பி எம் எம் பெரோஸ் நளீமி
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆய்வாளர்,
மஹிடோல் பல்கலைக்கழகம், தாய்லாந்து
சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய உரிமை மீறல்கள் எல்லாம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொழுது வீட்டுக்குள் ஒழிந்து கொண்டிருந்தவர்கள் இப்போது முகப்புத்தக பொது வெளியில் மல்யுத்த வீரர்களாக பிரகாசிக்கிறார்கள்..
கடந்த பல தசாப்தங்களாக அம்பாறை மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள் வடமாகாண முஸ்லிம்களுடைய பிரச்சினைகள்
இன்னும் வட கிழக்குக்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்களுடைய கல்வி, பொருளாதார, பாதுகாப்பு பிரச்சினைகள், வியாபாரங்களை சுதந்திரமாக செய்ய முடியாமல் வியாபார தலங்கள் பள்ளிவாசல்கள் வீடுகள் எரிக்கப்பட்ட பல பிரச்சினைகள் எல்லாம் இடம்பெற்றன. கலாச்சார உரிமை மத உரிமை மத வணக்க வழிபாடுகளை செய்வதற்கான உரிமை மார்க்க கல்வியை கற்பதற்கான உரிமைகள் அதற்கான கலாபீடங்களை நடத்துவதற்கான உரிமைகள் எல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டன.
தேர்தல்கள் வருகின்ற பொழுது முஸ்லிம்களுக்கு எதிரான, இஸ்லாமிய மார்க்கத்துக்கு எதிரான இனத் தேசியவாத தீவிர சிந்தனை உள்ள பல நபர்களின் வெறுப்பு பேச்சுக்கள் மார்க்கத்தை நமது கலாச்சார உடைகளையும் கொச்சைப்படுத்துவதற்கான செயற்பாடுகள் எல்லாம் இடம்பெற்ற பொழுது அன்றிருந்த அரசாங்கங்கள் அவர்களுக்கு எதிராக எதுவும் செய்யாமல் சட்டத்தை அமுல்படுத்தாமல் அமைதியாக வேடிக்கை பார்த்த பொழுது இந்த போராளிகள் எங்கிருந்தார்கள்…?
இந்த பிரச்சினைகள் சிறுபான்மை சமூகத்தின் சமத்துவ உரிமை, சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்கான உரிமை, சட்டப்பாதுகாப்பை பெறுவதற்கான உரிமை, பாதுகாப்பு உரிமை கலாசார உரிமை மத உரிமை என பல்வேறு உரிமைகள் மீறப்பட்டன.
அப்பொழுதெல்லாம் இருந்த அரசாங்கங்களுக்கு எதிராக இவர்கள் வாய் திறக்காமல் எங்கிருந்தார்கள்?
மிகவும் சந்தோஷமான செய்தி தற்பொழுதாவது நம்மவர்கள் விழித்திருக்கிறார்கள் ….
எனவே விழித்த கையோடு மேற்படி உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கு தயாராகுங்கள்.
உங்கள் போராட்டங்கள் முகப்புத்தகத்திலோ அல்லது ஜும்மா முடிந்தவுடன் சில பதாகைகளை தூக்கிக்கொண்டு வீடு செல்கின்ற வழியில் ஒன்று சேர்ந்து கோசமிட்டு விட்டுச் சென்றுவிடுதோ அல்ல..
- இந்தப் பிரச்சினைகளை ஆவண படுத்துவதற்கு தயாராகுங்கள்..
- நீதிமன்றத்தில் வழக்கிடுவதற்கு தயாராகுங்கள்
மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடாக பதிவு செய்வதற்கு வெளி வாருங்கள். - இவைகளால் முடியாத பொழுது சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு வரைக்கும் கொண்டு செல்வதற்கு முன் வாருங்கள்
- இவற்றைச் செய்வதற்கு நிதிப்பங்களிப்பு செய்யக்கூடியவர்களாக மாறுங்கள்
- கல்வித்துறையில் அல்லது பல்கலைக்கழகங்களில் கற்கின்ற மாணவர்களுக்கு இப்படியான சமூகப் பிரச்சினைகளை ஆய்வுத் தலைப்புகளாக எடுக்கும்படி ஆலோசனை கூறுங்கள்.
இவைகள் உருப்படியான முன்னெடுப்புகளாக அமையும். இவைகளை விட்டு விட்டு சில்லறத்தனமான விடயங்களை சமூகத்தின் பிரச்சினைகளாக இந்த பொது வெளியில் பயன்படுத்தாதீர்கள்.
நவீன தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் நம்முடைய எழுத்துக்கள் எல்லாம் யாருக்கு என்ன மொழியில் வேண்டுமோ அவைகள் அடுத்த கணம் மொழி பெயர்க்கப்பட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
நாம் அறிவில்லாத சமூகம் என பிறர் சிந்திக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள்.
புதிய அரசாங்கம் இனவாதத்தை ஒழித்து ஊழலையும் ஒழித்து சிறந்த நாட்டைக் கட்டி எழுப்புவதற்கான முயற்சிகளை செய்வதாக கூறுகிறார்கள்.
இவர்களுடன் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று பார்க்க முடியும்.
நமது உரிமைகளை இழந்து அவர்களுடன் பயணிக்க வேண்டும் என்கிற ஒரு நிலை ஏற்படுமாக இருப்பின் அப்பொழுது விலகிக்கொள்ள முடியும்.மூன்றில் இரண்டை அவர்கள் வைத்திருக்கின்ற பொழுது நாம் மிகவும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.- Vidivelli