“எந்தவொரு சமூகத்தினையும் நாம் புறக்கணிக்கமாட்டோம்” – அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதி இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பிமல் பதில்
(றிப்தி அலி)
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான எங்களது அரசாங்கம் எந்தவொரு சமூகத்தினையும் புறக்கணிக்கமாட்டாது என உத்தரவாதமளிப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எங்களுடைய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதி இல்லை என்று மேற்கொள்ளப்படும் விமர்சனம் நியாயமற்றதொன்றாகும் என அவர் குறிப்பிட்டார்.
இது எங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையினை கேவலப்படுத்துவதாகும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
புதிய அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படாமை குறித்து கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து இன, மத வேறுபாடின்றி ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியினை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
இதனால் தான், கல்முனை மற்றும் சம்மாந்துறை தொகுதிகளையும் முழு வட மாகாணத்தினையும் நுவரெலியா மாவட்டத்தினையும் நாங்கள் கைப்பற்றினோம். எங்கள் அரசாங்கம் எந்தவொரு சமூகத்தினையும் புறக்கணிக்காது. இது எங்களுடைய புத்தகத்தில் இல்லை.
மாத்தறை மாவட்ட மக்கள் முதற் தடவையாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவரை இந்த தேர்தலில் தெரிவுசெய்துள்ளனர். அது போன்று கம்பஹா மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எமது கட்சியின் ஊடாக நீண்ட காலத்தின் பின்னர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். எனினும், முஸ்லிம் எவரும் அம்பாறை மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்படவில்லை. இதனால் நாங்கள் தேசியப்பட்டியலில் நியமிக்கவிருத்த எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரை இடைநிறுத்திவிட்டு அம்பாறை மாவட்டத்தினைச் சேர்ந்த ஆதம்பாவாவினை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமித்துள்ளோம்.
இது போன்று இன்னும் பலவற்றினை எமது கட்சி வழங்கவுள்ளது. இன்று (21) வியாழக்கிழமை இதனை பாராளுமன்றத்தில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்றார்.
இதேவேளை, எங்களை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கு கடுகளவேனும் துரோகம் செய்யமாட்டோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்தவர்கள் இருக்கின்றார்களா என்று பார்க்க வேண்டாம். வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகியவற்றில் எமது கட்சி செய்யவுள்ள சேவைகளைப் பாருங்கள் என அவர் குறிப்பிட்டார்.
நாம் அனைவரும் ஒரு குடும்பமாக நாட்டை கட்டியொழுப்புவோம். இனவாதம் என்ற சொல்லிற்கே எமது அரசாங்கத்தில் இடமில்லை என அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.
இந்த அமைச்சரவையில் இன்னும் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட 18 அமைச்சுக்களின் செயலாளர் நியமனத்திலும் எந்தவொரு முஸ்லிம் சிவில் நிர்வாக அதிகாரியும் உள்ளடக்கப்படாத போதிலும் மீதமுள்ள அமைச்சுக்களின் செயலாளர் பதவிகளுக்கு முஸ்லிம் அதிகாரி ஒருவரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.- Vidivelli