ஏ.எல்.எம். சத்தார்
சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவரை விடுவிப்பது குறித்த விடயமே இப்போது நாட்டில் பேசுபொருளாகவுள்ளது.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்த வழக்கு விசாரணை ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது ஞானசார தேரர் நீதிமன்ற வளவுக்குள் பிரவேசித்து நீதிபதியையும் மன்றத்தையும் அவமதித்த வழக்குத் தீர்ப்பிற்கமையவே இவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
இதன்பேரில் நான்கு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 19 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து அதனை ஆறு வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அத்தண்டனையை ஞானசார தேரர் வெலிக்கடை சிறைச்சாலையில் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையிலே ஞானசாரர் சுகவீனமுற்று சிறைக்கூட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைக் கேள்வியுற்ற முஸ்லிம்களின் குழுவொன்று அவரை சுகம் விசாரிக்கச் சென்றுள்ளது. இக்குழுவில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் முக்கியஸ்தர், தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி உள்ளிட்ட பிரதிநிதி அடங்குகின்றனர். தேரரைப் பார்வையிட்டு வெளியே வந்த இக்குழுவினரைச் சந்தித்த ஊடகவியலாளர் வினவியபோது அஸாத் சாலி உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத்தகவல்கள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகியிருந்தன. இவை சமூகத்தில், குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியிலே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
பெரும்பாலும் பெரும்பான்மைச் சமூகத்தினர் மத்தியிலும் குறிப்பாக தேரர்கள் மத்தியிலும் ஞானசாரதேரரின் விடுதலைக்காக மேற்படி முஸ்லிம் சமூக அமைப்புகளும் பரிந்துரை வழங்கியிருப்பதாகவே பரவலாக நம்பிக்கை வெளியிட்டு வருவதை அறிய முடிகிறது. ஆனால் சம்பந்தப்பட்ட தரப்போ ஞானசாரரின் உடல் நலன் விசாரிக்கவே நாம் சிறைச்சாலை வைத்தியப்பிரிவுக்குச் சென்று வந்தோமேயன்றி அவரது விடுதலை குறித்து எதுவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அஸாத் சாலி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பல்வேறான சந்தேகங்களைக் கிளப்பியுள்ளமையும் மறுப்பதற்கில்லை.
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கும் பொதுபலசேனா அமைப்புக்கும் இடையே நிலவிய கசப்புணர்வைப் போக்கிக்கொள்வதற்காக முஸ்லிம் அமைப்புகள் பொதுபலசேனா அமைப்பினருடன் 5– 6 சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அதன்போது பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுகொண்டு வந்த வேளையிலேயே ஞானசார தேரர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டதாகவும். அதனால் சுமுக பேச்சுவார்த்தை தடைப்பட்டுப் போனதாக அஸாத் சாலி அதன்போது வெளியிட்டிருந்தார்.
மேலும் இப்பேச்சுவார்த்தைகளின் விளைவாகவே காலி கிந்தோட்டை பிரச்சினை மேலும் பரவாது ஞானசார தேரர் தலையிட்டதாகவும் குறிப்பிட்ட அவர் மியன்மார் அகதிகளுக்கெதிராக கடும்போக்காளர் கடுமையாக நடந்து கொண்டபோதும் ஞானசார தேரர் அதனையும் தீர்த்து வைப்பதில் பங்களிப்புச் செய்தார் என்றும் திகன சம்பவத்தின் போதும் மரண வீட்டுக்கு ஞானசார தேரர் சென்று சிங்கள சமூகத்தை அமைதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
எங்களால் மேற்கொள்ளப்பட்ட 5– 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பயனாகவே இவற்றைச் சாதித்தோம் என்றும் பெருமையாக கருத்து வெளியிட்டிருந்தார்.
மேற்படி விடயங்களின் உண்மையான பின்னணிகளை உணர்ந்த எவரும் அஸாத் சாலியின் கூற்றால் ஆவேசமடையவே செய்வர். ஒரு சில முஸ்லிம் அமைப்பினர் அன்று பொதுபலசேனாவுடன் நடத்திய 5– 6 சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போதும் முஸ்லிம் சமூகத்தை விட ஞானசார தேரரே நன்மையடைந்தார் என்பதே உண்மையாகும். அவர் மீது எறியப்பட்ட எத்தனையோ குற்றச்சாட்டுகளில் இருந்தெல்லாம் அவர் தன்னை நெகிழ்வித்துக் கொள்ளவே முனைந்து சிலதை சாதித்துக்கொண்டார். பின்னர் முஸ்லிம்களுக்கு சாதகமாக அமையப்போகும் சூழ்நிலை முன்னேற்றம் கண்டு வரும்போதே அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்தார். இதுவல்லாது அவர் சிறைவாசம் சென்றதால்தான் இப்பேச்சுவார்த்தையில் தடை ஏற்பட்டது என்று கூறுவதற்கில்லை.
இவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் அன்று முஸ்லிம் சமூகத்திற்கு பக்கபலமாக முதுகெலும்பாகக்கூட தலையெடுத்து வந்த பிரபல சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையில் சுறுசுறுப்பாக இயங்கிவந்த ஆர்.ஆர்.ரீ. அமைப்பு தனது செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டமையே மேற்படி பேச்சுவார்த்தையில் எமது சமூகம் அடைந்து கொண்ட பிரதிபலனாகும்.
ஆர்.ஆர்.ரீ. அமைப்பு இலங்கையில் தஞ்சம் புகுந்த மியன்மார் அகதிகளின் உரிமைகளுக்காக வாதாடி அர்ப்பணிப்புச் செய்தமை வரலாறாகும். அதே போன்று ஞானசாரதேரர் உள்ளிட்ட பௌத்த கடும்போக்காளர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு விளைவிக்கப்பட்ட வெறுப்புணர்வு நடவடிக்கைகளைத் திரட்டி இங்கு நீதி கிடைக்காததால் ஜெனீவா மனித உரிமைகள் மாநாடுவரை கொண்டு சென்ற அரும்பணிகளையும் விரைவில் மறந்துவிட முடியாது.
2013– 2017 வரையான காலப்பகுதிகளில் கடும்போக்கு பௌத்த அமைப்புகளால் இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக 300 க்கும் மேற்பட்ட வெறுப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இவை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் பொலிஸாரால தட்டிக்கழிக்கப்பட்டே வந்துள்ளன. இவற்றில் 66 முறைப்பாடுகள் பொலிஸாரால் கவனத்தில் எடுக்கப்படாத நிலையில் ஆர்.ஆர்.ரீ. அமைப்பின் சிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் இவற்றைத் திரட்டி நெறிப்படுத்தி 2017 மார்ச் மாதம் ஜெனீவாவில் மனித உரிமைகள் மாநாடு நடைபெற்றபோது அங்கு சமர்ப்பிக்கச் செய்தனர். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரதிநிதி ரீட்டா ஐசக்கிடம் இதனைக் கையளித்தனர். இதன் விளைவாக இது விடயமாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதுடன் பொறுப்புக்கூற வேண்டிய நிலையும் ஏற்படுத்தப்பட்டது. மேற்படி 66 முறைப்பாடுகளில் 59 ஞானசாரவுக்கு எதிரானவையாகும். எனவே ஆர்.ஆர். ரீ. அமைப்பின் பங்களிப்பு மிகவும் மகத்தானதாகும். அவ்வமைப்பு தொடர்ந்து இயங்கியிருந்தால் இன்று எமது சமூகத்திற்கு ஒரு முதுகெலும்பாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையில் தஞ்சம் புகுந்த மியன்மார் அகதிகள் விடயம், காலி கிந்தோட்டை அசம்பாவிதங்கள், திகன வன்முறைகள் போன்றவற்றைத் தூண்டக்காரண கர்த்தாவாக ஞானசாரதேரரே விளங்கினார் என்பது பரம இரகசியமல்ல. அவரது வெறுப்புப் பிரசாரங்களாலும் ஏற்பாட்டு நடவடிக்கைகளாலுமே வன்முறைகள் வெடித்த நிலையில் அவரால் தான் தீர்த்து வைக்கப்பட்டதாகக் குறிப்பிடுவதில் எத்தகைய உண்மையும் இல்லை. அசம்பவிதங்கள். முஸ்லிம் சமூகம் தீர்த்துக் கட்டப்பட்டமைதான் நடந்தேறியது.
கடந்த காலங்களில் இருந்து ஞானசார தேரரின் நடவடிக்கைகள், செயற்பாடுகள் யாவும் இந்நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும் சவாலாகவுமே அமைந்திருந்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் சுதந்திரத்தையும் இருப்பையும் கேள்விக்குறியாக்கியே வந்தன. இதனால் முஸ்லிம் சமூகம் அமைதியிழந்து, நிம்மதி குலைந்து அவல நிலைக்கே தள்ளப்பட்டிருந்தது. இவரது அமைப்பும் இவ்வமைப்புடன் இணைந்ததான இதர பௌத்த கடும்போக்கு அமைப்புக்களும் நாட்டில் பரவலாக அவ்வப்போது ஆங்காங்கே பேரினவாதத்தின் அடக்கு முறைகளை பல்வேறு வடிவங்களில் முஸ்லிம்கள் மீது திணித்தே வந்துள்ளன.
