எஸ்.என்.எம்.சுஹைல்
ஐரோப்பியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இலங்கை அரசியல் நிர்வாக முறைமை அறிமுகமானது. 1505 இல் போர்க்கீசர் இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றினர், அவர்களிடமிருந்து 1658 இல் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். இவர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்த போது நாட்டில் பல்வேறு நிர்வாக முறைமை இருந்துவந்தது. குறிப்பாக கண்டி இராஜியம் வலுவான அரசாக இருந்தது. எனினும் 1796 இலங்கைக்கு படையெடுத்த பிரித்தானியர் 1815 இல் முழு இலங்கையையும் கைப்பற்றி ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
காலனித்துவத்தின் வருகைக்கு முன்னரும் பின்பும் இலங்கையின் ஆட்சியில் முஸ்லிம்கள் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். குறிப்பாக குருநாகல் யுகத்தின்போது அரசனாகவும் குராசான் மன்னரின் கதையும் இருக்கிறது. இருப்பினும் பிரித்தானியர் 1833 இல் அறிமுகப்படுத்திய கோல்புறூக் அரசியல் யாப்பின் படி ஆறு நிர்வாக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டனர்.
இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சியின் தந்தையான எம்.சி.சித்திலெப்பை போன்றோரின் போராட்டத்தின் பின்பு 1889 ஆம் ஆண்டு கோல்புறூக் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டு பிரதிநிதித்துவம் எட்டப்பட்டது. இதன்போது, இலங்கை முஸ்லிம் ஒருவர் சட்ட நிரூபன சபையின் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராக தெரிவானார். 1910 ஆம் ஆண்டு குருமக்கலம் யாப்பிலும் 1921 தற்காலிக மெனிங் அரசியலமைப்பின் ஊடாகவும் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டது. எனினும், 1924 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மனிங் டெவொன்சயர் அரசியல் சீர்திருத்தம் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை மூன்றாக உறுதி செய்தது. இவ்வாறே 1931 இல் டொனமூர் சீர்திருத்தம் முன்வைத்த நிர்வாக முறையில் மந்திரி சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது.
இதனிடையே, 1947 சோல்பரி யாப்பு, சுதந்திரத்திற்கு பின்னரான அமைச்சரவையில் தொடர்ச்சியாக முஸ்லிம் அமைச்சர்கள் இருந்துவந்துள்ளனர். எந்தவித அழுத்தங்களும் இன்றி நாட்டின் இன பல்வகைமையை கருத்திற்கொண்டு ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டின் நிர்வாகத்துறையின் பங்குதாரர்களாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியொன்றை உள்ளீர்க்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது.
எனினும், முதன் முறையாக இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் பத்தாவது பொதுத் தேர்தலுக்கு பின்னர் நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட 22 பேர் கொண்ட அமைச்சரவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் இல்லாது செய்யப்பட்டுள்ளது. இதனால், தேசிய மக்கள் சக்தியை 61 வீதத்திற்கும் அதிகமான வாக்குப் பலத்துடன் மூன்றில் இரண்டு பாராளுமன்ற ஆசனத்தைப் பெற்று வலுவான ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொள்ளவதற்கு பங்குதாரர்களாக இருந்த முஸ்லிம் சமூகம் புறக்கணிக்கப்பட்டமை பல்வேறு வகையிலும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வாக்களித்த, வாக்களிக்காத, ஆதரவளித்த, ஆதரவளிக்காத மக்கள் பல்வேறு விமர்சனங்களையும் முன்வைக்கும் நிலையில் அரசாங்கம் இதற்கு பதிலளிக்கும் விதம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சிம்மாசன உரையின்போது தனது உரையின் ஆரம்பத்திலேயே இனவாதம், மதவாதம் பற்றியெல்லாம் பேசியிருந்தார். எனினும், கடந்த 18 ஆம் திகதி அவர் வழங்கிய அமைச்சரவை நியமனம் குறித்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாகத்தான் இந்த பதிலை குறிப்பிட்டாரா என்ற கேள்வியும் எழுந்தது.
இதைவிட கடந்த வார இறுதியில் அக்குறணை அஸ்னா பள்ளிவாசலுக்கு சென்ற வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் இது விடயமாக முஸ்லிம்கள் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜித, “முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேண்டுமென கேட்காதீர்கள். அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்சராக இருந்தபோது, முஸ்லிம் பாடசாலை மாணவிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கான துணியை வழங்க வேண்டுமென அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்தேன். நான் சிங்கள அமைச்சர் தானே. முஸ்லிம் அமைச்சர் அல்லவே?அம்பாறையில் எங்களுக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகவில்லை. ஆனால் நாங்கள் ஆதம்பாவாவை தேசியப்பட்டியலில் நியமித்தோம்.மேல்மாகாண ஆளுநர் முஸ்லிம் ஒருவர். எனவே முஸ்லிம் ஒருவர் அமைச்சரவையில் இலையென்று, அந்த விடயத்தில் தொங்கிக் கொண்டிருக்க வேண்டாம்” என குறிப்பிட்டிருந்தார்.
