நாடெங்கும் தொடர்ச்சியான கன மழை பல பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின
கிழக்கில் பாரிய அனர்த்தங்கள் பதிவு; மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்பு
(எம்.ஏ.றமீஸ், பாரூக் சிஹான், சினாஸ் எம்.எஸ்.எம் நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், எச்.எம்.எம்.பர்ஸான், எஸ்.எம்.எம்.முர்ஷித், ஏ.எச். ஹஸ்பர்,ஜே.எம்.ஹாபிஸ்)
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கத்தால் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் தொடர்ச்சியான கன மழை பெய்து வருகின்றது. இதனால், கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், வடக்கிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு, மலையகத்திலும் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.
அம்பாறை
அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக இம்மாவட்டத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை இம்மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தாழ்நிலப் பகுதிகள் முற்றாக மூழ்கியுள்ளன. அத்துடன், பிரதான வீதிகள் சில மழை நீரினால் நிரம்பியுள்ளதுடன், நிந்தவூர் மாட்டுப்பளை பகுதியில் பாலமொன்று உடைப்பெடுத்தமையால் கல்முனை- அக்கரைப்பற்று போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அம்பாறை – கண்டி வீதி, அம்பாறை – கல்முனை பிரதான வீதிகளின் போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அம்பாறை மாவட்டத்தின் இங்கினியாகலை பிரதேசத்தில் 240.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளதுடன், மகாஓயா பிரதேசத்தில் 132.6 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட வானிலை அவதானிப்பாளர் எம்.ஏ.எம்.அக்மல் தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்வடைந்துள்ளன. தாழ்நிலப் பிரதேசத்தில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உறவினர்கள் இல்லங்களுக்கும், பாடசாலைகள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 34885 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 23 மூவாயிரத்து 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 நலன்புரி நிலையங்களில் 2082 குடும்பங்களைச் சேர்ந்த 6710 நபர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இம்மாவட்டத்தில் 70 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் தெரிவித்தார்.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக இம்மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்ட ஆயிரக்கணக்கான விவசாயச் செய்கைகள் பாதிப்படைந்துள்ளன. இம்மாவட்டத்தின் நெற்செய்கை மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கை போன்றவற்றுக்கும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதேவேளை, கடற்றொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் தமது மீன்பிடி படகுகள், வள்ளங்கள் போன்றவற்றை கடற்கரையிலிருந்து வெகு தொலைவிற்கு அப்புறப்படுத்தி கரையொதுக்கி வைத்துள்ளனர். இதற்கென கனரக இயந்திரங்களின் உதவியுடன் கடற்றொழில் உபகரணங்கள் கரையொதுக்கப்பட்டு வருகின்றன. கடல் அலைகளின் வீரியம் இம்மாவட்டத்தில் அதிகரித்து காணப்படுவதால் சில பிரதேசங்களில் கடல் நீர் கரைப் பகுதிகளுக்கு ஊடுருவியுள்ளதனையும் அவதானிக்க முடிகிறது.
அம்பாறை மாவட்டத்தின் வெள்ள நிலைமைகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம உள்ளிட்ட மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள், முப்படையினர், துறைசார் முக்கியஸ்தர்கள் பொது அமைப்பினைச் சேர்ந்தவர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் போன்றோர் மக்கள் நல சேவையில் ஈடுபட்டு வருவதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.முகம்மட் றியாஸ் மேலும் தெரிவித்தார்.
மாட்டுப்பளை பாலம் சேதம்
நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள மாட்டுப்பளை பிரதேசத்தில் பாலமொன்று உடைப்பெடுத்துள்ளமையால் அக்கரைப்பற்று- கல்முனை பிரதான போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளன.
கல்முனை- அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஒலுவில் களியோடைப் பாலத்தினை அண்டிய பிரதேசத்தில் வயல் நிலங்களை ஊடறுத்து செல்லும் பாதையில் அமைந்துள்ள இப்பாலம் தாழ் இறங்கியுள்ளது. இப்பாலம் விவாசய நிலப்பரப்பினை சூழ்ந்த பகுதியில் உள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக இப்பகுதி விவசாய நிலப்பரப்புகள் முற்றாக நீரினால் நிறைந்துள்ளன.
இப்பாலத்தினை நோக்கி வேகமாக நீர் பாய்ந்து செல்லும் வேளையிலேயே இது உடைப் பெடுத்துள்ளதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
தென்கிழக்குப் பல்கலையிலும் வெள்ளம்
இதனிடையே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமையினால் விடுதி பூட்டப்பட்டுள்ளது. அத்துடன், அங்கிருந்து மாணவர்கள் வெளியேறி வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர் மற்றும் எம்.எஸ்.உதுமா லெப்பை ஆகியோரும் சென்று பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு
கடந்த ஓரிரு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல முக்கிய இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தன.
