ஏ.எச்.எம். இர்பான் நஹ்ஜி
மீராவோடை
இலங்கையின் 17ஆவது பாராளுமன்ற தேர்தல் (குடியரசின் 10ஆவது தேர்தல்) இன்ஷா அழ்ழாஹ் எதிர் வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் காலம் நெருங்கிவர களம் மிக சூடாகி கொந்திளித்துக் கொண்டிருக்கிறது.
சூடான பிரசாரங்களும் அதை விட மிகச் சூடான வாதப் பிரதிவாதங்களும் களத்திலும் சமூக வலைத்தளங்களிளும் கொந்தளித்துக் கொண்டிருக்க அரசியல் குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாடும் தேர்தல் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதும் என்ன…?
இந்தக் கட்டுரையில் சுருக்கமாக அலசுவோம்…
அரசியல் சாக்கடையா…?
அரசியல் ஒரு சாக்கடை. அதற்குள் நல்லவர்கள் புகமாட்டார்கள். நல்லவர்கள் களத்திற்கு வந்தால் அவர்களும் நாறிப் போய் சாக்கடையாகிவிடுவார்கள் என்ற நிலைப்பாடு எம்மில் பலரிடமிருக்கிறது.
ஆனால், இஸ்லாம் ஒரு போதும் அரசியலை ஒதுக்கி வைத்ததில்லை. ஓரமாக நின்று கொண்டு ஒய்யாரமாக வாழ்ந்துவிட்டுப் போய்விடச் சொல்லவுமில்லை.
“நீங்கள் மூன்று பேர் இருந்தால் அதில் ஒருவரைத் தலைவராக்கிக் கொள்ளுங்கள்!” என்று பயணத்தில் இருப்பவர்களைப் பார்த்து நபியவர்கள் கூறியிருப்பது எந்த நிலையிலும் தலைமையும் கூட்டமைப்பும் இருக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.
“மஹ்ஷரில் நிழலே இல்லாத உஷ்ணம் நிறைந்த திறந்த பெரு வெளியில் ஏழு சாராருக்கு அழ்ழாஹ் தன்னுடைய அர்ஷின் கீழ் நிழல் கொடுத்து கௌரவிப்பான். அவற்றுள் முதலாமவராக நீதமான தலைவர் இருக்கிறார்”
மேற்கண்ட நபி மொழிகளினது கருத்துக்களிலிருந்து அரசியல் தலைமைகளை புறந்தள்ளி பொருள் கோடல் செய்ய முடியாது. மாறாக அரச அதிகாரம் என்பது மிகப் பெரும் அமானிதம். அது உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இல்லாத பட்சத்தில் மிகப் பெரும் கைசேதமாகவும் அழிவாகவும் மாறும்.
“நிச்சயமாக அழ்ழாஹ் அமானிதங்களை (பொறுப்புக்களை) அதற்குரியவர்களிடம் ஒப்படைத்துவிடுமாறு கட்டளையிடுகின்றான்.” (அந்நிஸா: 58)
“நீங்கள் ஒவ்வொருவரும் மேய்ப்பாளர்கள். உங்கள் பொறுப்பு பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஓர் அரச தலைவன் தனது குடிமக்கள் விசயத்தில் பொறுப்பாளன். அவன் அது பற்றி விசாரிக்கப்படுவான்…” என்று நீளமான ஹதீஸ் ஒன்று தொடர்கிறது.
“தகுதி இல்லாத ஒருவரிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டால் மறுமையை எதிர் பாருங்கள்” (புகாரி) இன்னுமொரு நபி மொழி தகுதி தராதரம் இல்லாதவர்களிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டால் அது உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் என்று எச்சரித்து செல்கிறது.
தலைமைப் பொறுப்பின் அவசியத்தையும் கனதியையும் மேற்போந்த வஹிச் செய்திகளின் வழியாகப்; புரிந்து கொள்ள முடியும்.
இன்னும் சொல்லப் போனால் நீதமான தலைவராக இருந்தால் அழ்ழாஹ்வின் விஷேட கௌரவத்திற்குரியவர்களாகவும் தலைமைகள் இருப்பர்.
“என்னை பூமியின் கருவூலங்களுக்கு பொறுப்பாக்குங்கள்! நான் பாதுகாப்பவனாகவும் (அது தொடர்பில்) அறிவுள்ளவனாகவும் இருக்கின்றேன்” (யூஸுப்:55) என்று நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தனக்கு நிதி அமைச்சுப் பொறுப்புத் தாருங்கள் என்று முஸ்லிம் அல்லாத அந்நிய நாட்டு மன்னனிடம் கேட்ட செய்தி இது.
