(எம்.எம்.மின்ஹாஜ்)
கண்டி மாவட்டத்தின் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாது செய்வதற்கான சூழ்ச்சி மிகவும் உக்கிரமடைந்துள்ளது. இதனடிப்படையில் திட்டமிட்டு முஸ்லிம் மக்களின் வாக்குகள் சிதறடிக்க முயற்சிக்கப்படுவதாக கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
நேற்று கடுகஸ்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
கண்டி மாவட்டம் 1952 முதல் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துவந்துள்ளது. அப்பிரதிநிதித்துவம் ஹாரிஸ்பதுவ, கம்பளை மற்றும் உடுநுவர பகுதியில் வாழும் முஸ்லிம் மக்களின் ஆதரவுடனேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பிரதேசங்கள் 1960 களுக்கு முன்பு ஒரே தொகுதியாக இருந்துள்ளது. தொகுதிகள் மீள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு பிரிக்கப்பட்ட பிறகும் ஹாரிஸ்பதுவ தொகுதி தொடர்ச்சியாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள உதவியிருக்கிறது. விகிதாசார தேர்தல்முறையின் கீழ் முழு கண்டி மாவட்டத்தில் வசிக்கும் மக்களும் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க பாடுபட்டுள்ளனர்.
எனினும், கடந்த 2 தசாப்தங்களாக முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தேசியக் கட்சிகளிலிருந்து முஸ்லிம்களை ஓரங்கட்டும் நடவடிக்கைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளன. பலமான முஸ்லிம் அரசியல்வாதிகள் தலைதூக்குவதை பேரினவாத சக்திகள் இடமளிப்பதில்லை.
இப்போது, பதவி ஆசை, சோரம் போதல் மற்றும் டீல் அரசியல்வாதிகள் அதிகரித்துள்ளனர். இது அந்த பேரினவாத சக்திகளுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. எனவே, முஸ்லிம்கள் காலாகாலமாக பாதுகாத்துவரும் பாராளுமன்ற அதிகாரத்தை பறித்தெடுக்க முயற்சிக்கின்றனர். முஸ்லிம்களை அரசியல் ரீதியில் அநாதையாக்கும் திட்டமே அரங்கேற்றப்படுகிறது.
குறிப்பாக, மாகாண சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் மிகக் குறைவாக அமைந்திருந்தது. இதற்கு காரணம் அதிகமான முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்கி வாக்குகளை பிரித்தமையாகும். அத்தோடு, கண்டி மாவட்டத்திற்கு வெளியே இருந்துகொண்டுவரப்பட்ட அரசியல்வாதியொருவர் இங்கு களமிறக்கப்பட்டு குழப்பமான நிலை தோற்றுவிக்கப்பட்டது. பேரினவாதத்தின் இந்த சதியை மக்கள் புரிந்துகொள்ளாமல் அவருக்கு அதிக வாக்குகளை அளித்து உள்ளூர் தலைவர்களை புறக்கணிக்கச் செய்யும் நிலை உருவாக்கப்பட்டது.
இதற்கும் மேலதிகமாக தகைமை அல்லாதவர்களை அரசியலுக்கு கொண்டுவந்து முஸ்லிம் சமூகத்தை வெறும் பகடைகாயாக பயன்படுத்தும் திட்டம் அரங்கேற்றப்பட்டன.
இந்த அரசியலை இன்று தேசிய மக்கள் சக்தியும் செய்வதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனைய கட்சிகள் கடந்த காலங்களில் செய்ததை இன்று தேசிய மக்கள் சக்தி கண்டியில் செய்கிறது. கண்டி மாவட்டத்தில் அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம் வேட்பாளர்களின் தகைமை வெறும் வியாபாரமாகும். முஸ்லிம்களை கறிவேப்பிள்ளையாக பயன்படுத்தப்பார்க்கின்றனர்.
இதனிடையே, ஒவ்வொரு தேர்தல்களிலும் சுயேட்சையாக சில ஏஜெண்டுகள் களமிறக்கப்படுவர். வெகுமதிகள் அடிப்படையில் அவர்கள் முஸ்லிம்களின் வாக்குகளை பிரிப்பதற்கான கொந்துராத்துகளை எடுத்து தேர்தலில் களமிறங்குவது அண்மைக்காலமாக கண்டியில் வாடிக்கையாகிவிட்டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் ராஜபக்சாக்களின் ஏஜெண்டாக அக்குறணை பிரதேச சபையில் களமிறங்கியவர்கள், 2020 பொதுத் தேர்தலிலும் சுயேட்சையாக களமிறங்கியிருந்தனர். முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை பறித்தெடுக்கும் சூழ்ச்சியின் உச்சக்கட்டமாக எமது சமூகத்திலிருந்து சில புல்லுருவிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடாவார்கள்.
இதனிடையே, கண்டி முஸ்லிம்களின் அதிகாரத்தை தக்க வைக்கும் ஒரு பிரதேச சபையாக அக்குறணை பிரதேச சபை இருக்கின்றது. கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக இந்த சபை ராஜபக்சாக்களின் அதிகாரத்துக்குச் செல்வதற்கு பின்கதவால் உதவியவர்கள் பற்றி நான் புதிதாக மக்களுக்கு சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இப்படி, தொடர்ச்சியாக கண்டி மாவட்ட முஸ்லிம்களின் அரசியல் அதிகாரத்தை இல்லாது செய்ய பல வகையிலும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகின்றது. கடந்த காலங்களில் கண்டி முஸ்லிம்கள் இதற்கு தக்க பதிலடி வழங்கியிருந்தனர். இந்த சூழ்ச்சிகளை இம்முறையும் மக்கள் இலகுவாக முறியடிக்க தீர்மானித்துவிட்டனர் என்றும் ஹலீம் மேலும் தெரிவித்தார்.- Vidivelli