எப்.அய்னா
உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தாக்குதல்களுடன், முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி துவான் சுரேஷ் சலேவுக்கு தொடர்பிருப்பதாக, செனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையப்படுத்தி குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோட்டை நீதிவான் நீதிமன்றுக்கு கடந்த 11 ஆம் திகதி முதல் தகவல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த திகதியொன்றில், அன்சீர் அசாத் மெளலானா எனும் நபர் செனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆவணப் படம் ஒன்றில், இலங்கையில் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் சில விடயங்களை வெளிப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து கடந்த அரசாங்க காலத்தில் அதாவது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது, 2023 செப்டெம்பர் மாதம் 21,22,23 ஆம் திகதிகளில் இந்த விடயத்தை மையப்படுத்தி பாராளுமன்றத்தில் மூன்று நாள் விவாதம் நடாத்தப்பட்டது.
இதனிடையே தான் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செனல் 4 தொலைக்காட்சி விவகாரத்தை மையப்படுத்தி விடயங்களை ஆராய, ஓய்வு பெற்ற நீதியரசர் இமாம் தலைமையில் குழு அமைத்தார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.ஐ.இமாம் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி, ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இந்த குழுவானது, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவாக நியமிக்கப்படவில்லை. மாற்றமாக ஜனாதிபதிக்கு தகவல் அளிக்க, விசாரணை அதிகாரமற்ற ஒரு குழுவாகவே செயற்பட்டது.
எனினும் உயிர்த்த ஞாயிறு தினம் நடாத்தப்பட்ட தாக்குதல்களை மையப்படுத்திய, மிகப் பாரதூரமான வெளிப்படுத்தல்கள் இருந்தும் செனல் 4 தொலைக்காட்சி முன்வைத்த விடயங்கள் தொடர்பில் எந்த நியாயமான விசாரணைகளும் நடாத்தப்படவில்லை.
இவ்வாறான நிலையில் தான், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக கடமையேற்ற பின்னர், சமூக சமய மையத்தின் (சி.எஸ்.ஆர்.) நிறைவேற்று பணிப்பாளர் அருட்தந்தை ரொஹான் சில்வா உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் விவகாரத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவான ஒரு கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். அதில் செனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல் தொடர்பில் நியாயமான விசாரணை கோரப்பட்டிருந்த நிலையில், அத்தொலைக்காட்சி வெளிப்படுத்தலில் அப்போது அரச உளவுத்துறை பிரதானியாக இருந்த சுரேஷ் சலேவை அப்பதவியில் இருந்து நீக்குமாறும் கோரப்பட்டிருந்தது.
அவ்வாறான பின்னணியில் பின்னர் சில நாட்களில் அரச உளவுத்துறை பிரதானி பதவியில் இருந்து சுரேஷ் சலே நீக்கப்பட்டு அப்பதவிக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த நியமிக்கப்பட்டார்.
இது இவ்வாறிருக்க, அருட் தந்தை ரொஹான் சில்வா, ஜனாதிபதிக்கு சமர்ப்பித்த கடிதத்தின் பிரதியை இணைத்து, செனல் 4 விவகாரத்தில் நியாயமான விசாரணை கோரி எழுத்து மூல முறைப்பாடொன்றினை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு சமர்ப்பித்தார்.
அந்த முறைப்பாடு பதில் பொலிஸ் மா அதிபருக்கு மாற்றப்பட்ட பின்னர், பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அது குறித்து விசாரணை செய்யும் பொறுப்பை சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பொறுப்பாக்கியுள்ளார்.
இந்த நிலையிலேயே உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தாக்குதல்களுடன், முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி துவான் சுரேஷ் சலேவுக்கு தொடர்பிருப்பதாக, செனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை மையப்படுத்தி குற்றவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த விசாரணைகளில் முதலில், முறைப்பாட்டாளரான அருட் தந்தை ரொஹான் சில்வாவின் வாக்கு மூலம் சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவினரால் பதிவு செய்யப்பட்டது.
உண்மையில் உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தாக்குதல்களுடன், முன்னாள் இராணுவ உளவுத்துறை பிரதானி துவான் சுரேஷ் சலேவுக்கு தொடர்பிருப்பதாக, செனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை அந்த நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியவர் அன்சீர் அசாத் மெளலானா ஆவார். அவர் பிள்ளையான் எனும் சிவனேசதுறை சந்திரகாந்தனின் பிரத்தியேக மற்றும் ஊடக செயலாளராக இருந்தவர். அத்தோடு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயற் குழு உறுப்பினராகவும் இருந்தவர். அத்தகைய ஒருவர் தனது கட்சியின் தலைவர், அல்லது தனது பிரதானி சார்ந்து வெளியிட்ட ஒரு விடயத்தை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது.