நபி ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அழ்ழாஹ்விடம் இப்படி பிரார்த்தனை செய்தார்கள் என்று அல்குர்ஆன் பதிவு செய்கிறது.
“எனது ரப்பே! என்னை மன்னித்துவிடுவாயாக! மேலும் எனக்குப் பிறகு வேறு எவருக்கும் வழங்காத ஓர் ஆட்சி அதிகாரத்தை வழங்குவாயாக!” (ஸாத்: 35)
“எங்கள் ரப்பே! எங்கள் துணையிலிருந்தும் சந்ததியிலிருந்தும் கண் குளிர்ச்சியை தந்தருள்வாயாக! மேலும் எங்களை தக்வா உள்ள மக்களுக்கு தலைவர்களாக்குவாயாக!” (அல்புர்கான்: 74)
குறித்த அல்குர்ஆன் வசனங்கள் தங்களுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்க வேண்டுமென்று இறைத்தூதர்கள் செய்த பிரார்த்தனையை பதிவு செய்கிறன.
ஆக, அல்குர்ஆன் – அஸ்ஸுன்னாவின் பார்வையில் ஆட்சி அதிகாரத்தை வேண்டி நிற்பதும் அது கிடைக்கப் பிரார்த்திப்பதும் பிழையானதல்ல. மாறாக சில பல சந்தர்ப்பங்களில் வேண்டப்பட வேண்டிய ஒன்றாக மாறிவிடுகிறது.
இலங்கை போன்ற, முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில் முஸ்லிம்கள் அரசியலில் பங்களிப்புச் செய்யாமல் ஒதுங்கி ஓரமாக இருப்பது ஆரோக்கியமானதல்ல. எம் சமூகத்தை நோக்கி வரும் பெரும் சவால்களை ஓரளவேனும் குறைக்க சமூகம் சார்ந்த ஓர்மையான தலைமைகளை உருவாக்குவது இன்றியமையாதது. காலத்தின் கட்டாயமானது.
எத்தகையவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்:
“என் அருமைத் தந்தையே! இவரை எங்கள் வேலைகளுக்கு பொறுப்பாளராக கூலிக்கு அமர்த்துங்கள். நிச்சயமாக அவர் பலசாலியாகவும் நாணயமிக்கவராகவும் இருக்கிறார்” ஷுஐய் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைக் குறிப்பிட்டு சொன்னதாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
“பனூ இஸ்ராயீல் சமூகத்தவர்களுக்கு அவர்களது நபி, நிச்சயமாக அழ்ழாஹ் உங்களுக்கு தாலூத் என்பவரை அரசராக அனுப்பியுள்ளான் என்று கூறினார். அவருக்கு எப்படி ஆட்சி கிடைக்க முடியும்! நாம்தானே ஆட்சிக்கு மிகத் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றோம். அவர் பெரும் செல்வந்தராகவும் இல்லையே என்று அந்த பனூ இஸ்ராயீல் சமூகத்தவர்கள் கூறினர். அதற்கு அந்த நபி அழ்ழாஹ்தான் அவரை ஆட்சியாளராக தேர்வு செய்துள்ளான். விசாலமான அறிவையும் உடல் பலத்தையும் அவன் அவருக்கு வழங்கியிருக்கின்றான்” (பகரா:247)
ஒரு முறை அபூ தர் ரழியாழ்ழாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் அவர்களிடம் வந்து ஒரு பிரதேசத்திற்கு தன்னை கவர்னராக நியமிக்குமாறு வேண்டினார்கள். அப்போது நபியவர்கள்: “நீர் பலயீனமானவர். இது ஓர் அமானிதம். முறையாக நிறைவேற்றாவிட்டால் மறுமையில் அது இழிவாகவும் கைசேதமாகவும் வந்து சேரும்” என்று கூறி பொறுப்புக் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.
நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் தன்னை அரச கருவூலங்களுக்கு பொறுப்பாளராக நியமியுங்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு நான் தகுதியானவன் என்பதை “அவற்றைப் பாதுகாப்பவனாகவும் அது பற்றிய அறிவுள்ளவனாகவும் இருக்கின்றேன்” என்று குறிப்பிடுகின்றார்கள்.