இவற்றின் மூலம் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்குவதில் வெற்றி கண்டு வந்தனர். அத்துமீறிப் புகுந்து முஸ்லிம்களின் காணிகளை ஆக்கிரமித்து வந்தனர். சிறுபான்மைப் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை நிறுவி அப்பகுதிகளை கபளீகரம் செய்யும் தந்திரங்களிலும் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் சதி நாசகாரங்களுக்கு அரசியல் மட்டத்திலிருந்தும் மறைமுகமாகவும் நேரடியாகவும் உந்துதல் கொடுக்கப்பட்டன. பாதுகாப்புத் தரப்பும் பக்கபலமாக கைகொடுக்கவே செய்தது.
மஹிந்த ராஜபக் ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின்போதே பௌத்த கடும் போக்கு அமைப்புகள் வேகமாக வளர்ந்தன. பொதுபலசேனா அமைப்பு அரசின் அனுசரணையுடன் ஊட்டி வளர்க்கப்பட்டதாகவே பொதுவாக கருத்து நிலவுகிறது. இது அரசியலுக்காக வாக்கு வங்கியை வளர்த்துக் கொள்ளும் நடவடிக்கை என்றே கூறப்பட்டது. இந்நாட்டை தனி பௌத்த இராச்சியமாக்கும் கனவில் பௌத்த கடும் போக்கு அமைப்புகளும் கச்சைகட்டிக் களத்தில் குதித்திருந்தமையாலே சிறுபான்மை யினங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தன. இதுவே அண்மைக்கால தசாப்தங்களில் நாட்டில் இனக்கலவரங்களாக வெடித்துக் கொண்டி ருக்கின்றன. இவற்றின் இன்றையகால கதாநாயகனாக ஞானசார தேரரே விளங்கி வருவது பலருக்கும் வெளிச்சம். 2014 ஜூனில் அளுத்கமையில் பாரிய கலவரமாக வெடித்தது. இது ஞானசார தேரரின் வெறுப்புப் பிரசாரத்தின் பிரதிபலனாகவேதான் உருவெடுத்தது. முதல் நாள் அப்பகுதியில் நடத்திய கூட்டத்தின்போது ‘அபசரணங்’ என்று ஞானசார வெளியிட்ட கருத்துக்களின் பின்னணியிலேதான் அளுத்கம வன்செயல் தலைதூக்கியது.
இதேபோன்று அம்பாறை, காலி, கிந்தோட்டை திகன என்று மிகவும் பாரதூரமாக நடந்தேறிய வன்செயல்களின் பின்னணியில் ஞானசார தேரரின் விசமப் பிரசாரங்களே காரணியாக உள்ளன. படிமுறையான வளர்ச்சியொன்றையே இவரது நடவடிக்கை களில் காணமுடிகிறது.
ஆரம்பத்தில் ஹலால் பிரச்சினையை முன்வைத்தார். அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷவின் தலையீட்டுடன் ஹலால் சான்றிதழை இல்லாமலாக்குவதில் வெற்றிகண்டார். தொடர்ந்து முஸ்லிம் கலாசார உடையில் பர்தாவில் கைவைக்க முனைந்தார். அது கைகூடவில்லை. பின்னர் குர்ஆனில் கூறப்பட்டுள்ள கருத்துகள் இன, மத, வெறுப்புணர்வுகளைத் தூண்டுவதாகக் கூறி குர்ஆனைத் தடைசெய்யும்படி ஒரு போடு போட்டார்.
இவரால் தூண்டப்பட்டு எத்தனையோ பௌத்த கடும்போக்கு அமைப்புகள் தலையெடுத்தன. கடும்போக்கு பிக்குமார்கள் உருவெடுத்தனர். இவற்றால் நாட்டு முஸ்லிம்கள் அனைவரும் பல புறங்களாலும் நசுக்கப்பட்டனர். புனிதபூமி என்ற பெயரிலே தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்டது. அநுராதபுரத்தில் நீண்ட காலமாக இருந்த சியாரம் பொலிஸார் முன்னிலையிலேயே தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது. இப்படி ஏராளமான பள்ளிவாசல்கள் அடிக்கடி கல்லெறிந்தும் தீயால் எரிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டன. இவையெல்லாம் வெறுப்புப் பிரசாரத்தின் பிரதிபலிப்புகள்தான்.
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரர் தலைமையிலான குழுவினர் அங்குள்ள முஸ்லிம்களின் காணிக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்து அச்சுறுத்தலில் ஈடுபட்டார். குறித்த பகுதி பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்குள் நுழைந்து பிரதேச செயலாளர் தெட்சனா கௌரியைப் பெண் என்றும் பாராமல் தூஷண வார்த்தைகள் கூறி ஆட்டம் போட்டதை ஊடகங்கள் சான்று பகர்கின்றன.