உண்மையில் பிள்ளையான் 2019 ஆம் ஆண்டாகும் போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் விளக்கமறியல் கைதியாக இருந்தார். அவர் அச்சிறையில் இருந்த போது, 2017 மார்ச் மாதம் காத்தான்குடி அலியார் சந்தி மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட, சஹ்ரானின் சகோதரர் சைனி மெளலவி உள்ளிட்ட குழுவினரும் மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டனர். இதன்போதே பிள்ளையானுக்கும் சஹ்ரான் கும்பலுக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
அன்சீர் அசாத் மெளலானா இந்த விடயத்தை செனல் 4 நிகழ்ச்சியில் குறிப்பிடும் நிலையில், பிள்ளையான் எழுதிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனும் புத்தகத்திலும் இது குறித்த சில விடயங்களை அவதானிக்க முடிகின்றது.
அதாவது, சஹ்ரானின் சகோதரர்கள் உள்ளிட்ட குழு அடிப்படைவாதிகள் என்பதை சிறையில் வைத்து பிள்ளையான் அவதானித்ததாகவும் அவர்களுடன் தொடர்பாடலை அவர் ஏற்படுத்திக்கொண்டதாகவும் அன்சீர் அசாத் மெளலானா கூறும் விடயத்தை பிள்ளையானும் தனது புத்தகத்தில் எழுதியுள்ள சில விடயங்கள் ஊடாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையிலேயே இந்த கும்பலை, அப்போது சுரேஷ் சலேவுக்கு அவர் அறிமுகம் செய்து வைத்ததாக அன்சீர் அசாத் மெளலானா கூறுகின்றார்.
உண்மையில் செனல் 4 தொலைக்காட்சியின் வெளிப்படுத்தல் தொடர்பில் ஆராய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்த குழுவின் அறிக்கை, அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவினால் பிரசித்தம் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை ஆராயும் போதும் சில விடயங்களை நாம் அவதானிக்க கூடியதாக உள்ளது.
குறிப்பாக குறித்த இமாம் குழுவின் அறிக்கையில், அந்த விடயத்தில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க போதுமான அதிகாரம் தமக்கு அளிக்கப்படவில்லை எனவும், நபர்களை அழைத்து விசாரிக்க எந்த சட்ட அதிகாரமும் தமக்கு இருக்கவில்லை எனவும் அந்த குழு குறிப்பிட்டுள்ளது. எனினும் அந்த குழுவானது முழு விசாரணைகளிலும் இருவரின் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளது. ஒருவர் முன்னாள் அரச உளவுத்துறை பிரதானி துவான் சுரேஷ் சலே. மற்றையவர் பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்ரகாந்தன். இதிலே பிள்ளையான் அந்த குழுவுக்கு வழங்கியுள்ள வாக்கு மூலத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் மிக முக்கியமானவை.
எவ்வாறாயினும் இந்த ஜனாதிபதி குழுவானது தனது நிலைப்பாட்டை குறிப்பிடும் போது அன்சீர் அசாத் மெளலானாவுக்கு சஹ்ரான் கும்பலுடன் தொடர்பிருந்ததாக தாம் உறுதியாக நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர். அப்படியானால், அன்சீர் அசாத் மெளலானா கூறும் பிள்ளையான், சுரேஷ் சலே விடயங்கள் மிக ஆழமாக விசாரிக்கப்பட வேண்டியவையாகவே கருத வேண்டியுள்ளது.
குறிப்பாக சஹ்ரான் கும்பலை முன்னாள் உளவுத்துறை பிரதானி சுரேஷ் சலேவுக்கு அறிமுகம் செய்து வைத்தது பிள்ளையானே என தெளிவாக அசாத் மெளலானா கூறும் அதே நேரம் இன்னுமொரு விடயத்தையும் அவர் குறிப்பிடுகின்றார். அதாவது 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினம் நடந்த தாக்குதல்களின் போது தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டு வைக்க முயற்சிக்கப்பட்டு தோல்வியடைந்த விடயமே அது.
அதாவது குறித்த ஹோட்டலில் தாக்குதல் நடாத்த ஜெமீல் எனும் தற்கொலை தாரி முயற்சிப்பதும், இதன்போது அவரது கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வருவதும் அதனை அவர் அழைத்து பேசுவதும் சி.ஐ.டி.வி. காணொளிகள் ஊடாக தெரியவந்தது.
