ஆட்சியின் பங்குதாரர்களாக முஸ்லிம்களும் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர்
பெரும்பான்மை பலத்துடன் அமையப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகம் பங்காளியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எம்.சுஹைர் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியில் கணிசமான முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களில் பொருத்தமானவர்களுக்கு அமைச்சரவையில் இடம்வழங்கப்படுவதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் முஸ்லிம்களும் பார்வையாளர்களாகவன்றி பங்காளர்களாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
அமைச்சரவையில் இடம் வழங்குவதற்கு பொருத்தமானவர்கள் முஸ்லிம்களில் இல்லை என்று கூற முடியாது. தேசிய மக்கள் சக்தியில் தெரிவானவர்களில் வைத்தியர் பொறியியலாளர் கல்விமான்கள் என பலர் உள்ளனர். அந்த வகையில் முஸ்லிம் சமூக பிரதிநிதி ஒருவருக்கேனும் அமைச்சரவையில் இடமளிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகத்தையும் ஆட்சியின் பங்களார்களாக இணைத்துக் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும்.
இம்முறை தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளால் முஸ்லிம்களும் முஸ்லிம்களின் வாக்குகளால் சிங்களவர்களும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதை தேர்தல் பெறுபேறுகள் தெளிவாகக் காண்பிக்கின்றன. அந்தவகையில் இந்த சாதகமான அரசியல் மாற்றத்தை தொடர்ந்தும் தக்க வைப்பதற்கு முஸ்லிம்களுக்கும் ஆட்சியில் உரிய இடத்தை வழங்குவதே பொருத்தமானதாகும்.
இந்த இடத்தில் மக்கள் விடுதலை முன்னணி இவ்வளவு தூரம் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அன்று வழங்கிய பங்களிப்பை நினைவுபடுத்த வேண்டியது கடமையாகும்.
1988 இல் அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் இணைந்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு பாராளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வெட்டுப்புள்ளியை 12.5% இலிருந்து 5% ஆக குறைப்பதற்கு அஷ்ரப் எடுத்த முயற்சியை மக்கள் விடுதலை முன்னணி மறந்துவிட முடியாது. இது அரசியலமைப்பின் 15 வது திருத்தமாக ஒரே இரவில் நிறைவேற்றப்பட்டது. இதுவே சிறிய கட்சிகளும் பாராளுமன்றம் நுழைவதற்கான கதவுகளைத் திறந்தது. இதன் மூலம் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட குழுக்களும் ஜனநாயக நீரோட்டத்தில் நுழைவதற்கு வழிவகுத்தது. ஜே.வி.பி வன்முறையை கைவிட்டு ஜனநாயக செயல்முறைக்குள் நுழைவதை பிரேமதாச விரும்பியிருந்தார். அந்த வகையில் அன்று அஷ்ரப் எடுத்த முயற்சியின் பலனை மக்கள் விடுதலை முன்னணியும் அனுபவித்துள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது.
இன்று தேசிய மக்கள் சக்தியானது அனைத்து இனக்குழுக்கள், பெரும்பான்மை சிங்களவர்கள், வடக்கு மற்றும் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ளதை பொதுத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. புதிய அமைச்சரவையும், பாராளுமன்ற பெரும்பான்மையும் அனைவரையும் அரவணைத்துச் செல்வதாக அமைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
மூன்று சிறுபான்மை மதங்களின் மத விவகாரங்கள் அந்தந்த மதங்களைச் சேர்ந்த அமைச்சர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும். கடந்த காலங்களைப் போன்று பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் கட்டுப்பாட்டில் ஏனைய மத விவகார அமைச்சுக்கள் இருக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.- Vidivelli