பொதுத் தேர்தல் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இன்று நள்ளிரவுடன் பிரசார பணிகள் நிறைவடைகின்றன.
பெரும்பாலானவர்கள் தாம் யாருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானித்திருப்பார்கள். மேலும் சிலர் அடுத்து வரும் நாட்களில் தீர்மானிப்பார்கள். எப்படியிருப்பினும் தங்களது மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களில் மிகப் பொருத்தமானவர்கள் யார் என்பதை நன்கு ஆராய்ந்து நாம் வாக்குகளை அளித்தல் வேண்டும்.
இவ்வாறு தீர்மானத்தை மேற்கொள்ளும்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் வழங்கிய பின்வரும் வழிகாட்டல்களையும் கவனத்தில் கொள்வது சிறந்ததாகும்.
அரசியலை ஓர் உயர் சமூகப் பணியாகக் கருதி செயற்படுபவர்களாக எமது தெரிவுக்குரியவர்கள் அமைதல் வேண்டும், நாட்டை நேசிக்கின்ற சமூகப்பற்றுள்ள, பிரதேசத்தைக் கட்டியெழுப்பும் உணர்வும் வல்லமையும் கொண்டவர்களுக்கே எமது வாக்குகள் அளிக்கப்படல் வேண்டும் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும், இன, மத பேதங்களைத் தூண்டும் வகையில் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்காதோருக்கும், நன்னடத்தையும் நல்லொழுக்கமும் உடையவர்களுக்குமே எமது வாக்குகள் அளிக்கப்படல் வேண்டும், நாட்டுச் சட்டங்களை மீறாத, வன்முறைகளில் ஈடுபடாத வேட்பாளர்களைத் தெரிவிற்கு உட்படுத்தல் வேண்டும், மாற்று அரசியல் கட்சிகளையும் வேட்பாளர்களையும் மதிக்கின்ற,பண்பாடாக நடந்துகொள்கின்ற,வேட்பாளர்களே எமது தெரிவுக்குரியோர் ஆவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி வழிகாட்டல்களை அனைவரும் கவனத்திற் கொள்தல் சிறந்ததாகும்.
நாம் தெரிவு செய்யப்போகும் பிரதிநிதி எந்த கட்சியை சேர்ந்தவராகவும் இருக்கலாம். ஆனால் அவர் மேற்போந்த விடயங்களுடன் பொருந்திப் போகிறாரா என்பதை நாம் நன்கு ஆராய்ந்த பின்னரே வாக்களிப்பது பற்றிய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். மாறாக அற்ப சலுகைகளுக்காக, தனிப்பட்ட நலன்களுக்காக, பணம் போன்ற கையூட்டுகளுக்காக நாம் எமது வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.
உலமா சபை தனது வழிகாட்டலில் குறிப்பிட்டுள்ளது போல, தேர்தலில் வாக்களித்தல் என்பது இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ‘ஷபாஅத்’ எனும் சிபாரிசு செய்தலும் ‘வகாலத்’ எனும் பொறுப்புச் சாட்டலுமாகும். இவையனைத்துக்கும் மேலாக தேர்தலில் வாக்களிப்பது என்பது மார்க்கத்தின் பார்வையில் ‘ஷஹாதத்’ எனும் சாட்சி சொல்லலாகும். அது பொய்ச் சாட்சியமாக அமைந்து விடாமல் மெய்ச்சாட்சியமாக அமைய வேண்டும் என்பது இன்றியமையாதது.
அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தின் குரலாக விளங்கக் கூடிய, ஊழல் மோசடிகளுக்கு துணைபோகாத, சமூகத்தை தலைகுனிய வைக்காது கௌரவத்தை பெற்றுத் தரக்கூடிய பிரதிநிதிகளையே நாம் பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். மாறாக, கடந்த காலங்களில் சமூக விவகாரங்களில் அக்கறை செலுத்தாத, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட, இனவாத கட்சிகளுக்கு சோரம் போன, கடத்தல்களில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதாகவும் நமது தீர்மனங்கள் அமைதல் வேண்டும்.
இதற்கப்பால், மக்களை தேர்தல் தினத்தன்று வாக்களிப்பில் ஆர்வம் காட்டுவதையும் நாம் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிக்கும் வீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை அவ்வப்பிரதேச சிவில் சமூக நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும். சில பகுதிகள் காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இது மழை காலம் என்பதால் மக்கள் வாக்களிக்கச் செல்லாது விடவும் வாய்ப்புள்ளது. அவ்வாறான பகுதிகளில் மக்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை சிவில் அமைப்புகள் முன்வந்து செய்வதும் சிறந்ததாகும்.
அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தினதும் நாட்டினதும் நலன்களை பாதுகாக்க கூடிய வேட்பாளர்களை எமது பிரதிநிதிகளாக தெரிவு செய்வோம். அதன்மூலம் நாட்டிற்கும் சமூகத்திற்குமான நமது பங்களிப்பை சரிவரச் செய்வோம் இன்ஷா அல்லாஹ்.- Vidivelli