முக்கிய இடங்களான மட்டக்களப்பு விமான நிலைய சுற்றுப்பகுதி, மத்திய பஸ் தரிப்பிடம், மட்டக்களப்பு நகர பொதுச் சந்தை, அரசடிச் சந்தி, கிழக்குப் பல்கலைகக்கழக மருத்துவ பீட சுற்றுவட்டப் பகுதி, கல்லடி, காத்தான்குடி-, நொச்சிமுனை, மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் சித்தாண்டி, வந்தாறுமூலை – கொம்மாதுறை, மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் மாவடிஓடை, ஈரலக்குளம், வண்ணாத்திஆறு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் கன்னங்குடா, கரையாக்கன்தீவு, பண்டாரியாவெளி எனப் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளத்தினால் மூழ்கியுள்ள
காங்கேயனோடை பிரதேசம்
குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதாலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாலும் காங்கேயனோடை பிரதேசத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் 90 வீதமான வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.
அந்த பிரதேசத்தில் பொதுமக்களை மீட்பதற்காக அப்பகுதி இளைஞர்களும் நலன் விரும்பிகளும் சிறிய வள்ளங்கள் மூலம் செயற்பட்டு வருகின்றனர்.
நோயாளர்கள் மற்றும் முதியவர்கள் சிறிய வள்ளத்தின் மூலம் மீட்கப்பட்டு மேட்டு நிலப்பிரதேசத்திற்கு கொண்டு வந்து அங்கு உள்ள வீடுகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கேயனோடை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல்களின் நிருவாகிகள் ஒன்றிணைந்து சமைத்த உணவினை வழங்கு வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோன்று காத்தான்குடி வாவிக் கரையோரம் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பிரதேசத்தில் உள்ள பலரின் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் பிரதேச மக்களும் பாரிய அசௌகரியங்களையும் சங்கடங்களையும் எதிர் நோக்கி இருக்கின்றனர்.
காத்தான்குடி வாவிக்கரையோரம் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் உட்புகுந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை பள்ளிவாசல் உட்பட உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் குளங்களின்
நீர் மட்டம் உயர்வு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகம் அறிவித்துள்ளது.
அதற்கிணங்க கட்டுமுறிவு குளத்தில் 12 அடி, உறுகாமம் குளத்தில் 17.9அடி, வெலிக்காக் கண்டிய குளத்தில் 17.11 அடி, நீர்மட்டம் அதிகரித்து வான்கதவு திறக்கப்பட்டு அவற்றிலிருந்து மேலதிக நீர் வெளியேறுகின்றது.
உன்னிச்சைக் குளத்தில் 30அடி, வாகனேரி குளத்தில் 18.3அடி , மேலும் வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13. 6″அடி நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
புனாணை அணைக்கட்டு 8.3″அடி, நவகிரிக் குளத்தின் 30.5 அடி, கித்துல் குளத்தின் 4 அடி நீர்மட்டம் உயர்த்துள்ளது.
ஓட்டமாவடி, கோரளைப்பற்றில் பாதிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வெள்ளத்தால் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் 455 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் தெரிவித்தார்.
இவர்களுக்கான சமைத்த உணவுகள் பிரதேச செயலகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிரதேச தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளதுடன் இவர்களை கவனிப்பதற்கு பிரதேச செயலகத்தினால் அவசர அனர்த்த குழுவும் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 505 குடும்பங்களை சேர்ந்த 1511 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிண்ணையடி மற்றும் மீராவோடை கிராம சேவகர் பிரிவுகளில் இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் நாசிவன்தீவு கிராமத்திற்கான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதுடன் அங்கு 543 குடும்பங்களைச் சேர்ந்த 1623 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.
இதேவேளை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 388 நபர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் வசித்து வருவதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.
காவத்தமுனை மக்கள் இடம்பெயர்வு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட காவத்தமுனை பிரதேச மக்கள் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர்மழை காரணமாக குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக இதுவரை 129 குடும்பங்ளைச் சேர்ந்த 352 பேர் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று, பாதிக்கப்பட்ட பலர் தங்களது உறவினர்கள் வீடுகளில் இடம்பெயர்ந்துள்ளனர்.
இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான அனைத்துவித தேவைகளையும் ஓட்டமாவடி பிரதேச செயலகம் மேற்கொண்டு வருகிறது.