ஞானசாரர் தலைமையில் கடும்போக்கு அமைப்பினர் அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரின் அலுவலகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து ஆவேசமாக நடந்துகொண்ட அசிங்கங்களும் அரங்கேறவே செய்தன.
அநுராதபுர மாவட்டத்தில் இப்பலோகம பிரதேசத்தில் தொல்பொருட்கள் அழிந்து நாசமாக்கப்படுகின்றன என்ற போலிக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு பிரதேச செயலாளர் சாஜிதா பானுவுக்கு எதிராக செயற்பட்டமை முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஓரங்கமேயாகும். அண்மையில்தான் அவர் குற்றமற்றவர் என்பதை நீதிமன்றம் நிரூபித்துக் காட்டியுள்ளது. இதுவரை பல மில்லியன் சொத்துக்கள் நாசமானதுடன் பல உயிர்களும் பலியாகியுள்ளன. கண்டி – திகன கலவரத்தில் தாக்கப்பட்ட மௌலவி சதக்கத்துல்லாஹ் கோமா நிலையிலிருந்து இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும்போது அவரது மரணச் செய்தியும் வந்தது. ஞானசார தேரர் முன்னின்று நடத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளால் முஸ்லிம் சமூகம் இவ்வாறு பல முனைத்தாக்குதல்களுக்கும் இலக்காகி வந்தமை கண்கூடு.
இவருக்கு எதிராக முஸ்லிம்களால் முஸ்லிம் அமைப்புக்களால் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டு வழக்குகள் நிலுவையிலுள்ளன. இவர் சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களுடன் சம்பந்தப்பட்ட வழக்கொன்றுக்கல்ல. இவ்விடயத்திலும் முஸ்லிம்களை அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்.
நோயாளியொருவரை சுகம் விசாரிக்கச் செல்வதில் தவறில்லை. இது இஸ்லாமியப் பண்பாகும். ஆனால் இவரால் நாட்டுக்கும் சமூகத்துக்கும் இழைக்கப்பட்டுள்ள அட்டூழியங்களை மூடிமறைத்து மேல் பூச்சு பூசுவது நாட்டையும் சமூகத்தையும் ஏமாற்றுவதற்கொப்பாகும்.
இலங்கையில் வரலாற்றுக் காலத்திலிருந்தே சிங்கள– முஸ்லிம் சமூகங்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளன. அநகாரிக தர்மபால சிங்கள சமூகத்தை எழுச்சி பெறச் செய்வதற்காக சிறுபான்மை இனங்களை எதிரியாகக்காட்டி முன்வைக்கப்பட்ட தவறான நடவடிக்கையாலேயே 1915 இல் வரலாற்றில் முதற் தடவையாக சிங்கள முஸ்லிம் கலவரம் மூண்டது. பாரிய அழிவுகளைக் கண்டது. அந்த நச்சுக் கருத்துகளே படிப்படியாக வளர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான பல வன்முறைகளுக்கு வழிவகுத்தன.
அவர் அடிச்சுவட்டில் 1980/ 90 களில் கங்கொடவில சோம தேரர் தன் சிந்தனை பேச்சுவன்மையால் முஸ்லிம்கள் மீதான விசக் கருத்துகளை முன்வைத்தார். அவரது செயற்பாடுகள் குறுகிய காலத் தில் அவரது திடீர் மரணத்துடன் முற்றுப் பெற்றது. 2000 க்குப் பின்னரே ஞானசார தேரர் தலையெடுத்தார்.
சிறை வாசத்துடன் அவரும் அடங்கியுள்ளார். அவரால் உந்தப்பட்ட இதர கடும் போக்காளர்களும் வாரிச் சுருட்டிக்கொண்டு பெட்டிப் பாம்புகளாக இருப்ப தாலேயே முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை இனங்கள் இப்போது நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டிருக் கின்றனர்.எதிர்காலம் எமது சந்ததியினர் இந்நாட்டில் அச்சமின்றி உரிமையோடு வாழ இன, மத நல்லிணக்கமே இன்றியமையாத தேவையாகும்.
ஓரினத்திற்கு மட்டுமே இந்நாடு சொந்தமென்ற குறுகிய நிலைப்பாடு நாட்டின் அமைதிக்கு பங்கமாகவே அமையும். இதனை உணர்ந்து இன, மத, வெறுப்புணர்வை மறந்து எல்லோரும் ஐக்கியப்பட்டு சமாதானமாக வாழ முனைவது இன்றைய தேவையாகும்..
எனவே, முஸ்லிம் சமூகம், ஞானசார தேரரின் விடயத்தில், வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினைவிதைத்தவன் தினை அறுப்பான் என்ற நிலைப்பாட்.டில் நின்றுமெளனம் காப்பதே இன்றைய நிலையில் புத்திசாலித்தனமாகும்.
-Vidivelli