தொகுத்து நோக்கின் அதிகாரத்தை வேண்டி நிற்பவர் அறிவு, நம்பிக்கi நாணயம், சவால்களை எதிர் கொள்ளும் உடல் பலம், துணிச்சல் போன்ற ஆளுமைப் பண்புகளைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.
அவர் பெரும் செல்வந்தராக இருக்க வேண்டும் என்றோ, பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவராக இருக்க வேண்டுமென்றோ இன்னும் நம்மில் சிலர் தப்புக்கணக்கு போட்டிருக்கும் தகுதி தராதரம் பெற்றவராக இருக்க வேண்டுமென்றோ எந்த அவசியமும் கிடையாது. மாறாக, பிறரின் அரட்டல் மிரட்டலுக்கு அடிபணியாத, தற்துணிவோடு முடிவெடுக்கும் தைரியமும் அறிவாளுமையுள்ள, அமானிதங்களை சரியாக நிறைவேற்றுகின்ற பண்புகளைக் கொண்டவர்ளைத்தான் நாம் எமது அரசியல் தலைமைகளாக தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும் என்பது வஹியின் வழிகாட்டலாகும்.
இப்போது எல்லோருக்கும் இடியப்பச் சிக்கல் கேள்வி எழும். நாம் வாழும் இந்தச் சூழலில் வாக்கு கேட்டு வரும் எவரும் பிரஸ்தாப தகுதிக்குள் இல்லையே! என்ன செய்வது? உண்மையில் எல்லாத் தகுதியும் உள்ள ஒருவரை தேடிப்பிடிப்பது சிரமசாத்தியமானதுதான். வாக்கு கேட்டு வருபவர்கள் மலக்குகள் அல்ல மனிதர்கள்தான். அவர்கள் தப்புத் தவறுகளுக்கு அப்பாற்பட்டவரல்லர் என்ற யதார்த்தத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
‘இரண்டு தீங்குகளுள் குறைந்தளவான தீங்கை எடுத்துக் கொள்ளல்’ என்ற இஸ்லாமிய சட்டக் கலை விதிக்குட்பட்டு கெட்டவர்களுள் நல்லவரை (குறைந்த அளவு தப்புச் செய்பவரை) நாம் தேர்வு செய்யலாம்.
தான் பயணம் செய்த கப்பலுக்கு துளையிட்டு முழுக் கப்பலையும் அநியாயக்கார அரசனிடமிருந்து பாதுகாத்துக் கொடுத்த கிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சம்பவத்தை கஹ்ஃப் என்ற அல்குர்ஆன் அத்தியாயத்தில் படித்திருக்கின்றோம். இது நாம் மேற்குறிப்பிட்ட விதியின்பாற்பட்டதுதான்.
வாக்களிப்பது அவரவர் விருப்புத் தேர்வுக்குட்பட்டதா?
எனது வாக்கு விரும்பினால் அளிப்பேன் இல்லாவிட்டால் தவிர்ப்பேன் என்ற நிலைப்பட்டில் எம்மில் சிலர் உளர். இது பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன…?
வாக்களிப்பதை இஸ்லாமிய அறிஞர்கள் ‘ஷஹாதா’ சாட்சி சொல்லுதல் என்றே குறிப்பிடுகின்றனர். ஷஹாதா இஸ்லாமிய நோக்கில் எவ்வாறு அனுகப்படுகிறது?
“நீங்கள் (சாட்சியாளர்கள்) உங்கள் சாட்சியை நீதமாக நிறைவேற்றுங்கள்” (அத்தலாக்: 02)
“அவர்கள் தங்கள் சாட்சியங்களை நீதமாக நிறைவேற்றுவார்கள்” (அல்மஆரிஜ்: 33)
அல்பகரா அத்தியாயத்தின் 282 மற்றும் 283ம் வசனங்களில் “நீங்கள் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டால் மறுக்க வேண்டாம்!, நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம்! அப்படி யார் மறைக்கின்றாரோ அது பாவமான காரியமாகும்.”
சாட்சியம் சொல்லுவது மார்க்கக் கடமை. புறக்கணிப்பது பெரும் குற்றம். அதிகாரத்தை வேண்டி நிற்கும் வேட்பாளர்களுள் தேவையான ஆளுமைப் பண்புகளையுடையவர்களுக்கு அல்லது ஓரளவேனும் தகுதியானவருக்கு வாக்களிப்பதுதான் உண்மையான சாட்சியம். புறம்பானவர்களுக்கு வாக்களிப்பது பொய்ச் சாட்சியம். அது பெரும் பாவம்.
