நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் அனைத்து மாவட்டங்களுமே கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயல் நாளை அல்லது நாளை மறுதினம் கிழக்கு கடற்பிராந்தியத்தியத்தினூடாக நகர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டைக் கடக்கவுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப் புயல் காரணமாக நேரடி பாதிப்புக்கள் இலங்கைக்கு ஏற்படாது என்ற போதிலும், மறைமுக தாக்கமாக வேகமான காற்று மற்றும் தொடர்ச்சியான மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சீரற்ற காலநிலை காரணமாக பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் அரபுக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ளத்தில் குடைசாய்ந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதில் 12க்கும் அதிகமானோர் பயணித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இவர்களில் ஐவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏனையோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் நேற்று மாலை வரை நான்கு மாணவர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன. ஏனையோரை தேடும் பணிகள் தொடர்கின்றன.
இச் சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பலத்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்ரசா நிர்வாகம் இதுவிடயத்தில் கவனயீனமாக நடந்து கொண்டதாக பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். எனினும் மத்ரசாவும் மழையினால் பாதிக்கப்பட்டதால் பெற்றோருடன் கலந்துரையாடியே மாணவர்களை பாதுகாப்பான முறையில் அனுப்பி வைத்ததாக நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறான சமயங்களில் சம்பந்தப்பட்ட தரப்புகள் மிகவும் விழிப்புடன் நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இவ்வாறான இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் நமது சமூகம் எப்போதும் முன்மாதிரியாக நடந்து கொள்வதே வரலாறாகும். அதேபோன்றுதான் இம்முறையும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம் அமைப்புகளும் தொண்டர்களும் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக எல்லா இடங்களிலும் சமைத்த உணவுகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான பணிகளில் ஈடுபடும் அனைவருக்கும் உயர்ந்த கூலி கிடைக்க பிரார்த்திக்கிறோம். இவ்வாறான நிவாரணப் பணிகளில் அருகருகே வாழும் ஏனைய சமூகங்களுக்கும் உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவது நமது பொறுப்பாகும். இது சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்த பெரிதும் உதவும்.
இதேவேளை இவ்வாறான நிவாரணப் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் இடம்பெறுமாயின் ஒரே பகுதிக்கு அதிக உதவிகள் சென்றடைவதை தவிர்ப்பதுடன் தேவையுடைய ஏனைய பகுதிகளுக்கு உதவிகளை வழங்க முடியுமாகவிருக்கும். இது தொடர்பில் அவ்வப்பிரதேசங்களிலுள்ள உலமா சபை கிளைகள் பள்ளிவாசல் சம்மேளனங்கள் மற்றும் சிவில் நிறுவனங்கள் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
அதுமாத்திரமன்றி அரச நிவாரணங்களை பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் விடயத்திலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். வெள்ள அனர்த்தம் நீங்கி பல வாரங்களில் பின்னர் மக்களுக்கு உதவிகள் சென்றடைவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஜனாதிபதி நேற்று வலியுறுத்தியுள்ளது போன்று தொழில்நுட்ப ரீதியான தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செயற்படாது களத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அனைத்து கிராம சேவையாளர்கள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளினதும் கடப்பாடாகும்.
இந்த அனர்த்தம் விரைவில் நீங்கி இயல்பு வாழ்க்கை மீளத்திரும்ப அனைவரும் பிரார்த்திப்பதுடன் எம்மால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்ய முனவருவோமாக. – Vidivelli