பூக்குளம் மக்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரித்து !
சபீர் மொஹமட்
இந்திய தேர்தல் ஆணைக்குழு “BELIEF IN THE BALLOT” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தது. அந்நூலில் இந்தியாவின் தேர்தல்களில்போது நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் பல எழுதப்பட்டுள்ளன. அதிலே “If We cannot Fly We will Walk” என்ற ஒரு அத்தியாயம் உள்ளது. கடந்த வாரம் தேர்தல் சார்ந்த ஒரு சில கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக புத்தளம் சென்றிருந்தபோது இந்த கதை திரும்பவும் ஞாபகத்திற்கு வந்தது. அதாவது, இந்தியாவின் ஹிமாசல் மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் கடல் மட்டத்திலிருந்து 6000 முதல் 15,000 வரையிலான உயரத்தில் உயர்ந்த மலைகளால் சூழப்பட்ட பிரதேசங்களாகும். இந்த மலைப்பிரதேசங்களில் ஒரு சில பகுதிகளுக்கு செல்ல உரிய போக்குவரத்து வசதிகள் இன்னும் சரியாக இல்லை. ஆனாலும் அங்கே வாழ்பவர்களின் வாக்களிக்கும் உரிமையை எவராலும் மறுத்துவிட முடியாது. அதற்கமைய அங்குள்ள “ரலகுங், பேமா” ஆகிய இரு பிரதேசங்களுக்கும் எத்தனை சிரமங்கள் வந்தாலும் இந்திய தேர்தல் ஆணைக்குழு ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பெட்டிகளையும் அதிகாரிகளையும் அனுப்பி வைப்பார்கள். ஆனால் 2009 மே மாதம் 15 நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது தேர்தல் அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் அங்கே செல்வதற்கு, காலநிலை இடம் கொடுக்கவில்லை. பின்னர் அங்கே செல்ல வேறு வழிகளை தேர்தல் ஆணைக்குழு சிந்திக்கத் தொடங்கியது. மே 12, “இயன்ற அளவு தூரம் வாகனத்தில் சென்று பின் நடந்து செல்வோம்” என தீர்மானிக்கப்பட்டது.
2009 மே 12, வாக்குப்பெட்டிகள் மற்றும் உரிய ஆவணங்களுடன் 12 அதிகாரிகள் தமது பயணத்தை தொடங்கினார்கள். வாகனத்தில் இயலுமான தூரம் சென்று மிகுதி 45 KM தூரத்தை அவர்கள் 48 மணித்தியாலயங்கள் தொடர்ந்து நடந்தே சென்று “ரலகுங்” கிராமத்தை அடைந்தார்கள். அத்தனைக்கும் அவ்விரு கிராமங்களிலும் இருப்பதோ வெறுமனே 37 வாக்காளர்கள் மட்டுமே. பின் 2009 மே 15 எவ்வித தடங்கலும் இன்றி உரிய முறையில் வாக்களிக்கும் நிலையம் நிறுவப்பட்டு தேர்தல் நடாத்தப்பட்டது. இத்தனை சவால்களுக்கும் மத்தியில் தங்களை தேடி தங்களுடைய ஊருக்கே வந்த தேர்தல் அதிகாரிகளுக்கு தக்க சன்மானம் ஒன்றினை அளிக்கும் விதமாக அவ்விரு ஊர்களையும் சேர்ந்த 37 வாக்காளர்களும் தமது வாக்குகளை வழங்கியுள்ளார்கள். ரலகுங் வாக்களிக்கும் நிலையத்தில் அன்றைய வாக்களிக்கும் வீதம் 100% என பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கதையை எனக்கு மீண்டும் ஞாபகப்படுத்திய மற்றைய சம்பவம் புத்தளம் தேர்தல் மாவட்டத்தின் வனாத்தவில்லு தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட பூக்குளம் கிராம மக்களும் புத்தளம் மாவட்டம் தேர்தல் அதிகாரிகளும் ஆகும். பூக்குளம் என்பது, புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் எல்லையில் காணப்படுகின்ற ஒரு மீன்பிடி கிராமம். புத்தளத்திலிருந்து பூக்குளம் செல்வதாயின் வனாத்தவில்லு தாண்டி வில்பத்துவ சரணாலயத்தின் நுழைவாயிலுக்கு சென்று அங்கிருந்து சுமார் மூன்று மணித்தியாலயங்கள் நடக்க வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கான வாகனம் தவிர வேறு எந்தவொரு போக்குவரத்தும் அங்கே இல்லை. அடுத்து மன்னார் ஊடாக அனுராதபுரம் சென்று புத்தளம் வருவது. பெரும்பாலும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வாக்களிப்பதற்காக அவ்வாறே அம்மக்கள் வனாத்தவில்லு சென்றுள்ளார்கள்.
