றிப்தி அலி
கடந்த நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரிய வெற்றியினை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சுவீகரித்தது.
செப்டம்பரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திசாநாயக்க பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் சுமார் 120 ஆசனங்களையே அக்கட்சி பெறும் என ஆய்வாளர்கள் எதிர்வுகூறியிருந்தனர்.
இந்த எதிர்வுகூறலுக்கு முற்றிலும் மாற்றமாகவே பொதுமக்களின் வாக்களிப்பு அமையப் பெற்றிருந்தது. இலங்கை வரலாற்றில் எந்தவொரு தனிக் கட்சியும் கைப்பற்றதாக 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பறியுள்ளது. இந்த எண்ணிக்கை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை விட அதிகமான ஆசனங்களாகும்.
எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒற்றுமையின்மையின் காரணமாகவே ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தளவு அதிக எண்ணிக்கையான ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து போட்டியிட்டிருந்தால் இன்று அவர்களினால் ஆட்சியினை கைப்பற்றியிருக்க முடியும்.
அந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது போன்று பாராளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிட்டமையினால் அவர்களுக்கு வாக்களிப்பதில் எந்தப் பிரயோசனமுமில்லை என பொதுமக்கள் உணர்ந்துவிட்டனர்.
இதேநிலை தான் சிறுபான்மை அரசியலிலும் காணப்பட்டது. குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கின. இதன் காரணமாகவே அக்கட்சிகளின் வாக்குகளில் பாரிய சரிவு ஏற்பட்டது.
குறிப்பாக இலங்கை தமிழரசுக் கட்சி – அதன் கோட்டையான யாழ். மாவட்டத்தினையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அதன் கோட்டையான அம்பாறை மாவட்டத்தையும் இன்று இழந்துள்ளன.
இவ்வாறு சிறுபான்மைக் கட்சிகள் எதிர்கால தேர்தல்களில் பிளவுபட்டு களமிறங்கினால், அக்கட்சிகள் முகவரியற்றுப் போய்விடும் என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
வட மாகாணத்தில் யாழ். மற்றும் வன்னி ஆகிய இரண்டு மாவட்டங்களையும் ஒரு தேசியக் கட்சி கைப்பற்றியுள்ளது இலங்கை வரலாற்றில் முதற் தடவையாகும். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு தேசியக் கட்சி வெற்றி பெற்றமையும் முதலாவது சந்தர்ப்பமாகும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களை வெற்றியீட்டிய ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியீட்ட முடியவில்லை. இதற்கான காரணம் ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள பங்காளிக் கட்சிகள் தனித்துப் போட்டியிட்டமையாகும்.
இதன் காரணமாகவே கிழக்கு மாகாணத்தில் இரண்டு ஆசனங்களை முஸ்லிம் சமூகம் இழந்துள்ளது. குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பாராளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்டிருந்தால் கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை நிச்சயமாக கைப்பற்றியிருக்க முடியும்.
கடந்த பாராளுமன்றத்தில் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு முஸ்லிம் ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் ஆசனங்களும் காணப்பட்டன. எனினும் இந்தத் தேர்தலில் திருகோணமலையில் ஒரு முஸ்லிம் ஆசனத்தையும், அம்பாறையில் இரண்டு முஸ்லிம் ஆசனங்களையும் மாத்திரமே பெற முடிந்தது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலிருந்து தேசிய மக்கள் சக்திக்கு 75,000க்கு மேற்பட்ட வாக்குகள் வழங்கிய போதிலும் ஒரு முஸ்லிம் ஆசனத்தினை பெற முடியவில்லை. இதற்கு பிரதேசவாதமும், வேட்பாளர்களிடையே நிலவிய ஒற்றுமையின்மையுமே பிரதான காரணமாகும்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இணைந்து போட்டியிட்டிருந்தால் இரண்டு ஆசனங்களை நிச்சயமாக கைப்பற்றியிருக்க முடியும். எனினும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் பிழையான வியூகத்தினால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டு. மாவட்டத்தில் ஆசனத்தினை இழந்துள்ளது. இந்தத் தவறினை தற்போது அக்கட்சியினர் உணர்ந்துள்ளனர்.
கடந்த பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து ஜனாஸா எரிப்பின் போது வாய்மூடி மௌனியாக இருந்தவர்களில் காதர் மஸ்தானைத் தவிர ஏனைய அனைவரும் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சில முஸ்லிம் தலைவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் சில கட்சிகளும், சுயேட்சைக்குழுக்களும் இந்தத் தேர்தலில் களமிறங்கின.
குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினைத் தோற்கடிப்பதற்காக கண்டி மாவட்டத்தில் உதைபந்துச் சின்னத்தில் சுயேட்சைக்குழுவொன்று போட்டியிட்டது. இந்த சுயேட்சைக்குழு பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 13,378 ஆகும். இது 5 சதவீதத்தினைக் கூட தாண்டவில்லை.
இது போன்று தான் புத்தளம் மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் (7,083 வாக்குகள்), ஐக்கிய தேசிய கூட்டமைப்பும் (6,410 வாக்குகள்) தனித்தனியாக போட்டியிட்டன. இந்த இரண்டு கட்சிகளும் 5 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளையே பெற்றிருந்தன. குறித்த 13,493 வாக்குகளும் ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டிருக்குமாயின் அக்கட்சியின் ஆசனமொன்று அதிகரிக்கப்பட்டு முஸ்லிமொருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும்.
இதேவேளை, களுத்துறை, கம்பஹா, குருநாகல், புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீமும் றிசாத் பதியுதீனும் இணைந்து ஒரு வேட்பாளரை மாத்திரம் நிறுத்தியிருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக நிச்சயம் ஒரு ஆசனத்தினைப் பெற்றிருக்க முடியும்.
இந்தத் தவறினை தேசிய மக்கள் சக்தி மேற்கொள்ளாமையினால், மாத்தறை, குருநாகல், புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு ஆசனத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் ஊடாக குறித்த மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் மக்களின் நீண்ட கால தாகம் தீர்க்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம்கள் அங்கம் வகித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வரை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களின் ஊடாக 17 முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன.
இதனிடையே அநுர குமார திநாசாயக்கவின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படாமை பாரிய கருத்தாடலொன்றை இன்று முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அமைச்சுக்களின் செயலாளர் நியமனத்திலும் முஸ்லிம் அதிகாரி உள்ளடக்கப்படாமை குறிப்பிடத்தக்கதாகும்.
எனினும், நாங்கள் இனவாத அடிப்படையில் செயற்படவில்லை. பிரதி அமைச்சர் நியமனத்தில் முஸ்லிம்கள் நிச்சயம் உள்ளடக்கப்படுவர் என அரசாங்கம் தெரிவிக்கின்றது.
எப்படியோ இந்த ஜனாதிபதியின் வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளிகளாக உள்ளனர். இதனால் அனைத்து நியமனங்களிலும் முஸ்லிம் சமூகத்தினையும் உள்வாங்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.- Vidivelli