங்கையில் பல அப்பாவி கிறிஸ்தவ மக்களின் படுகொலைக்குக் காரணமான ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பின்புலத்தில் இப்புனிதமற்ற சக்திகளின் கூட்டணிச் செயற்பாடுகளும் உள்ளது என்பதையும் மறந்து விடலாகாது.- Vidivelli