பொய்ச் சாட்சியம் குறித்து இஸ்லாத்தின் எச்சரிக்கை என்ன?
“சிலை வணக்கத்தையும் பொய்ச் சாட்சியத்தையும் தவிர்ந்து கொள்ளுங்கள்!”(அல்ஹஜ்: 30)
ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: பெரும் பாவங்கள் பற்றி உங்களுக்கு கூறட்டுமா என மூன்று முறை கேட்டுவிட்டு சொன்னார்கள். “அழ்ழாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரை நோவினை செய்வது, பொய்ச் சாட்சியம் கூறுவது” பொய்ச் சாட்சியம் கூறுவது என்ற வார்த்தையை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் மௌனமாகமாட்டார்களா என்று நாங்கள் (எங்களுக்குள்) கூறிக் கொள்ளும் வரை திரும்பத் திரும்ப கூறிக் கொண்டே இருந்தார்கள். (முஸ்லிம்)
பொய்ச் சாட்சியம் எவ்வளவு பெரிய பாவமோ உண்மை சாட்சியம் சொல்லாது மறுப்பதும் மறைப்பதும் அந்தளவு பெரும் குற்றமே என்பது இஸ்லாமிய அறிஞர்களின் நிலைப்பாடு.
முடிவாக…
தனது வாக்கு வங்கி சரிந்து விடக் கூடாது என்பதற்காக அந்தந்த ஊர் அரசியல் தலைமைகள், வேட்பாளர்கள் வேறு ஊர் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை ஊரைக் காட்டிக் கொடுக்கும் பெரும் குற்றமாக பிரசாரம் செய்வர். இது ஒரு ஜாஹிலிய்ய சிந்தனை மட்டுமல் பிர்அவ்னிய சிந்தனையும் கூட.
“நிச்சயமாக பிர்அவ்ன் பூமியில் அழிச்சாட்டியம் செய்து ஆணவத்தோடு அலைந்து திரிந்தான். தனது நாட்டு மக்களை பல குழுக்களாக பிரித்து அவர்களில் ஒரு சாராரை பலவீனப்படுத்தினான்.” (அல்கஸஸ்: 04)
குழுக்களாக பிரித்து பிரிவினைவாதத்தை ஊட்டி வளர்ப்பது பிர்அவ்னிய சிந்தனை.
நபிகளாரின் வஃபாத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நான்கு கலீபாக்களும் மக்காவாசிகளல்ல. மதீனாவில் ஆட்சித் தலைமை தேர்ந்தெடுக்கப்படுகிறது. மதீனாவாசிகள் தங்கள் ஊரவன்தான் ஆட்சிக்கு வர வேண்டுமென்று அடம்பிடிக்காமல் பொருத்தமான, தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.
நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர். அவர் எகிப்திய ஆட்சியாளரால் அந்நாட்டின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட செய்தியை அல்குர்ஆன் பிரஸ்தாபிக்கிறது.
தவிர, ஆட்சியாளராக அல்லதுஅரசியல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவர் எப்படி நடந்து கொள்வார் என்பதையும் பின்வரும் அல்குர்ஆன் வசனம் தெளிவு படுத்துகிறது.
“நாம் அவர்களுக்கு பூமியில் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் அவர்கள் தொழுகையை நிறை வேற்றுவார்கள், ஸகாத் என்னும் ஏழை வரியை வழங்குவார்கள், நன்மையை ஏவி தீமையை தடுப்பார்கள்” (அல்ஹஜ்: 41) என்ற அல்குர்ஆன் வசனம் அதிகாரம் கிடைத்ததன் பிற்பாடு தலைவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற வழிகாட்டல்களை வழங்குகிறது.
ஆனால் நாம் காணும் அரசியல் தலைமைகள் என்ன செய்கிறார்கள் என்பது கண்கூடு. குறிப்பாக பிரித்தாளும் தன்மையோடும் இனவாதம் மற்றும் ஊர், பிரதேசவாதங்களை ஊட்டி வளர்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
இஸ்லாமியக் கடமைகள் முறையாக நிறைவேற்றப்பட்டு, வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்ய ஸகாத்தை முறையாக நிறைவேற்றி, நன்மையை ஏவி தீமையை தடுத்து நல்லதொரு சூழல் உருவாக்கப் பாடுபடுவராக அரச தலைவர் இருக்க வேண்டும். அப்படியொரு தலைவர் கிடைக்கப் பாடுபடுவதும் பிரார்த்திப்பதும் எமது கடமை.- Vidivelli