மட்டக்களப்பு – கொழும்பு
போக்குவரத்து தடை
அத்தோடு, மன்னம்பிட்டிய சந்தி (மகா ஒயா) வீதி உடைந்து காணப்படுவதால் மட்டக்களப்பு -–கொழும்பு வீதி மூடப்பட்டுள்ளது. அதேபோன்று, மன்னம்பிட்டி, வெலிகந்தை, புனாணை ஆகிய பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் அவ்வீதியூடாகவும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
புனாணை பகுதியில் புகையிரதப் பாதையை குறுக்கறுத்து நீர் அதிகரித்துச் செல்வதால் மட்டக்களப்பு –- கொழும்பு புகையிரத சேவையும் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது. எனினும் நேற்று நண்பகலுக்குப் பின்னர் இப் பாதையூடான போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் வழமைக்குத் திரும்பின.
திருகோணமலை
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (27) மதியம் 12.30 வரை 2208 குடும்பங்களைச் சேர்ந்த 6512 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கே.சுகுனதாஸ் தெரிவித்தார்.
இதில் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் 12 குடும்பங்களைச் சேர்ந்த 40 நபர்களும், மூதூரில் 938 குடும்பங்களைச் சேர்ந்த 2574 நபர்களும், தம்பலகாமம் பிரதேச பகுதியில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 301 நபர்களும் , மொரவெவவில் 29 குடும்பங்களைச் சேர்ந்த 91 நபர்களும், திருகோணமலை பட்டினமும் சூழலும் பகுதியில் 316 குடும்பங்களைச் சேர்ந்த 1282 நபர்களும், கிண்ணியாவில் 709 குடும்பங்களைச் சேர்ந்த 1852 நபர்களும், குச்சவெளியில் 48 குடும்பங்களைச் சேர்ந்த 129 நபர்களும், கந்தளாயில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 235 நபர்களும், வெருகலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 03 நபர்களும், பதவிசிறிபுர பகுதியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 05 நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சேருவில, தம்பலகாமம், பட்டினமும் சூழலும், குச்சவெளி ஆகிய பிரதேச செயல பகுதியில் பாதுகாப்பு நிலையங்களிலும் பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 668 குடும்பங்களை சேர்ந்த 2369 நபர்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். குறித்த கன மழை காரணமாக நேற்று மதியம் வரை பகுதியளவில் 14 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
பிரதேச சபை செயலாளர்களுடன்
கலந்துரையாடல்
அனர்த்த நிலைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள் தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிண்ணியா நகர சபை, கிண்ணியா பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை செயலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
வெள்ள நீரை விரைவாக வடிந்தோட செய்ய தேவைப்படும் கனரக இயந்திரங்களை தனியாரிடம் இருந்து பெறுதல், பிரதேச சபை ஊழியர்களுக்கு மேலதிகமாக பொதுமக்களின் பங்களிப்பை பெறுவது மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மன்னாரில் வெள்ளப் பாதிப்பு
வட மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள பகுதிகளையும் பார்வையிடுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மன்னாருக்கு சென்றிருந்தார்.
அக்குறணை நகரத்தில் மீண்டும் வெள்ளம்
கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக கண்டி மாவட்டத்திலும் இன்னும் பல இடங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அக்குறணை நகரத்தில் கண்டி- – மாத்தளை பிரதான வீதியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது.
இதன் காரணமாக அக்குறணையூடாக செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழியைப் பயன்படுத்த வேண்டிவந்தது.
அக்குறணை நகரத்திற்கு அண்மித்ததாக ஓடும் பிங்கா ஓயா மற்றும், வஹுகல ஓயா என்பவற்றின் நீர் மட்டம் அதிகரிக்கும் போது அக்குறணை நகரத்தின் தாழ்நிலம் பகுதிகளான சியா ஞாபகார்த்த வைத்தியசாலை சந்தி மற்றும் துனுவில வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கும்
முன்பள்ளிகளுக்கும் விடுமுறை
நாட்டிலுள்ள சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் முஸ்லிம் பாடசாலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எனினும், சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் மேலும் இரு தினங்களும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் நவம்பர் 29 வரை தற்காலிகமாக மூடப்படும் என மத்திய மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மத்திய மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, வடமத்திய மாகாணத்தில் உள்ள 94 முஸ்லிம் மற்றும் தமிழ் பாடசாலைகள் இம்மாதம் 27ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை மூடப்படும் என மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.
மேலும், வடமத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர் நிலந்த ஏகநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக சப்ரகமுவா மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நவம்பர் மாதம் 27,28,29ம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்தோடு, மேல் மற்றும் வட மேல் மாகாணங்களிலும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.- Vidivelli