இன முரண்பாடுகளையும் குரோதங்களையும் தோற்றுவிக்க முன்னெடுக்கப்பட்ட சதி விரிவான விசாரணை கோரி வைத்தியர் ஷாபி முறைப்பாடு
சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் மனு கையளிப்பு
( எப்.அய்னா)
இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கவும், குரோதத்தை பரப்பவும் திட்டமிட்டு சதி செய்து போலியான கதை ஒன்றினை கட்டி, தன்னை கைது செய்து இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில், வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் சார்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு கடந்த 7 ஆம் திகதி சென்ற, குருநாகல் வைத்தியசாலையின் மகப்பேற்று பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், அமைச்சின் செயலாளரிடம் இது தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாட்டினை ஒப்படைத்தார்.
2019 மே 23 ஆம் திகதி திவயின பத்திரிகையில் வெளியான செய்தியை மையப்படுத்தி, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன முன்னெடுத்த பிரசாரத்துக்கு எதிராக 2019 மே 24 ஆம் திகதி எழுத்து மூலம் குருநாகல் பொலிஸ் நிலையம் செல்ல தயாரான போது, குறித்த சதியின் ஒரு அங்கமாக தான் கைது செய்யப்பட்டதாக வைத்தியர் ஷாபி அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இந்த இனவாத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் சதி நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகத்தில், தற்போதைய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத், தற்போதைய பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த திசாநாயக்க, அப்போதைய குருநாகல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்குமாறு அம்முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
இதனைவிட கட்டாய கருத்தடை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு குழந்தை கிடைத்த விடயத்தை மறைத்து வழக்கை முன் கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் திலகரத்ன, சமூக கொள்கை விசாரணைப் பிரிவின் விசாரணை அதிகாரி மொஹான் வீரகோன் உள்ளிட்டோருக்கு எதிராகவும் விசாரணை நடத்துமாறு இம்முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சதியின் பங்குதாரர்களாக கருதப்படும் குருநாகல் போதனா வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் வீரபண்டார, முன்னாள் பிரதிப் பணிப்பாளர் கெந்த்தன்கமுவ உள்ளிட்டோருக்கு எதிராகவும், இது தொடர்பில் பொலிஸ் தலைமையக பொது முறைப்பாட்டு பிரிவுக்கு முன் வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்குமாறும் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கோரியுள்ளார்.
இந்த சதியுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை விசாரணைகளில் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அவர் இம்முறைப்பாடு ஊடாக கோரியுள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் தாய்மாருக்கு சட்ட விரோதமாக கருத்தடை செய்ததாக குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் மகப்பேற்று வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை, அவ்வழக்கிலிருந்து முற்றாக விடுதலை செய்து குருநாகல் நீதிவான் நீதிமன்றம் கடந்த 6 ஆம் திகதி உத்தரவிட்டது.
வைத்தியர் ஷாபிக்கு எதிரான பி 1398/19 எனும் வழக்கை முன் கொண்டு செல்ல போதிய சான்றுகள் இன்மையால், அவ்வழக்கை இனி மேல் முன் கொண்டு செல்லப் போவதில்லை என சட்ட மா அதிபர் எழுத்து மூலம் குருநாகல் நீதிவான் பந்துல குணரத்னவுக்கு அறிவித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே வைத்தியர் ஷாபி, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இந்த சிறப்பு முறைப்பாட்டை அளித்துள்ளார்.- Vidivelli