“எங்கள் இருப்பினை உறுதிப்படுத்துகின்ற ஒரே விடயம் வாக்களிப்பது மட்டுமே. ஆகவே இயன்ற அளவு நாங்கள் தேர்தல் தினத்தில் இங்கே வந்து வாக்களிப்போம்” பூங்குலம் மீன்பிடிக்கிராமத்தை சேர்த்த ஜெயசீலன் இவ்வாறு கூறினார். மேலும் ஜெயசீலன் கூறுகையில், இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 50 குடும்பங்கள் அளவில் உள்ளன. 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் இதைவிட அதிகமானவர்கள் இங்கே இருந்த போதிலும் யுத்தம் காரணமாக கல்பிட்டி பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் நாங்கள் எமது பழைய இடங்களுக்கு குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள வந்த போது வன ஜீவராசிகள் திணைக்களம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனென்றால் நாங்கள் இங்கிருந்து சென்ற பின்னர் எமது ஊரையும் சேர்த்து சரணாலயம் என கெசட் செய்துள்ளார்களாம். எமக்கு மீன்பிடி தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. அவ்வாறிருக்க நாங்கள் வேறு இடங்களுக்கு சென்று எவ்வாறு வாழ்வது ?
பூங்குளம் கிராமத்தில் இடிந்த நிலையில் ஒரு பாடசாலையும் ஊர் மக்களுக்கு கடவுளை வழிபடுவதற்கு ஒரு ஆலயமும் உள்ளது. மேலும் வீடமைப்பு திட்டம் ஒன்றினூடாக வழங்கப்பட்ட 20 வீடுகள் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டன. ஏனென்றால் காட்டு யானைகளின் தொல்லை மற்றும் நீர் மின்சாரம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. தங்களுடைய பிள்ளைகள் கல்பிடிய பிரதேசத்தில் தங்கி படிக்கின்றார்கள், என ஊர் மக்கள் கூறினார்கள்.
“கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது அதோ அந்த ஆலயத்தில் வாக்களிக்கும் நிலையம் ஒன்று நிறுவப்பட்டது. தேர்தலுக்கு முன் தினம், கடற்படை, போலீஸ், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உட்பட 20 பேரளவில் இங்கே வந்து தங்கினார்கள். அவர்கள் உண்மையிலேயே மிகவும் சிரமப்பட்டார்கள். வில்பத்துவ சரணாலயத்தின் ஊடாக வாக்குப் பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இங்கே கொண்டுவரப்பட்டது. பின்னர் நாங்கள் 80 பேரளவில் அன்றைய தினம் வாக்களித்தோம். வந்திருந்த அதிகாரிகள் எங்களைப் பார்த்து – ‘நாங்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் இங்கே உங்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக வந்துள்ளோம். எனவே எப்படியாவது வந்து வாக்களியுங்கள்’ என்றார்கள்.