அசாத் மெளலானா செனல் 4 தொலைக்காட்சியில் குறிப்பிடும் தகவலுக்கு அமைய, அன்றைய தினம், ஜெமீலால் தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்ய முடியாமல் போகவே தன்னை அங்கு சென்று ஜெமீலை பொறுப்பிலெடுக்குமாறு சுரேஷ் சலே ஆலோசனை வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ஜெமீல், தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்ய முடியாமல் போன பின்னர், நேரடியாக தெஹிவளை பகுதிக்கு சென்று ட்ரொபிகல் இன் எனும் தங்கு விடுதியில் குண்டு பொதியை வைத்துவிட்டு, தெஹிவளை, எபர்னிசா பகுதி பள்ளிவாசலுக்கு செல்கின்றார்.
இந் நடவடிக்கை அசாத் மெளலானாவின் செனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறப்பட்ட விடயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருப்பதற்கான நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. அதாவது, உள்ளக விசாரணைகளின் படி, ஜெமீல் எபர்னிசா பள்ளிவாசலில் இருந்தபோது பிரதேச மக்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் நபர் ஒருவர் வரும் வரை காத்திருப்பதாக கூறியுள்ளார்.
உண்மையில் அக்காலப்பகுதியில், அன்சீர் அசாத் மெளலானாவும் தெஹிவளை பகுதியில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. அதிலும் விஷேடமாக எபர்னிசா பள்ளிவாசலில் இருந்து 2 அல்லது 3 வீடுகள் தாண்டியே அசாத் மெளலானா வசித்த வீடு இருந்ததாக விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படியானால், அசாத் மெளலான, சுரேஷ் சலே ஜெமீலை பொறுப்பேற்குமாறு கூறிய விடயம், சஹ்ரான் கும்பலை சுரேஷ் சலேவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் பிள்ளையானே என்ற விடயம் போன்றன ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டதாக இருப்பதற்கான வாய்ப்புக்களையும், நியாயமான சந்தேகங்களையும் தோற்றுவிக்க வல்லதே.
அதிலும் குறிப்பாக சுரேஷ் சலே, 1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த பின்னர் 1993 ஆம் ஆண்டு இராணுவ உளவுத்துறையின் சிறப்பு அதிகாரியாக இணைக்கப்பட்டுள்ளார். அப்போது முதல் 10 வருடங்கள் வரை அவர் முதல் நியமனமாகவே மட்டக்களப்பிலேயே சேவையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் அவருக்கு அம்மாவட்டத்தில் இருந்த தொடர்புகள் குறித்தும் இந்த விசாரணைகளில் இணைத்து பார்க்கப்படவேண்டும் என விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
இதனிடையே, சுரேஷ் சலே, களனி பல்கலைக் கழகத்தின் பாதுகாப்பு விவகாரத்தில் முதுமானி பட்டம் பெற்றவர். அவர் குறித்த பட்டம் பெற சமர்ப்பித்த ஆய்வறிக்கையானது களனி பல்கலைக் கழகத்தில் சிறந்த ஆய்வறிக்கையாக அப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது தற்கொலை பயங்கரவாதம் எனும் தலைப்பில் அவரது ஆய்வறிக்கை அமைந்திருந்தது.
2012 நவம்பர் முதல் சுரேஷ் சலே இராணுவ உளவுத்துறை பிரதானியாக கடமையாற்றி வந்த நிலையில், 2015 ஆண்டின் பின்னர் அதாவது 2016 நவம்பர் 8 ஆம் திகதி, அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக அவர் சதி செய்வதாக ‘புரவசி பலய’ எனும் அமைப்பு முதன் முதலாக குற்றம் சாட்டியது.
அதன் பின்னர் அவர் இராணுவ புலனாய்வு பிரிவு பிரதானி பதவியில் இருந்து மாற்றப்பட்டு, மலேஷிய தூதரக அதிகாரியாக அனுப்பப்பட்டார். பின்னர் இந்திய தேசிய பாதுகாப்பு கல்லூரியில் கற்கை நெறி ஒன்றுக்காக சென்றார்.
இக்காலப்பகுதியிலேயே இலங்கையில் சட்ட விரோதமான ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முயற்சிக்கப்பட்டு, நீதிமன்ற தலையீட்டால் அது தவிர்க்கப்பட்டது. பின்னரே 2019 ஏப்ரல் 21 இல் தற்கொலை தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.
இவை அனைத்துக்கும் இடையே ஒரு பிணைப்பு இருப்பதாக கூறப்படுகின்றது; சந்தேகிக்கப்படுகின்றது. எனவே தான் அன்சீர் அசாத் மெளலானாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளிப்படுத்தல் குறித்து ஆழமான விசாரணைகள் அவசியமாகின்றது.
இதுவரை உள்ள தகவல்கள் பிரகாரம், இந்த விவகாரத்தில் பிள்ளையான் எனும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் உளவுத்துறை பிரதானி சுரேஷ் சலே ஆகியோர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என எதிர்பார்க்கப்படுகிறது.- Vidivelli