இது இப்படியிருக்க கடந்த திங்களன்று சபாநாயகர் அசோக்க ரன்வல அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைக் காரியாலயத்திற்கு சென்று அதன் தலைவர் முப்தி ரிஸ்வி, செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் உலமா சபையின் நிர்வாக பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை சந்தித்திருந்தார்.
இதன்போது, நாட்டில் சகல இன மக்களும் தங்கள் மத, கலாசார அடையாளங்களை பேணி வாழும் உரிமை பெற்றுள்ளனர். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாராளுமன்ற அக்கிராசன உரையை மேற்கோளிட்டு, நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படும். இனவாத, மதவாத சிந்தனைகளை தூண்டி மக்களை பிரிப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.
எனினும், அவர் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உறுதிபடுத்தப்படாமை குறித்து எந்த கருத்தையும் நேரடியாக குறிப்பிட்டிருக்கவில்லை.
இதனிடையே, இதுவிடயமாக நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டது.
ஊடகவியலாளர் றிப்தி அலியினால் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதி இல்லாமை தொடர்பில் அமைச்சரவை பேச்சாளரிடம் நேரடியாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்”நாங்கள் இனம், மதம் அல்லது சாதி அடிப்படையில் அமைச்சரவையை அமைக்கவில்லை. அமைச்சு அதிகாரங்களை கையாள்வதில் மிகவும் திறமையான நபர்களை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகர், பிரதி அமைச்சர் போன்ற பதவிகளை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வகிக்கின்றனர். மேலும், முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஒருவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டார். குறிப்பிட்ட இனங்கள், மதங்கள் அல்லது சாதிகள் அன்றி ஒட்டுமொத்த இலங்கை தேசத்துக்கும் சேவை செய்வதிலேயே நாம் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
அத்துடன், தற்போதைய நிலைமையை இனம் அல்லது மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம். ஒன்றிணைந்த இலங்கை தேசம் என்ற தொலைநோக்கு பார்வையுடன் புதிய அரசாங்கத்தையும் அமைச்சரவையையும் நாங்கள் நிறுவியுள்ளோம். இந்த அணுகுமுறையானது பிரச்சினைகளை மிகவும் திறம்பட கையாள்வதற்கு எமக்கு இடமளிக்கும்” என்றும் அமைச்சரவை பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் ஊடகத்துறை அமைச்சருமான டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கூறினார்.
இங்கு அமைச்சர்களான விஜித ஹேரத் மற்றும் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் ஒரே மாதிரியான பதில்களையே குறிப்பிட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்திற்கு இப்படித்தான் பதிலளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியினால் முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்ற வினா எழுகிறது.
இதனிடையே, மிகவும் தகுதியுடைய அனுபவமுள்ளவர்களுக்குத்தான் அமைச்சுப் பதவிகளும் பிரதியமைச்சுப் பதவிகளும் அமைச்சுகளின் செயலாளர் பதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆக, தேசிய மக்கள் சக்தி ஊடாக எட்டு முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகினர். இவர்களில் ஒருவர் மாத்திரம் பிரதியமைச்சுப் பதவிக்கு தகுதியானவராக இருந்துள்ளார். அத்தோடு, பிரதி சபாநாயகர் பதவியே இன்னொரு முஸ்லிம் பிரதிநிதியின் தகுதிக்கு பொருத்தமானதாக இருந்துள்ளது. எனினும், இலங்கை நிர்வாக சேவையில் இருக்கும் முஸ்லிம் அதிகாரிகள் தகுதியற்றவர்களாக கணிக்கப்பட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
இம்முறை பொதுத் தேர்தல் இலங்கை அரசியல் வரலாற்றில் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. இந்த மாற்றத்தை விரும்பியே பெரும்பாலான முஸ்லிம் மக்களும் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர். இந்நிலையில், அவர்கள் பாராம்பரியமாக ஆதரித்து வந்த ஐக்கிய தேசியக் கட்சி அல்லது அந்த கட்சியிலிருந்து பிரிந்த ஐக்கிய மக்கள் சக்தியையும் முஸ்லிம் கட்சிகளையும் விட்டு வெளியேறி புதிய அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தனர். ஜனாதிபதி அநுர மீதான நம்பிக்கை மற்றும் முஸ்லிம் கட்சிகள் மீதான அதிருப்தியினால் மக்கள் இந்த தீர்மானத்திற்கு தள்ளப்பட்டனர். மோசமான முஸ்லிம் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை பிழை என்று கருதி தமது பாதையை மாற்றிக்கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களை அரவணைக்க தவறுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது.
முஸ்லிம்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அதனை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர முஸ்லிம் சமூகத்தை அதிருப்திக்குள்ளாக்கும் தீர்மானங்களை எடுக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.- Vidivelli