ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ்தான் முஸ்லிம்களுக்கு பேரம்பேசும் சக்தி கிடைக்கும்
சிறுபான்மையினரே அரசியலமைப்பு குறித்து தீர்மானிக்க வேண்டும் என்கிறார் ஹக்கீம்
(எம்.எம்.மின்ஹாஜ்)
ஜனாதிபதி ஆட்சி முறைமையின் கீழ்தான், நாட்டில் முஸ்லிம்களுக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், எனவே, அரசியலமைப்பு சீர்திருத்தம் குறித்து சிறுபான்மை மக்கள் தீர்மானத்திற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், இப்போதைய ஜனாதிபதி நிறைய வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறார். ஆனால், இன்றுள்ள சூழ்நிலையில் அந்த வாக்குறுதிகளை எவ்வாறு அவர் நிறைவேற்றப் போகிறார்? என்றும் கேள்வியெழுப்பினார்.
“நியாயத்தின் குரல்” என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கடந்த 30 ஆண்டு காலத்தில் இலங்கை பாராளுமன்றத்தில் ஆற்றிய நூல்களின் வெளியீட்டு விழா நேற்றுமுன்தினம் கண்டி, எஸ்.சேனாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
நான்கு பாகங்களாக வெளிவந்திருக்கும் எனது பாராளுமன்ற உரைகள் அடங்கிய நூலில் பாராளுமன்றத்தில் நான் ஆற்றிய முக்கிய உரைகள், பல தரப்பட்ட விவாதங்களின் போது ஆற்றிய உரைகள், அனுதாபப் பிரேரணைகளில் ஆற்றிய உரைகள், பாராளுமன்றத்திற்கு வெளியிலும் மறைந்த முக்கிய ஆளுமைகளுக்கும் அந்தந்த கட்சிகளின் அழைப்பின் பேரில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உரைகள் நிகழ்த்தியிருக்கின்றேன்.
சுனாமி அனர்த்தத்தைத் தொடர்ந்து உதவி வழங்கும் நாடுகள் ஒரு மாநாட்டின் ஊடாக சுனாமிக்கு பிந்திய செயற்பாட்டு கட்டமைப்பு (PTOMSபொறிமுறை நோர்வேயுடைய ஏற்பாட்டில் நடைபெற்றது. வெளிநாட்டிலிருந்து வரக்கூடிய நிதி உதவி சம்பந்தமாக அதில் ஆராயப்பட்டபோது அரசு மற்றும் விடுதலைப் புலிகள் என்பன மட்டுமே உள்வாங்கப் பட்டிருந்தன.முஸ்லிம்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டிருந்தார்கள். அதனை நான் எதிர்த்தேன். வன்மையாக எதிர்த்ததனால் அது சாத்தியமாகவில்லை.
இப்போதைய ஜனாதிபதி நிறைய வாக்குறுதி வழங்கி இருக்கிறார்.ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அந்த வாக்குறுதிகளை எவ்வாறு அவர் நிறைவேற்றப் போகிறார் ?
முஸ்லிம்களை பொறுத்தவரையில் இந்த நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையில் பேரம் பேசக்கூடிய தன்மை இருப்பதன் காரணமாக சிறுபான்மை சமூகங்கள் அரசியலமைப்பு சீர்திருத்தம் பற்றி தீர்மானிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கின்றோம் என்றார்.- Vidivelli