எந்தவொரு அரசியல்வாதியும் இந்த கிராமத்திற்கு வந்ததே இல்லை. எவரும் இனிமேல் வரப்போவதும் இல்லை. ஆனாலும் வாக்களிப்பது அவர்களுடைய உரிமை என்பதை மட்டும் இவர்கள் நன்கு அறிந்துள்ளார்கள். மேலும் இவர்களுடைய குடியுரிமையை பாதுகாக்கின்ற ஒரே விடயமாக இன்று காணப்படுவது இந்த தேர்தலில் வாக்களிப்பதாகும். தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட விறுப்பு வாக்குகள் வழங்குதல் குறித்த தெளிவுகள் இல்லாவிட்டாலும் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் ஊர் மக்கள் அனைவரும் மிகத் தெளிவாக உள்ளார்கள்.
“அவர்களுக்கு வர முடியாவிட்டால், நாங்கள் அவர்களிடம் செல்வோம் என்கிறது இலங்கை தேர்தல்கள் திணைகளம்”
இந்த பூக்குளம் கிராமம் பற்றி புத்தளம் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் லக்ஷித ஜயநாயகவிடம் நாங்கள் வினவினோம். “புத்தளம் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் காணப்படுகின்ற பூக்குளம் கிராமம்தான் எமக்கு இருக்கின்ற சவால் மிகுந்த வாக்கெடுப்பு நிலையம். ஒரு சாராருக்கு அங்கே வாக்கெடுப்பு நிலையமொன்றை நிறுவுவதில் அவ்வளவு திருப்தி இல்லை, மறு சாரார் எப்படியாவது அங்கே வாக்கெடுப்பு நிலையம் ஒன்றை நிறுவ வேண்டும் என உறுதியாக உள்ளார்கள். அதேபோல் அக்கிராமத்தை சேர்ந்து வாக்காளர்களும் மிகவும் விருப்பத்துடன் வாக்களிப்பதில் ஈடுபடுகின்றார்கள். சில இளம் தேர்தல் அதிகாரிகள் பூக்குளம் போன்ற சவால் மிகுந்த பிரதேசங்களுக்கு தேர்தல் கடமைகளுக்காக செல்ல ஆர்வமாக உள்ளார்கள். எனவே எவ்வித தடைகளும் இன்றி நாங்கள் அக்கிராமத்தில் வாக்கெடுப்பு நிலையமொன்றை நிறுவினோம். காலநிலை தவிர்ந்த ஏனைய அத்தனை சவால்களையும் நாங்கள் வெற்றிகரமாக முகம் கொடுத்து பூக்குளம் கிராம மக்களின் வாக்குகளை கடந்த மூன்று தேர்தல்களிலும் பெற்றுக் கொண்டோம். ஆனால் இம்முறை, தொடர்மழை காரணமாக வில்பத்துவ சரணாலயத்திற்கு உள்ளே ஒரு சில இடங்கள் நீரில் மூழ்கக்கூடும். அப்போது வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல முடியாமல் போய்விடலாம். எனவே முன்னாயத்தமாக நாங்கள் கடல் வழியாக கடற் படையின் உதவியுடன் அவற்றை அங்கே கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை நாங்கள் இம்முறை மேற்கொண்டுள்ளோம்” என தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் உயிரை பணயமாக வைத்து 37 வாக்காளர்களுக்காக 48 KM தூரத்தை நடந்து கடக்கின்ற இந்திய தேர்தல் அதிகாரிகளைப் போல் 80 வாக்காளர்களுக்காக வில்பத்துவ சரணாலயத்தின் ஊடாக வனவிலங்குகள் மற்றும் ஏனைய ஆபத்துக்களையும் தாண்டி முன் தினம் சென்று வாக்களிக்கும் நிலையத்தை நிறுவி வாக்குகளை சேகரித்து வருகின்ற இலங்கையின் தேர்தல் அதிகாரிகளும் இருக்கும் வரை இவ்விரு நாடுகளிலும் ஜனநாயகம் எம்போதும் பாதுகாக்கப்படும்.-Vidivelli